கொத்து கொத்தா தூக்கறாங்க... அதிகாரிகளின் வேட்டை தீவிரம்... நடுக்கத்தில் பழைய வாகனங்களின் உரிமையாளர்கள்
பழைய வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் கார்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் கார்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடையை மீறி பலர் பழைய வாகனங்களை தொடர்ந்து இயக்கி கொண்டுதான் உள்ளனர்.

இதனால் காற்று மாசுபடுவதால், பழைய வாகனங்களுக்கு எதிராக டெல்லி போக்குவரத்து துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக டெல்லியில் சமீபத்தில் 1,754 பழைய வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் கார்கள், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் கார்கள் அடங்கும்.

இது கடந்த நவம்பர் 16 மற்றும் டிசம்பர் 6 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை ஆகும். இதே காலகட்டத்தில் 749 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,417 வாகனங்களின் மீது அரசு தரப்பில் அதிரடியாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

நாங்கள் ஏற்கனவே கூறியபடி டெல்லி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய தேசிய தலைநகர் பிராந்தியத்தில், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய பெட்ரோல் வாகனங்களையும் இயக்க முடியாது. இந்த வாகனங்களை இயக்குவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தடை விதித்துள்ளன.

ஆனால் இதில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய டீசல் வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய டீசல் வாகனங்களை, எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றி கொண்டால், தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தொடர்ந்து இயக்கலாம்.

டெல்லி மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சரான கைலாஷ் கெலாட் வெகு சமீபத்தில்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது பழைய டீசல் வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு சற்றே நிம்மதியை அளித்துள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றாவிட்டால், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய டீசல் வாகனங்களை தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இயக்க முடியாது.

டெல்லியில் வரும் காலங்களில் பழைய வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே வருவதுதான் இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே பழைய வாகனங்களை வைத்திருப்பவர்கள் அரசின் உத்தரவுகளை பின்பற்றுவது அவசியமாகிறது.

இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் தவிர, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமாகவும் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு டெல்லி அரசு முயற்சி செய்து வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாடு குறைந்து எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தாலும் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

டெல்லி மட்டுமல்லாது, ஒன்றிய அரசும் மற்றும் பல்வேறு மாநிலங்களின் அரசுகளும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. குறிப்பாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரி மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் ஆர்வமாக உள்ளார்.

மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹைட்ரஜனில் இயங்கும் கார் ஒன்றையும் அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் வாங்கியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சிஎன்ஜி, எத்தனால் போன்ற மாற்று எரிபொருட்களின் அவசியத்தை அமைச்சர் நிதின் கட்காரி மிக நீண்ட காலமாக எடுத்துரைத்து வருகிறார்.

இந்த மாற்று எரிபொருட்களுக்கு இந்தியா தற்போதுதான் மெல்ல மெல்ல மாறி வருகிறது. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக வெளிநாடுகளை அதிகம் சார்ந்திருக்க வேண்டியதில்லை. காற்று மாசுபாடு பிரச்னையை தவிர கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்காகவும்தான் இந்தியாவில் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








