வாகன ஓட்டிகள் மீது அதிரடியாக 40 லட்சம் வழக்குகள் பதிவு!! போலீசாரின் பிடி இறுகுவதற்கு காரணம் இதுதான்
வாகன ஓட்டிகள் மீது போலீசார் அதிரடியாக 40 லட்சம் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாலை பாதுகாப்பு என்ற விஷயத்தில் இந்தியா மிக மோசமான நிலையில் உள்ளது. ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் உயிர்களை சாலை விபத்துக்களில் பறிகொடுத்து கொண்டிருக்கிறது இந்தியா. எனவே இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்த தேவையான பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் சட்டை செய்யாததே சாலை விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணம். எனவே போக்குவரத்து விதிகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளுக்கு அதிக அபராதம் விதிக்கும் வகையில், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து தண்டிக்கும் பணியில் போலீசாரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த வகையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத், சைபராபாத், ரச்சகொண்டா ஆகிய மூன்று கமிஷனர் அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், நடப்பாண்டில் மட்டும் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பாக இதுவரை 40,80,477 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஜூலை 26ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை ஆகும். இந்த போக்குவரத்து விதி மீறல்கள் அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளால் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஹெல்மெட் அணியாதது, ராங் சைடு டிரைவிங், ஓவர் ஸ்பீடு, அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்குவது போன்ற காரணங்களுக்காவே அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருப்பதிலேயே மிக அதிகபட்சமாக தலைக்கவசம் அணியாத காரணத்திற்காக 36,00,212 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஓவர் ஸ்பீடு அல்லது அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்கியதற்காக 1,87,942 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே இந்த மூன்று கமிஷனர் அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், விபத்துக்களால் உயிரிழந்தவர்கள் தொடர்பான டேட்டாவும் வெளியாகியுள்ளது.

இதன்படி நடப்பாண்டில் மொத்தம் 646 பேர் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில், இரு சக்கர வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை மட்டும் 432. இதில், 382 இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியவில்லை என்பது வேதனையான விஷயம். ஒரு வேளை முன்னெச்சரிக்கையாக ஹெல்மெட் அணிந்திருந்தால் அவர்கள் உயிர் பிழைத்திருக்க கூடும்.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ''சாலை விபத்துக்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிக அதிகளவில் உயிரிழப்பதற்கு ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வதே முக்கியமான காரணம். இதுதவிர அதிவேகம், அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்குவது, ராங் சைடு டிரைவிங், சிக்னல் ஜம்பிங் ஆகிய காரணங்களாலும் அதிக உயிரிழப்புகள் நிகழ்கின்றன.

அத்துடன் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது போன்ற விதிமுறை மீறல்களும் அதிகப்படியான உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கின்றன. தற்போது ஐதராபாத்தை விபத்துக்கள் இல்லாத நகரமாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.

இதற்காக மூன்று கமிஷனர் அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில், போக்குவரத்து விதிமுறைகள், அவற்றை கடைபிடிப்பதன் அவசியம் உள்ளிட்ட அம்சங்கள் வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்'' என்றனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








