எனக்கு வேற வழி தெரியல ஆத்தா... உண்மையான டெஸ்லா கார் என்று எத்தனை பேர் ஏமாந்தீங்க?
டெஸ்லா (Tesla), உலகளவில் பிரபலமான மற்றும் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம். இந்தியாவில் டெஸ்லா கார்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்றாலும், பலத்த போட்டி மிகுந்த சீனா உள்பட வெளிநாடுகளில் விற்பனை படுஜோராக உள்ளது. டெஸ்லாவில் இருந்து கடைசியாக பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான எலக்ட்ரிக் வாகனம், சைபர்டிரக் (Cybertruck) ஆகும். பெரியதாக ஆடம்பர டிசைன்கள் எதுவும் இல்லாமல், கம்பீரமான தோற்றத்தில் சைபர்டிரக் உருவாக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, எளிதாக சேதமடையாத வகையில் மிகவும் பாதுகாப்பான வாகனமாக சைபர்டிரக் உருவாக்கப்படுகிறது. டெஸ்லா சைபர்டிரக் ஆனது ஓர் பிக்-அப் டிரக் வாகனம் ஆகும். அதாவது, இதன் பின்பக்கத்தில் பொருட்களை வைத்து கொண்டுச்செல்ல இடவசதி கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த பகுதி முழுவதுமாக மூடப்பட்டுவிடுவதால், வெளியில் இருந்து பார்த்தால், சைபர்டிரக் ஆனது ஓர் பிக்-அப் டிரக் வாகனம் போன்றே இருக்காது.

இன்னும் சொல்லப்போனால், டெஸ்லா சைபர்டிரக்கின் வடிவமைப்பே மிகவும் விசித்திரமானது என்றுதான் சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் இருந்து டைம் டிராவலர் செய்து கொண்டுவரப்பட்டது போன்ற டிசைனை கொண்ட சைபர்டிரக்கை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், என்ன செய்வது... இந்த டெஸ்லா எலக்ட்ரிக் வாகனம் நிறைய நாடுகளில் விற்பனையில் இல்லை.
உதாரணத்திற்கு நமது இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். இங்கு சைபர்டிரக் உள்பட எந்தவொரு டெஸ்லா எலக்ட்ரிக் காரும் விற்பனையில் இல்லை. இதே நிலைமைதான் நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும். நம் நாட்டிலாவது பரவாயில்லை, இன்னும் சில வருடங்களில் டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற சூழல் நிலவுகிறது. ஆனால், பாகிஸ்தான் மார்க்கெட்டில் டெஸ்லா நுழைவதற்கு எல்லாம் இன்னும் பல வருடங்கள் ஆகும்.

இதனை தெரிந்துக் கொண்டதாலோ என்னவோ, பாகிஸ்தானில் ஒருவர் தனது காரை டெஸ்லா சைபர்டிரக் போன்று மாற்றிக் கொண்டுள்ளார். உண்மையில் சைபர்டிரக் வாகனம் மிகவும் பிரம்மாண்டது ஆகும். ஆனால், இந்த பாகிஸ்தான் நபர் தனது சிறிய அளவிலான காரை சைபர்டிரக் போன்று மாற்றிக் கொண்டுள்ளார். இதனாலேயே இந்த போலி சைபர்டிரக் வாகனத்தின் கேபின் அதிக இடவசதி உடன் இல்லாததை காணலாம்.
இதனாலேயே இது உண்மையான சைபர்டிரக் கிடையாது என்பதை பார்த்தாலே அறிய முடிகிறது. சக்கரங்களின் அளவும் சிறியதாக உள்ளது. இருப்பினும், இந்த வாகனத்தை அந்த வழியாக செல்லும் பலரும் ஆச்சிரியமாக போட்டோ எடுப்பதை பார்க்க முடிகிறது. இருந்தாலும், காரின் முன்பக்கத்தில் இந்த நபர் வழங்கியுள்ள எல்இடி லைட் ஸ்ட்ரிப் ஆனது பார்க்க அழகாக உள்ளதை கூறியே ஆக வேண்டும்.
இந்த வாகனத்தை இந்த நபர் ஒரு பிசியான சந்தையில் ஓட்டுவதை வீடியோவில் காணலாம். ஆனால், உண்மையில் இது ஆபத்தானது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இந்த காரில் பாடி பேனல்கள் சரியாக பொருத்தப்படாதது போல் தெரிகிறது. இதனால் அவை நடுவழியில் கழன்று, பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அல்லது, வாகனத்தை இயக்க முடியாமல் போனால், அது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்த கூடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இவ்வாறான கார் மாடிஃபிகேஷன்களை மேற்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. பாகிஸ்தானிலும் அவ்வாறுதான் இருக்கும் என நினைக்கிறோம். ஆதலால், இவ்வாறான போலி கார் மாடிஃபிகேஷன்களை தவிர்ப்பது நல்லது. இருப்பினும், இந்த பாகிஸ்தானிய நபரின் வேலைப்பாடுகளை பாராட்டியே ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications








