ஒரே நாள்ல இத்தன வண்டிய தூக்கீட்டாங்களா! டிடிஎஃப் வாசன் வகையறாக்களை ஸ்கெட்ச் போட்டு காலி பண்ணும் போலீஸ்!
இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை (Road Accidents) மிகவும் அதிகமாக உள்ளது. பொது சாலைகளில் விதிமுறைகளை மீறி செய்யப்படும் பைக் ஸ்டண்ட்களும் (Bike Stunts) இதற்கு ஒரு காரணம். எனவே பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்போது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கேரள காவல் துறை மற்றும் மோட்டார் வாகன துறை ஆகிய 2 துறைகளும் ஒன்றிணைந்து தற்போது அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளன. 'ஆபரேஷன் பைக் ஸ்டண்ட்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில் மொத்தம் 35 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 30 பேரின் டிரைவிங் லைசென்ஸ்கள் (Driving Licence) ரத்து செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு சுமார் 3.60 லட்ச ரூபாய் அபராதமாக (Fine) விதிக்கப்பட்டுள்ளது. பைக் ஸ்டண்ட்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், ஒரே நாளில் (கடந்த சனிக்கிழமை) இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறை மற்றும் மோட்டார் வாகன துறை அதிகாரிகள் கூறுகையில், ''சாலையில் பயணம் செய்பவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பைக் ஸ்டண்ட்களில் பலர் ஈடுபடுவதாக எங்களுக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன. அதன் பேரில் இந்த அதிரடி நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

அபாயகரமான ஸ்டண்ட்களை செய்து, அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். இது போன்ற விதிமுறை மீறல்களில் சிறார்கள் ஈடுபட்டால், அவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நாங்கள் அறிவித்து கொள்கிறோம்.
பைக் ஸ்டண்ட் தவிர, வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்து பயன்படுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றனர். காவல் துறை மற்றும் மோட்டார் வாகன துறை அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக கேரள மாநிலத்தில் பைக் ஸ்டண்ட்கள் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். இதன் மூலம் சாலையில் மனித உயிர்கள் பரிதாபமாக பலியாவது குறைக்கப்படும். உங்களுக்கு பைக் ஸ்டண்களில் ஆர்வம் இருந்தால், விதிமுறைகளை பின்பற்றி, தனியார் இடங்களில் மேற்கொள்ளுங்கள். அப்போது ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
அதை விடுத்து விட்டு பொது சாலைகளில் மற்றவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் பைக் ஸ்டண்ட்கள் செய்யப்படுவதை ஏற்று கொள்ள முடியாது. பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் (TTF Vasan), சமீபத்தில் பைக் ஸ்டண்ட் செய்ய போய் விபத்தில் சிக்கினார். இது போன்ற சிக்கல்களில் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், விதிமுறைகளை பின்பற்றி பைக் ஓட்டுங்கள்.


Click it and Unblock the Notifications