“ஸீப்ரா க்ராஸிங்கை யாரும் கவனிப்பதில்லை... வாகன ஓட்டிகள் தான் பார்த்து செல்லனும்” - நீதிமன்றம்
மக்கள் சாலையை கடக்கும்போது ஸீப்ரா க்ராஸிங்கை எல்லாம் கவனிப்பது இல்லை எனவும், இதனால் வாகன ஓட்டிகள் தான் சாலை சூழலை அறிந்து பயணிக்க வேண்டும் என மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒன்று வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளது.
Recommended Video
எந்த வழக்கின்போது இத்தகைய கருத்து நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டது என்பது குறித்த விரிவான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

சாலைகளை மக்கள் எங்குவேண்டுமானாலும் சர்வ சாதாரணமாக கடக்கும் சம்பவங்கள் இந்தியாவில் பரவலாக நடக்கக்கூடியவை. மற்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளை போல் எதிர்காலத்தில் இந்தியாவிலும் மக்கள் ஸீப்ரா க்ராஸிங் பகுதியில் மட்டும் சாலையை கடந்து செல்வர் என்றாலும், இப்போதைக்கு மக்களிடத்தில் அத்தகைய விழிப்புணர்வு இல்லை என்பது கசப்பான உண்மை.

இந்தியா, சாலை போக்குவரத்து நெரிசல்களுக்கு பெயர்போன நாடுகளுள் ஒன்றாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், சாலையின் ஓரத்தில் நடந்து செல்லும் பாதசாரிகள் சாலையை கடக்க வேண்டுமென நினைக்கும்போது எங்கு வேண்டுமானாலும் கடப்பதே. குறிப்பாக, வாகனங்கள் அதிகம் செல்லும் காலை & மாலை நேரங்களில் பாதசாரிகளின் இத்தகைய செயல்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது மட்டுமின்றி, சில சமயங்களில் விபத்துகளிலும் சென்று முடிக்கின்றன.

உண்மையில், இவ்வாறு சாலையை கடப்பது தண்டனைக்குரிய சட்டமாகும். ஆதலால் இவ்வாறு ஸீப்ரா க்ராஸிங்கில் இல்லாமல், எங்கு வேண்டுமானாலும் சாலையை கடக்கும் பாதசாரிகள் விபத்தில் சிக்க நேர்ந்தாலும் அவரும் அந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவராகவே கருதப்படுவார். ஆனால் மும்பையை சேர்ந்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒன்று சமீபத்தில் இத்தகைய வழக்கு ஒன்றில் வேறு மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

2019இல் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது, 1.5 வயது பெண் குழந்தையுடன் ஸீப்ரா க்ராஸிங் அல்லாத பகுதியில் சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளார். இந்த விபத்தில் அந்த பெண் குழந்தை நீண்ட நாட்களாக ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்றுவந்துள்ளது. இருப்பினும் தற்போதும் அந்த குழந்தையால் பேச முடியவில்லை.

இந்த வழக்கு கிட்டத்தட்ட கடந்த 3 வருடங்களாக நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில், முகமது அகமது என பெயர் கொண்ட அந்த இளைஞர், தன்மீது எந்த தவறும் இல்லை எனவும், அந்த இடத்தில் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு ஸீப்ரா க்ராஸிங் எதுவும் இல்லை எனவும் கூறி வக்கீல் மூலம் வாதாடினார். ஆனால் அவரது இந்த கருத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

ஆபத்தான விகிதத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாகவும், லட்சக்கணக்கான சிறு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாலை விபத்துகளில் இறக்கின்றனர் என்றும் நீதிமன்றம் கூறியது. பொதுவாக, இத்தகைய வழக்குகளில் குற்றவாளிகளுக்கான நன்னடத்தை சட்டத்தின்கீழ், குற்றஞ்சாட்டப்பட்டவர் தண்டனையை அனுபவிப்பதற்கு பதிலாக நன்னடத்தையின் அடிப்படையில் ஜாமீனில் வெளிவர முடியும்.

ஆனால் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முகமது அகமதுவை விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், அவருக்கு 6 மாத சிறைத்தண்டனையையும் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு காரணம், விபத்தின்போது பதற்றமடைந்த முகமது அகமது உடனடியாக அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

ஆனால் அதற்குள்ளாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவரின் இத்தகைய செயல்பாடுகளினாலேயே அவரை பிணைப்பில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது. அத்துடன் விபத்தில் காயமடைந்த குழந்தையின் பெற்றோரிடம் இழப்பீட்டு தொகையாக ரூ.30,000-ஐ முகமது அகமது வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் விபத்தில் சிக்கியவரையும் கடிந்துக்கொண்ட நீதிமன்றம், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு போடப்படும் ஸீப்ரா க்ராஸிங் எங்குள்ளது என பொதுமக்கள் தேடுவதே கிடையாது என காட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், ஸீப்ரா க்ராஸிங்கோ அல்லது போக்குவரத்து சிக்னலோ இல்லாதது குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிபதி இதுகுறித்த தனது தீர்ப்பில், "சம்பவம் நடந்த இடம் ஒரு நெடுஞ்சாலை அல்ல. இது ஹோட்டலுக்கு அருகிலுள்ள உள் சாலை. சாலையை கடக்கும்முன் பொதுமக்கள் ஸீப்ரா க்ராஸிங்கையோ, போக்குவரத்து சிக்னல்களையோ தேடுவது இல்லை. ஆதலால், சாலையின் விசித்திரமான சூழ்நிலையை கருத்தில்கொண்டு வேக வரம்பை கட்டுப்படுத்துவது வாகன ஓட்டிகளின் பொறுப்பாகும்" என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications