இந்த காரணத்துக்காக வண்டிய திடீர்னு வளச்சு வளச்சு பிடிக்கறாங்களா! கோடி கணக்கில் பணம் வசூல் ஆகுது!
உலகில் சாலை விபத்துக்கள் (Road Accidents) அதிகமாக நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. நடப்பு 2025ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் (ஜனவரி-ஜூன்), இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் மட்டும் 26,770 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari), பாராளுமன்றத்தில் இந்த தகவலை நேற்றுதான் (ஜூலை 23) தெரிவித்தார். எனவே இந்திய சாலைகளில் நிகழும் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தற்போது மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கை ஒன்றில், 9,377 வாகன ஓட்டிகள் காவல் துறையிடம் சிக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் ராங்-சைடில் (Wrong-Side) வாகனங்களை இயக்கிவர்கள் ஆவர். இதற்காக அவர்களிடம் இருந்து ஒட்டுமொத்தமாக 1.59 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ராங்-சைடில் வாகனங்களை இயக்குவதை, வாகன ஓட்டிகள் மிகவும் எளிதாக எடுத்து கொள்கின்றனர். ஆனால் விதிமுறைகளின்படி, இது தவறு. சுற்றி செல்வதை தவிர்ப்பதற்காக வாகன ஓட்டிகள் ராங்-சைடில் பயணம் செய்கின்றனர். இதன் மூலம் அவர்கள் ஒரு சில வினாடிகள் அல்லது நிமிடங்களை சேமிக்கலாம்.

ஆனால் ராங்-சைடில் பயணம் செய்தால், சாலை விபத்துக்களில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்துடன் இது போக்குவரத்தில் குழப்பங்கள் மற்றும் நெரிசலையும் ஏற்படுத்தும். எனவே ராங்-சைடில் பயணம் செய்வது என்பது விதிமுறைகளின்படி தவறு. ஆனால் பலமுறை எச்சரிக்கை செய்தும், வாகன ஓட்டிகள் பலர் தொடர்ந்து ராங்-சைடில் பயணம் செய்து கொண்டே இருக்கின்றனர்.
அவர்களை கட்டுப்படுத்துவதற்காக குஜராத் (Gujarat) மாநிலம் அகமதாபாத் (Ahmedabad) நகரில், அதிரடி நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜூலை 17ம் தேதி தொடங்கிய இந்த அதிரடி நடவடிக்கை, ஜூலை 22ம் தேதி வரை என மொத்தம் 6 நாட்கள் நடைபெற்றது. இந்த 6 நாட்களில், ராங்-சைடில் பயணம் செய்த 9,377 வாகன ஓட்டிகள் சிக்கியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஒட்டுமொத்தமாக 1.59 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து குஜராத் சமாச்சார் செய்தி வெளியிட்டுள்ளது. ராங்-சைடில் அதிக அளவில் பயணம் செய்தது ஆட்டோ டிரைவர்கள்தான் (சுமார் 90 சதவீதம்) என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிக அளவில் ராங்-சைடில் பயணம் செய்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராங்-சைடில் பயணம் செய்தவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ராங்-சைடில் பயணம் செய்தால், கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்ற செய்தியை, இது வாகன ஓட்டிகளுக்கு சென்று சேர்த்துள்ளது. எனவே அகமதாபாத் நகரில் இனிமேல் ராங்-சைடில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவின் மற்ற நகரங்களிலும் இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.ராங்-சைடில் பயணம் செய்பவர்களை கட்டுப்படுத்தினால், சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். அத்துடன் சாலைகளில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையே பிரச்னைகள் ஏற்படுவதையும் குறைக்கலாம்.
குறிப்பு: இந்த செய்தியில் படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை ஆகும்.


Click it and Unblock the Notifications








