நம் மத்திய அரசுக்கு கோயில் கட்டி கும்பிடணும்!! பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா?
பாகிஸ்தான் (Pakistan)-இல் பெட்ரோல், டீசல் விலைகள் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. அப்படி என்ன தான் அந்த நாட்டில் நடக்கிறது? வரலாறு காண அளவிற்கு ஏன் இவ்வளவு அதிகப்படியான பெட்ரோல், டீசல் விலை உயர்வுகள்? இதனை பற்றி விரிவாக காண, வாருங்கள் செய்திக்குள் போவோம்.
பாகிஸ்தானோ அல்லது நம் இந்தியாவோ எந்தவொரு நாட்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மக்களுக்கு முக்கியமானவை ஆகும். ஏனெனில், இந்த விலைகள் மக்களின் தினசரி செலவீனங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாக, பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்பை பொறுத்து நிர்ணயிக்கப்படுகின்றன.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மத்திய அரசு விதிக்கும் வரி, கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை பிரித்தெடுக்க ஆகும் செலவு, பின்னர் அதனை எரிபொருள் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்ய ஆகும் செலவு என பல்வேறு காரணிகள் ஒரு நாட்டில் பெட்ரோல் & டீசலுக்கு நிர்ணயிக்கப்படும் விலைகளை தீர்மானிக்கின்றன. மாநில அரசாங்கங்கள் விதிக்கும் வரிகளினால், மாநிலத்திற்கு மாநிலம் இந்த விலைகள் சற்று வித்தியாசப்படுகின்றன.
இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு துவக்கத்தில் பெட்ரோல் & டீசல் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டன. இது அந்த சமயத்தில் இணையத்திலும், பொது வெளியிலும் வைரலாக பேசப்பட்டது. சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த மீம்ஸ்களை கூட பார்க்க முடிந்தது. இதனையடுத்து, பெட்ரோல் & டீசலின் விலைகள் லிட்டருக்கு கணிசமாக சில ரூபாய்கள் குறைக்கப்பட்டன. அதன்பின், 2022 தீபாவளி சமயத்திலும் ரூ.3- 5 வரையில் குறைக்கப்பட்டன.

அதன்பின், தற்போது வரையில் இந்தியாவில் பெட்ரோல் & டீசல் விலைகளில் பெரியதாக மாற்றம் இல்லை. பைசாக்களில் ஏற்ற, இறக்கங்கள் மட்டுமே நடக்கின்றன. இந்தியாவில் கடந்த 2022 பிப்ரவரியில் எவ்வாறு பெட்ரோல் & டீசல் விலைகள் குறைக்கப்பட்டதோ அதேபோன்று, நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் குறிப்பிட்ட சில ஆயில் நிறுவனங்களின் பெட்ரோல் & டீசல் விலைகள் லிட்டருக்கு சுமார் ரூ.10 வரையில் குறைக்கப்பட்டன.
ஆனால், பாகிஸ்தானில் அதன்பின் இந்த விலைகள் தொடர்ந்து ஏற்றமாகவே உள்ளது. எந்த அளவிற்கு என்றால், இன்றைய நிலவரப்படி பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 333.38 பாகிஸ்தானிய ரூபாய் ஆகும். ஒரு லிட்டர் டீசலின் விலை 329.18 பாகிஸ்தானிய ரூபாய் ஆகும். இது பாகிஸ்தானின் வரலாற்றிலேயே அதிகப்பட்சமாக பதிவாகியுள்ள பெட்ரோல் & டீசல் விலையாக கருதப்படுகிறது.

ஏனெனில், பாகிஸ்தான் அரசாங்கம் சமீபத்தில்தான் பெட்ரோல் & டீசலின் விலைகளில் லிட்டர் ஒன்றுக்கு முறையே சுமார் 26.02 பாகிஸ்தானிய ரூபாய் மற்றும் 17.34 பாகிஸ்தானிய ரூபாய் என்ற அதிகரிப்பை கொண்டு வந்துள்ளது. இதேபோன்று, கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் பாகிஸ்தானில் பெட்ரோல் & டீசல் விலைகள் அதிகரிக்கப்பட்டன. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த ஆகஸ்ட்டில் ஒரே நாள் இரவில் இரு முறை விலைகள் உயர்த்தப்பட்டன.
பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்ட்டில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 32.41 பாகிஸ்தானிய ரூபாயும், டீசலின் விலை லிட்டருக்கு 38.49 பாகிஸ்தானிய ரூபாயும் உயர்த்தப்பட்டது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள விலை அதிகரிப்பையும் சேர்த்து பார்த்தால், கடந்த 2 மாதங்களில் மட்டும் பாகிஸ்தானில் பெட்ரோல் & டீசல் விலைகள் லிட்டருக்கு சுமார் 58.43 பாகிஸ்தானிய ரூபாய் மற்றும் 55.83 பாகிஸ்தானிய ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வழக்கம்போல் இந்த லேட்டஸ்ட் விலை உயர்வுக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டியுள்ளது. ஆனால், பாகிஸ்தானில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என சொல்வதை மறுக்க முடியாது. அந்த நாட்டில், பெரும்பான்மையான போக்குவரத்து ஹை-ஸ்பீடு டீசலில் இயங்குவதும் இந்த விலை உயர்வுகளுக்கு ஓர் காரணமாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications









