இந்தியன் இரயில்வேயின் புத்தாண்டு பரிசு... ஸ்டேஷனில் வந்து நின்றாச்சு! இனி தினந்தோறும் பார்க்கலாம்!!
புத்தாண்டு (New Year) துவங்கிவிட்டாலே பரிசு பொருட்கள் குவிய ஆரம்பித்துவிடும். மக்களுக்கு மட்டுமில்லை, அரசாங்கங்களுக்கும் தான். புதிய ஆண்டில் இருந்து துவங்கும் பல அரசாங்க திட்டங்களை ஒவ்வொரு வருடமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், இந்த வருடத்தை கேரள அரசாங்கம் புதிய வந்தே பாரத் (Vande Bharat) இரயில் உடன் துவங்கியுள்ளது. இதன் மூலமாக கேரளாவில் இயங்கும் வந்தே பாரத் இரயிலின் நீளம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
மத்திய அரசின் சமீப கால வெற்றிக்கரமான திட்டங்களுள் ஒன்றாக வந்தே பாரத் இரயில் சேவையை சொல்லலாம். முற்றிலுமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வந்தே பாரத் இரயில்களின் அதிவேகமான பயணம் தான் அவற்றின் சிறப்பம்சம் ஆகும். அதற்கேற்ப அவை குறைந்த எடையில் உருவாக்கப்படுகின்றன.

இதன் காரணமாகவே வந்தே பாரத் இரயில்களை நாட்டின் ஒவ்வொரு வழித்தடத்திலும் கொண்டுவரும் பணியில் இந்தியன் இரயில்வே செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் விதத்தில் வந்தே பாரத் இரயில் சேவை கொண்டுவரப்பட்டு விட்டது. நம் சென்னையில் இருந்து கோயம்புத்தூர், திருநெல்வேலி, விஜயவாடா மற்றும் பெங்களூரு வழியாக மைசூரு என 4 வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில்கள் தற்சமயம் இயக்கப்படுகின்றன.
ஆனால், கேரளாவில் முதல் வந்தே பாரத் இரயில் சேவை ஆனது 2023 ஏப்ரல் மாதத்தில்தான் கொண்டுவரப்பட்டது. 2023 ஏப்ரல் 12ஆம் தேதி காசர்கோடு வரையிலான கேரளாவின் முதல் வந்தே பாரத் இரயில் சேவையை தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் மோடி கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த வழித்தடத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த வந்தே பாரத் இரயில் வேறொரு நீளமான வந்தே பாரத் இரயிலினால் மாற்றப்படுகிறது.

வந்தே பாரத் இரயில்கள் வழித்தடத்தை பொறுத்து பல்வேறு விதமான நீளங்களில் உருவாக்கி பயன்படுத்தப்படுகின்றன. வெறும் 8 பெட்டிகளை மட்டுமே கொண்ட வந்தே பாரத் இரயில்களில் இருந்து 16-பெட்டி மற்றும் 20-பெட்டி வந்தே பாரத் இரயில்களும் பயன்பாட்டில் உள்ளன. திருவனந்தபுரம்- காசர்கோடு வழித்தடத்தில் முன்பு இருந்தது 16 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் இரயில் ஆகும்.
அது தற்போது 20 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் இரயிலாக மாற்றப்பட்டுள்ளது. 16-பெட்டி வந்தே பாரத் இரயில் வெள்ளை மற்றும் நீல நிறம் கலந்த நிலையில் இருந்த நிலையில், புதிய 20-பெட்டி வந்தே பாரத் இரயில் ஆரஞ்சு-கிரே-வெள்ளை நிறங்கள் கலந்த கலவையாக உள்ளது. இதன் மூலமாக, கேரளாவில் மற்றுமொரு ஆரஞ்சு நிறத்திலான வந்தே பாரத் இரயில் நுழைந்துள்ளது.

புத்தாண்டுக்கு பரிசு அனுப்புவதுபோல், புதிய ஆண்டு துவங்கிய இந்த நன்னாளில் திருவனந்தபுரத்துக்கு புதிய வந்தே பாரத் இரயிலை இந்தியன் இரயில்வே அனுப்பி வைத்துள்ளது. ஆலப்புழா வழித்தடத்தில் இயங்கும் 8-பெட்டி வந்தே பாரத் இரயிலுக்கு மாற்றாக புதிய 20-பெட்டி வந்தே பாரத் இரயிலை மக்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம்- காசர்கோடு இடையேயான 586கிமீ தொலைவை 8 மணிநேரத்தில் கடந்துவிடும் வந்தே பாரத் இரயில் இடையில் 8 நிறுத்தங்களில் நின்று செல்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பழைய 16-பெட்டி வந்தே பாரத் இரயில் கேரளாவில் வேறொரு வழித்தடத்தில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 20-பெட்டி இரயில் வந்துவிட்டதால், பழைய 16-பெட்டி இரயில் எந்த வழித்தடத்தில் பயன்படுத்தப்படும் என்பது விரைவில் தெரிந்துவிடும். கேரளாவில் அடுத்ததாக 10 வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில்களை கொண்டுவர இந்தியன் இரயில்வே திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









