எளிமைக்கு பெயர் போன ரத்தன் டாடாவிடம் இப்படியொரு சொகுசு காரா!! மும்பை சாலையில் மாஸ் காட்டி இருக்காரு...
எளிமையாக வாழ்வது எப்போதுமே நன்மை பயக்கக்கூடிய பண்பு என்று சொன்னால் அதில் மிகையில்லை. அதுவே செல்வம் மிகுந்த பணக்காரர்களும், தொழிலதிபர்களும் அவ்வளவு பணம் இருந்தும் எளிமையாக வாழ்வது சிரமமான காரியமாகும். இதனாலேயே எளிமையாக வாழும் சில தொழிலதிபர்களும், செல்வந்தர்களும் மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிகின்றனர்.
அத்தகைய தொழிலதிபர்களுள் ஒருவர் தான் டாடா சன்ஸ் குழுமத்தின் நிறுவனரும், முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா அவர்கள். 85 வயதான இவரது போட்டோக்களை பார்க்க இணையத்தில் தேடினீர்கள் என்றால், டாடா நானோ காரில் இவர் அமர்ந்திருப்பது போன்றதான புகைப்படங்கள் தான் முதலாவதாக கிடைக்கும். அந்த அளவிற்கு மக்கள் பலருக்கு ஏற்ற தயாரிப்புகளை கொண்டுவருவதையே விரும்பக்கூடியவர்.

அதேநேரம், ரத்தன் டாடா தொழிலதிபர் என்பதையும், ஆட்டோமொபைல் வாகனங்களை மிகவும் விரும்பக்கூடிய நபர் என்பதையும் மறந்துவிட வேண்டாம். ரத்தன் டாடாவிடம் சில சொகுசு கார்களும் இருக்கின்றன. இருப்பினும் அத்தகைய சொகுசு கார்களில் பெரிதாக இவர் காட்சி தந்தது இல்லை. இதனால் சொகுசு கார் ஒன்றில் ரத்தன் டாடாவை காண்பதே அரிதான விஷயம் ஆகும்.
அத்தகைய அரிதான நிகழ்வாக, மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்.எல்500 கார் ஒன்றை மும்பை கடற்கரை சாலையில் ரத்தன் டாடா ஓட்டும் அரிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோவாக விளங்கும் அதனை கீழே காணலாம். 2010 அந்த காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோவாக இருப்பதால், வீடியோவில் ரத்தன் டாடா கொஞ்சம் இளமையாக தெரிகிறார்.
மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்.எல்500 ஆனது கன்வெர்டபிள் கார் ஆகும். அதாவது இந்த காரின் மேற்கூரையை தேவைக்கேற்ப மடக்கியும், நீட்டியும் கொள்ளலாம். இதைவிட முக்கியம், 2 கதவுகளை மட்டுமே கொண்ட இந்த பென்ஸ் கார் ரத்தன் டாடாவிடம் இடதுப்பக்க ஸ்டேரிங் உடன் உள்ளது. இதனால் இந்த கார் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது கிடையாது. இடதுபக்க டிரைவ் கொண்ட வெளிநாடு ஒன்றில் விற்கப்பட்ட கார் ஆகும்.
வெளிநாட்டில் வாங்கி அதன்பின் இந்தியாவிற்கு ரத்தன் டாடா கொண்டுவந்திருப்பார். இவ்வாறு இந்தியாவில் பயன்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் காருக்கு செலவிடப்படும் தொகை மிக அதிகமாக இருக்கும். எந்த அளவிற்கு என்றால், காரின் விலையை காட்டிலும் 2-3 மடங்கு கூட அதிகமாக செலவிட வேண்டியிருக்கலாம். உதாரணத்திற்கு, வெளிநாட்டில் ஒரு காரை ரூ.50 லட்சம் மதிப்பில் வாங்கினீர்கள் என்றால், அதனை இந்தியாவிற்கு கொண்டுவர ரூ.1.5 கோடி வரையில் கூட செலவாகலாம்.

ஏனெனில், காரை கப்பலிலோ அல்லது விமானத்திலோ கொண்டுவருவதற்கு குறிப்பிட்ட தொகை கட்டணமாக செலவாகும். அதன்பின் மத்திய அரசு காருக்கு அதிகப்படியான இறக்குமதி வரியை விதிக்கும். நமது இந்தியா மட்டுமல்ல, எந்தவொரு நாட்டு அரசும் இவ்வாறான முறையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அதிக வரியை விதிப்பது வழக்கமான ஒன்றே. இதனாலேயே இவ்வாறான செயல்களை பணக்காரர்கள் மட்டுமே செய்கின்றனர்.
சில்வர் நிறத்தில் வீடியோவில் காட்சியளிக்கும் இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்.எல்500 காரில் 5.0 லிட்டர் வி8 என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 306 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் எஸ்.எல் 500 காரை 1989இல் இருந்து தயாரித்து வந்தது. ஆரம்பத்தில் 500 எஸ்.எல் என அழைக்கப்பட்டு வந்த இந்த காரின் பெயர் 1993இல் எஸ்.எல்500 என மாற்றப்பட்டது. அதன்பின் இந்த காரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.


Click it and Unblock the Notifications








