எவ்வளவு பெரிய சாதனையை செய்து இருக்காரு, அவருக்கு கொடுக்கும் காரா இது? பிஸ்னஸ்மேனின் ‘தாராள’ மனசு!!
ஒலிம்பிக் (Olympic) ஒரு விளையாட்டு போட்டி தொடர் என்பதையும் மறந்து, அதில் பதக்கங்களை வெல்வதுதான் நாட்டின் கௌரவம் என எண்ணும் அளவிற்கு ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வேட்கையும், தாழ்வு மனப்பான்மையும் நம்மை ஆட்கொண்டுள்ளது. இதன் வெளிப்பாடாகவே, பதக்கம் வெல்லும் வீரருக்கு கோடி ரூபாய்களில் பரிசு பொருட்கள் பல்வேறு தரப்பு மக்களால் வழங்கப்படுகிறது. இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகின் பெரும்பாலான நாடுகளில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகள் பரிசு பொருட்களால் கொண்டாடப்படுகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தானில் தங்க பதக்கம் வென்றவருக்கு விலை குறைவான கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ்க்காரர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று தனி நாடாக பிரிந்ததில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுவரும் பாகிஸ்தான், 1948 லண்டன் மற்றும் 1952 ஹெல்சின்கி என முதல் 2 ஒலிம்பிக் போட்டிகளில் எந்தவொரு பதக்கமும் வெல்லவில்லை. 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் ஒரு வெள்ளி பதக்கத்தையும், 1960 ரோம் ஒலிம்பிக்கில் 1 தங்கம், 1 வெண்கலம் என இரு பதக்கங்களையும் வென்றது.

1992ஆம் ஆண்டு வரையில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அனைத்திலும் மூன்றில் எதாவது ஒரு பதக்கத்தை ஆவது பெற்றுவந்த பாகிஸ்தானால் 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் இருந்து எந்தவொரு பதக்கத்தையும் பெற முடியவில்லை. சுமார் 32 வருடங்களாக பாகிஸ்தான் மக்களிடம் இருந்த ஒலிம்பிக் பதக்க கனவை தங்க பதக்கத்தின் மூலம் நிஜமாக்கியவர் அர்ஷத் நதீம் (Arshad Nadeem).
நடந்து முடிந்த 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பரபரப்பாக நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ராவை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தானின் 26 வயதான அர்ஷத் நதீம் தங்க பதக்கத்தை தட்டி சென்றார். இதனால், மொத்த பாகிஸ்தான் மக்களும் அர்ஷத் நதீமை ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர். தங்க பதக்கத்தை வென்றதன் மூலம் அர்ஷத் நதீமுக்கு ஒலிம்பிக் குழு சார்பில் 50 ஆயிரம் டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ரூபாயில் இதன் மதிப்பு 1 கோடியே 40 இலட்சம் ஆகும்.
இதுமட்டுமின்றி, பாகிஸ்தானை சேர்ந்த பலரும் அர்ஷத் நதீமுக்கு பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர். பல்வேறு அமைப்புகள், விஐபிகள் மற்றும் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண அரசு என பல வழிகளில் அர்ஷத் நதீமுக்கு கிட்டத்தட்ட 18 கோடி பாகிஸ்தான் ரூபாய் கிடைக்கவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போதாதென்று, அர்ஷத்தின் மாமனார் அவருக்கு எருமை மாட்டை பரிசாக வழங்குவதாக அறிவித்தது கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் தொழிலதிபர் ஒருவர் தங்க பதக்க வீரர் அர்ஷத் நதீமுக்கு சுஸுகி ஆல்டோ (Suzuki Alto) காரை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த பாகிஸ்தானிய தொழிலதிபர் வேறு யாரும் கிடையாது, ஷேக்கனி குழுமத்தின் சிஇஓ அலி ஷேக்கனி ஆவார். 2012ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஷேகனி குழுமம் ஆனது அமெரிக்கா வரையில் முதலீடு செய்து, வேகமாக வளர்ந்துவரும் பாகிஸ்தானிய கார்ப்பிரேட் நிறுவனமாக விளங்குகிறது.
அர்ஷத் நதீமுக்கு சுஸுகி ஆல்டோ காரை அலி ஷேக்கனி பரிசாக வழங்கவுள்ளதை ஜாபர் அப்பாஸ் ஜஃப்ரி என்கிற தன்னார்வலர் வெளியுலகிற்கு தெரிவித்துள்ளார். இது பாக்கிஸ்தான் மக்களிடையே பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தி இருப்பினும், நம் இந்திய மக்களிடையே இது கிண்டலுக்குரிய பேச்சாக அமைந்துள்ளது. ஏனெனில், இந்தியாவில் மாருதி சுஸுகி ஆல்டோ ஆனது மிகவும் விலை குறைவான காராக விளங்குகிறது.

இத்தகைய காரையா ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றவருக்கு வழங்க போகிறீர்கள்? என இந்திய மக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். இந்தியாவில் ஆல்டோ காரின் விலை ஏறக்குறைய வெறும் ரூ.4 லட்சம் மட்டும்தான். அதுவே, பாகிஸ்தானில் சுமார் ரூ.23 லட்சமாக உள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் உள்ள ஆல்டோவிற்கும், பாகிஸ்தானின் ஆல்டோவிற்கும் தோற்றத்தில் பெரிய வித்தியாசம் உள்ளது. நம் நாட்டில் விற்பனையில் உள்ள ஆல்டோ மிகவும் மாடர்ன் தரத்தில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாகிஸ்தானில் பலரது கனவு காராக ஆல்டோ விளங்குகிறது. ஆதலால், அத்தகைய கார் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றவருக்கு வழங்கப்பட இருப்பது பாகிஸ்தான் மக்களுக்கு ஆச்சிரியமாக உள்ளது. இதில் இருந்து, இந்தியா உடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தான் எந்த அளவிற்கு பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளது என்பதை அறியலாம். இருப்பினும், வீரரை ஊக்கப்படுத்தும் விதமாக வழங்கப்பட உள்ள பரிசு பொருளின் விலையை ஆராய்வது ஏற்புடையது அல்ல.


Click it and Unblock the Notifications









