பவுசு போனாலும் மவுசு குறையாத இந்தியாவின் சூப்பர் ஸ்டார்கள்!

Written By:

ஷோரூமிலிருந்து இறக்கி, நாளைக்கு விற்பனை செய்தாலும், அந்த புது வாகனத்தின் மதிப்பு தடாலடியாக குறைந்துவிடும். ஆனால், நாம் இந்த பட்டியலில் பார்க்கப் போகும் வாகனங்கள் விற்பனையில் இல்லாவிட்டாலும், வாகன பிரியர்கள் மத்தியில் மவுசு அதிகம் உள்ளவை.

படையப்பாவில் ரஜினியை பார்த்து நீலாம்பரியாக வரும் ரம்யா கிருஷ்ணன், "வயசானாலும் , உன் ஸ்டைல் இன்னும் மாறலை," என்று சொல்லுவாரே, அதே வசனம் இந்த வாகனங்களுக்கும் பொருந்தும். ஆம், இந்த வாகனங்களுக்கு வயது கூட, கூட மவுசும் அதிகரித்து வருகிறது. வாருங்கள், அந்த இந்தியாவின் சூப்பர் ஸ்டார் மாடல்களை காணலாம்.

 01. வில்லிஸ் ஜீப்

01. வில்லிஸ் ஜீப்

இன்றும் ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் வில்லிஸ் ஜீப்புக்கு தனி மரியாதை உள்ளது. புனரமைத்து ஆஃப்ரோடு சாகங்களில் விட்டால், இன்றைய மாடர்ன் ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்கள் கூட தன்னை பார்த்து கூச்சப்படும். மிக குறைவான விலையில் வாங்கி புனரமைத்து பயன்படுத்தப்படுகிறது. நல்ல கண்டிஷனில் உள்ள வில்லிஸ் ஜீப் ரூ.3 லட்சம் வரை விலை போகிறது.

02. கான்டெஸ்ஸா

02. கான்டெஸ்ஸா

அம்பாசடர் புகழ் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொகுசு மாடல்தான் கான்டெஸ்ஸா. பல கோடீஸ்வரர்களின் வீடுகளின் மதிப்பையும், மரியாதையையும் கூட்டிய மாடல் இது. அதுமட்டுமன்றி, அவர்களது பயணங்களையும் அந்தளவு சிறப்பானதாக வைத்திருந்தது. பார்ப்பதற்கு அமெரிக்காவின் பழைய மஸில் கார் போல காட்சியளிக்கும் இந்த காரை சிலர் தங்களது அரிய வகை சேகரிப்பில் வைத்து மதிப்பு சேர்த்து வருகின்றனர்.

Picture credit: D'Costa's Contessas/Wiki Commons

03. ஃபியட் பிரிமியர் பத்மினி

03. ஃபியட் பிரிமியர் பத்மினி

டாக்டர்களின் கார் என்ற பெருமை இதற்கு உண்டு. அம்பாசடரை விட தோற்றத்தில் சிறப்பானதாகவும், கூடுதல் வசதிகளுடனும் விற்பனை செய்யப்பட்டதால், தனி மதிப்புடன் இருந்தது. இன்றைக்கும் சிலர் இந்த பிரிமியர் பத்மினியை பொக்கிஷமாக வைத்து பராமரித்து வருவது பற்றிய செய்திகளை அவ்வப்போது படிக்க முடியும். அவர்களிடம் சில லட்சங்களை கொடுத்து கேட்டாலும், இந்த காரை தர மறுத்துவிடுவதே இதன் மவுச்சுக்கு சாட்சி.

Picture credit: luc106/Wiki Commons

04. மாருதி ஜிப்ஸி

04. மாருதி ஜிப்ஸி

ஆஃப் ரோடு பிரியர்களின் சிறந்த சாய்ஸாக இன்றைக்கும் வலம் வருகிறது. எந்தவொரு சாலை நிலையையும் எளிதாக எதிர்கொள்ளும் தகவமைப்புகள் கொண்ட இந்த ஜிப்ஸிக்கு ஆஃப்ரோடு பிரியர்களிடம் அதிக கிராக்கி உள்ளது. நல்ல கண்டிஷனில் உள்ள ஜிப்ஸி ரூ.2.5 லட்சம் வரை விலை போகிறது.

