சாலையை பார்க்கிங் ஏரியாவா யூஸ் பண்றவங்களுக்கு வெக்க போறாங்க செக்! இப்போவே உஷாராயிடுங்க
எப்படியாவது கஷ்டப்பட்டாவது ஒரு காரை வாங்கிவிட வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது வாழ்நாள் கனவாக உள்ளது. ஒரு சிலர், சொந்தமாக நிலத்தை கூட பிறகு வாங்கிக்கலாம், முதலில் கார் ஒன்றை வாங்கிவிடும் என நினைப்போரும் இருக்கின்றனர். ஆனால், காரை நிறுத்த உங்களிடம் இடம் இருந்தால்தான் கார் வாங்க முடியும் என சட்டம் போட்டால் என்ன செய்ய முடியும். இப்படியெல்லாம் கூடவா சட்டம் இருக்கிறது என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், இந்த உலகில் நீங்கள் நினைக்காதது பல நடந்துக் கொண்டிருக்கின்றன.
வெளிநாடுகளுக்கு கூட செல்ல வேண்டாம்... நம் இந்தியாவிலேயே ஒரு பரபரப்பான நகரத்தில் இப்படியொரு சட்டம் வர போகிறது. அந்த பிசியான நகரம் வேறொன்றும் இல்லை, இந்தியாவின் பொருளாதார தலைநகரமான மும்பை (Mumbai) ஆகும். மும்பையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் தலையாய பிரச்சனையாக மாறி வருகிறது. பெங்களூரில் தான் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கேள்விப்பட்டு இருப்பீர்கள்; மும்பையிலும் தான்.

சாலையில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆதரவற்றப்படி சாலையில் நிறுத்தப்படும் கார்களை தடுக்கும் விதமாக மஹாராஷ்டிரா (Maharashtra) மாநில அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை கொண்டுவர போகிறது. அதுதான், பார்க்கிங் பகுதி இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும் என்பதாகும். அதாவது, புதிய காரை ஆர்டிஓ (RTO)-இல் பதிவு செய்யும்போது பார்க்கிங் பகுதிக்கான சான்றிதழையும் சமர்பிக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறான சட்டங்கள் வெளிநாடுகளில் சில நகரங்களில் அமலில் உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ஜப்பான் மற்றும் சிங்கப்பூரை சொல்லலாம். சிங்கப்பூரில் 1990ஆம் ஆண்டில் இருந்தே புதிய கார் வாங்க பார்க்கிங் பகுதியை கொண்டிருக்க வேண்டும் என்கிற சட்டம் அமலில் உள்ளது. அதுமட்டுமின்றி, சிங்கப்பூரில் 10 வருடத்திற்கு ஒருமுறை பார்க்கிங் பகுதியை அரசாங்கத்திடம் காட்ட வேண்டும்.
இவ்வாறு வெளிநாடுகளில் அமலில் உள்ள சட்டங்களை பின்பற்றி, மும்பைக்கு ஏற்ப சிறு சிறு மாறுதல்களை செய்து மஹாராஷ்டிரா அரசாங்கம் இந்த சட்டத்தை வரையறுத்துள்ளது. சாலைகளிலும், பொது இடங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் கார்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக மட்டுமின்றி, மும்பையின் காற்று மற்றும் ஒலி மாசுவையும் குறைக்கும் விதமாக இவ்வாறான ஒரு சட்டத்திற்கு மஹாராஷ்டிரா மாநில அரசு தயாராகி வருகிறது.

இதற்கான ஒப்புதலை வேண்டி, அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸிடம் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி கேட்டு நிற்பதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தெற்கு மும்பை மற்றும் மற்ற பிசியான பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமான வழக்கமான ஆலோசனைகளிலும் மஹாராஷ்டிரா போக்குவரத்து அமைச்சகம் ஈடுப்பட்டு வருகிறது.
போதுமான பார்க்கிங் பகுதி இல்லாதவர்களுக்கு காரை விற்பனை செய்யக்கூடாது என்கிற சட்ட திருத்தம் மட்டுமில்லாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவோருக்கு அதிக அபராதம் விதிப்பது குறித்தும், ஒரு குடும்பத்திற்கு அதிகப்பட்சமாக அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்தும் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸிடம் மஹாராஷ்டிரா மாநில போக்குவரத்து அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மக்களின் பொருளாதாரம் முன்னேற, முன்னேற இவ்வாறான பிரச்சனைகள் வருவது இயல்பானதுதான். ஆனால், அதற்கு எந்த அளவிற்கு நாம் தயாராக உள்ளோம் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். மும்பையை போன்று, நம் சென்னையிலும் இவ்வாறான ஒரு சட்டம் வந்தால் நல்லா தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications








