நவம்பர் 27 முதல் அதிரடி... இனி இந்த ஊருக்குள் எலெக்ட்ரிக், சிஎன்ஜி வாகனங்கள் மட்டுமே நுழைய முடியும்!
காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தலைநகர் டெல்லியில் தற்போது காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. இந்த பிரச்னையை குறைப்பதற்காக தற்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது அதிரடியான உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி வரும் நவம்பர் 27ம் தேதியில் இருந்து டெல்லி நகருக்குள் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் மட்டுமே நுழைய முடியும்.

வரும் டிசம்பர் 3ம் தேதி வரை, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், ''அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள வாகனங்களை தவிர, லாரி போன்ற மற்ற வாகனங்கள் வெளியே இருந்து டெல்லிக்கு வருவது தடை செய்யப்படுகிறது.

வரும் நவம்பர் 27ம் தேதியில் இருந்து எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கு மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும். மற்ற அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் வரும் டிசம்பர் 3ம் தேதி வரை தடை செய்யப்படும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சிறப்பு சிஎன்ஜி பேருந்துகளை இயக்குவதற்கு முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை கையை மீறி சென்று கொண்டிருப்பதால், கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவேதான் தற்போது இந்த அதிரடியான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களும் காற்று மாசுபாடு பிரச்னைக்கு முக்கியமான காரணமாக உள்ளன.

எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் தற்போது புதிதாக பதிவு செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது.

இதற்கு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன. இதுதவிர பொதுமக்கள் மத்தியிலும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து கொண்டே வருகிறது. அத்துடன் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதாலும் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை நாட தொடங்கியுள்ளனர்.

முன்பெல்லாம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்த தொடங்கியுள்ளது. இதுவும் ரேஞ்ச் பற்றிய கவலையில்லாமல் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை தைரியாக வாங்குவதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

வரும் காலங்களில் பெட்ரோல் பங்க்குகளிலும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கு முக்கியமான எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. எனவே சார்ஜிங் ஸ்டேஷன் பற்றாக்குறை என்ற பிரச்னை கூடிய விரைவில் களையப்படும் என நாம் எதிர்பார்க்கலாம். அப்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை இன்னும் உயரும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