05. ஸ்கோடா ஆக்டாவியா ஆர்எஸ்

05. ஸ்கோடா ஆக்டாவியா ஆர்எஸ்

பழைய ஆக்டாவியாவிற்கு இன்றைக்கும் ரசிகர்கள் உண்டு. இதன் ரகத்தில் மிகவும் மாடர்ன் டிசைன் அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் வந்ததால், கோடீஸ்வரர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் தனி மதிப்பை பெற்றது. ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ஓடிய ஆக்டாவியா ஆர்எஸ் மாடல் ரூ.2.50 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகிறது.

Picture credit: Thomas doerfer/Wiki Commons

 06. யமஹா ஆர்டி350

06. யமஹா ஆர்டி350

ஒரு காலத்தில் ஸ்ட்ரீட் ரேஸர்கள் மத்தியில் பிரபலமான மாடலாக இருந்தது. 2 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்த இந்த மோட்டார்சைக்கிளுக்கு பைக் ஆர்வலர்கள் மத்தியில் இப்போதும் நல்ல மவுசு இருக்கிறது. நல்ல பராமரிப்பில் உள்ல யமஹா ஆர்எஸ் ஒரு லட்ச ரூபாய் வரை விலை போகிறது.

07. யமஹா ஆர்எக்ஸ்100

07. யமஹா ஆர்எக்ஸ்100

யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கை தெரியாத பைக் பிரியர்கள் இருக்க முடியாது. டிசைன், செயல்திறன், கையாளுமையில் மிக ஜோரான மாடல். இதை ஓட்டிய அனுபவத்தில் கூற வேண்டுமெனில், அவ்வளவு சிறப்பான கையாளுமையையும், இலகுவான உணர்வையும் வழங்கும். அந்த அலாதி சப்தத்திற்கு அடிமையாக இருந்ததும் நினைவுக்கு வருகிறது. செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இன்றைக்கும் இந்த பைக்கை வாங்குவது கடினம் என்பதோடு, விலையும் அதிகம். அதே வரிசையில் வந்த யமஹா ஆர்எக்ஸ்135 மாடலும் அதே அளவு சிறப்பான மாடாலக இருந்தது.

Picture credit: Capt. Das

08. ராயல் என்ஃபீல்டு ஸ்டான்டர்டு 350/500

08. ராயல் என்ஃபீல்டு ஸ்டான்டர்டு 350/500

ஓட்டுபவருக்கு கம்பீரத்தை தருவதில் ராயல் என்ஃபீல்டு புல்லட் வாடிக்கையாளர்களின் முன்னே நிற்கிறது. சரியான விலை, கம்பீரமான தோற்றம், அலாதியான சைலென்சர் சப்தம் போன்றவை தற்போது ஸ்திரமான மார்க்கெட்டையும் பாரம்பரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை ஆட்டோமொபைல் துறையில், அம்பாசடர் காரும், புல்லட் பைக்கும் சாகா வரம் பெற்ற மாடல்களாக புகழப்படுகிறது. அதாவது, எத்தனை ஆண்டுகள் பழமையானாலும், புனரமைத்து புதிது போல் மாற்றி விட முடியும். குறிப்பாக, ராயல் என்ஃபீல்டு ஸ்டான்டர்டு 350 மாடலின் காஸ்ட் எஞ்சின் மட்டும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் விலை போகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

09. யெஸ்டி

09. யெஸ்டி

வித்தியாசமான இதன் செலென்சர் சப்தம் பல நட்சத்திரங்களையும், கோடீஸ்வரர்களையும் சுண்டி இழுத்தது. இன்றும் அதிக ரசிகர்கள் கொண்ட பாரம்பரிய மோட்டார்சைக்கிளாக விளங்குகிறது. இதன் விசேஷ அம்சம், இதன் கிக் ஸ்டார்ட் லிவரை திருப்பிப் போட்டு கியர் ஷிஃப்ட்டாக பயன்படுத்த வேண்டும். இந்த தொழில்நுட்ப வசதி பலரையும் மெய் சிலிர்க்க வைக்கும். தற்போது நல்ல கண்டிஷனில் உள்ள யெஸ்டி மோட்டார்சைக்கிளை வாங்குவதற்கு ஒரு லட்ச ரூபாய் இருந்தால்தான் பேச முடியும்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Let's take a look at 9 used vehicles that still have a good resale value in India.
Story first published: Monday, March 7, 2016, 17:05 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark