மறந்து கூட செஞ்சுடாதீங்க... காருக்குள் குழந்தைகளை தனியாக விட்டு சென்றால் ரூ1.8 லட்சம் அபராதம்....
பெற்றோர்கள் குழந்தைகளுடன் வெளியில் செல்லும் போது காருக்குள் அவர்களைத் தனியாக விட்டுச் செல்லும் பழக்கம் அதிக நபர்களிடம் உள்ளது. இப்படியாக காருக்குள் குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர்களுக்கு ரூ1.8 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று உலகம் முழுவதும் பெற்றோர்களிடம் இருக்கும் முக்கியமான பிரச்சனை காருக்குள் குழந்தைகளை வைத்து தனியாக அடைத்துவிட்டுச் செல்வதுதான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் காரில் வெளியில் செல்லும் போது காரை நிறுத்திவிட்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளச் சிரமமாக இருப்பதால் காருக்குள் வைத்து அடைத்துவிட்டுச் செல்கின்றனர்.

பெற்றோர்கள் சிறிது நேரம் தான் என்பதால் இப்படி செய்வதுவிட்டு செல்கின்றனர். ஆனால் இப்படிச் செய்வதால் ஏற்படும் ஆபத்து பெற்றோருக்குத் தெரியவில்லை. இப்படிச் செய்வதால் குழந்தையின் உயிர் கூடப் போக வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து சமீபத்தில் ஸ்டான்ஃபோர்டு மருத்துவ பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு ஒன்றைச் செய்தது.

இந்த ஆய்வில் ஒரு சாதாரண நாளில் ஒரு காரை நேரடியாகச் சூரிய வெளிச்சத்தில் நிறுத்தினால் ஒரு மணி நேரத்தில் காருக்குள் வெப்ப அளவு 47 டிகிரி செல்சியஸை தொட்டுவிடும். எனச் சொல்கிறது. அப்படி என்றால் கிட்டத்தட்ட அந்த கார் ஒரு ஓவன் போல மாறிவிடும் எனச் சொல்கிறது. இதனால் அவ்வளவு நேரம் ஒரு மனிதன் உள்ளே இருந்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடையக் கூட வாய்ப்புள்ளது எனக் கூறுகிறது.

இந்நிலையில் அபுதாபி அரசு இந்த பிரச்சனையை முக்கியமான பிரச்சனையாகக் கையில் எடுத்து வாகனத்தில் குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்வதைக் குற்றமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த குற்றத்தைச் செய்தால் அந்நாட்டு மதிப்பில் 5000 திராம்ஸ் அதாவது ரூ1.8 லட்சம் அபராதமாக விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

சமீபத்தில் துபாய் நாட்டில் பதிவான சம்பவங்களின்படி கடந்த 2020ம் ஆண்டு 53 சம்பவங்களில் குழந்தைகளைப் பெற்றோர்கள் காரில் தனியாக விட்டுச் சென்றுள்ளனர். அதாவது சராசரியாக மாதத்திற்கு 4 சம்பவங்கள் பதிவாகியுள்ளது. கடந்தாண்டு முதல் 7மாதத்தில் மொத்தம் 39 குழந்தைகள் இப்படியாக கார்களிலிருந்து தனியாக மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த 2016ம் ஆண்டே சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் இப்படி குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்லும் பெற்றோர்களுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனை வழங்கலாம் என குறிப்பிட்டுள்ளது. அபுதாபி அரசு அந்த அபராத தொகையை அதிகமாக வைத்து அறிவித்துள்ளது. இந்த சட்டம் பல குழந்தைகள் நல ஆர்வலர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

இப்பொழுது கார்கள் ஏன் நேரடியாகச் சூரிய வெளிச்சத்தில் நின்றால் விரைவில் சூடாகிறது எனக் காணலாம். பொதுவாக கார்களை வடிவமைக்கப்படும் காரின் ஏசி வெளியேறக்கூடாது என்பதற்காக கார்கள் முழுமையாகப் பூட்டப்பட்டிருக்கும் போது வெளியிலிருந்து உள்ள காற்று நேரடியாகப் புகாத வண்ணம் தான் வடிவமைப்பார்கள்.

இப்படி இருக்கும் போது காருக்கு மேல் நேரடியா சூரிய வெப்பம் படும் போது காருக்குள் இருக்கும் காற்று மெல்லமெல்ல சூடாக ஆரம்பிக்கும். இதனால் காருக்குள் ஆக்ஸிஜன் அளவு குறையும், இதைச் சமன் செய்ய வெளியிலிருந்து காற்று உள்ள செல்ல முடியாததால் காருக்குள் இருப்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். இது நீண்ட நேரம் நீடித்தால் மரணம் கூட சம்பவிக்கும்.

காருக்குள் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள் யார் இருந்தாலும் காரின் ஜன்னலையாவது திறந்து வைப்பது நல்லது. இது மட்டுமல்ல காரை எப்பொழுதும் நேரடியாகச் சூரிய வெளிச்சத்தில் நிறுத்துவதையும் தவிர்க்கலாம். இனி நீங்கள் காரில் உங்கள் குழந்தைகளுடன் வெளியில் செல்லும் போதும் கவனமாக இருங்கள்...


Click it and Unblock the Notifications