அமைச்சர் மொத்தமாக பின் வாங்கிவிட்டார்... 2-வீலர் ஓட்டிகளுக்கு போடப்பட்ட கடுமையான சட்டம் இல்லாமல் போக போகுது!!
பயணத்தின்போது இருசக்கர வாகன ஓட்டிகள் பின்னால் அமர்ந்திருப்பவர் உடன் பேசினால் அபராதம் என்கிற விசித்திரமான தண்டனை சமீபத்தில் செய்திகளில் கவனத்தை ஈர்த்தது. இவ்வாறான விதிமுறை அமல்படுத்தப்பட்டது வேறு எங்கும் கிடையாது, நம் அண்டை மாநிலமான கேரளாவில் ஆகும். இந்த நிலையில், இந்த விஷயத்தில் திருப்புமுனையாக, சம்பந்தப்பட்ட அமைச்சர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதன் மூலமாக, இந்த புதிய விதிமுறையே இல்லாமல் போகும் சூழல் உருவாகி உள்ளது. அமைச்சர் அப்படி என்ன கூறினார்? வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் ஒன்றாக நமது இந்தியா உள்ளது. இதற்கு சாலைகளின் தரம் ஒரு காரணம் என்றாலும், அதனை விட முக்கியமான காரணம், அதிவேகமான & ஆக்ரோஷமான பயணம் ஆகும். அத்தகைய பயணங்களை தடுத்து, சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக நாடு முழுவதும் போலீசார் பல்வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கூட, கர்நாடகாவில் 130kmph வேகத்திற்கு மேல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதை பற்றி நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம். அந்த வரிசையில், கேரளாவில் 2-வீலர்களில் செல்பவர்கள் பயணத்தின்போது ஒருவருக்கு ஒருவர் பேசியப்படி சென்றால் அபராதம் விதிக்கப்படும் என கேரள போக்குவரத்து அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்ட விஷயம் அந்த மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த விவாதங்கள் நடந்தன; மீம்ஸ்கள் பரவின. ஏனெனில், 2-வீலர்களில் செல்பவர்கள் பேசியப்படி செல்வதை கண்டுப்பிடிப்பது மிகவும் சிரமம் ஆகும். அதனை கண்டுப்பிடிப்பதற்கு என தனியாக எந்த கருவிகளும் இல்லை. இந்த நிலையில், கேரள போக்குவரத்து அமைச்சர் கே.பி கணேஷ் குமார், இந்த நடவடிக்கை தனது கவனத்திற்கு வராமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு இந்த உத்தரவை கேரள இணை போக்குவரத்து கமிஷ்னர் கே.மனோஜ் குமார் பிறப்பித்தார். இதன்படி, 2-வீலர்களில் செல்வோர் பேசியப்படி சென்றாலோ அல்லது விபத்திற்கு வழிவகுக்கக்கூடிய வகையில் ஏதேனும் செயல்களில் ஈடுப்பட்டப்படி சென்றாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேரள போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது போக்குவரத்து அமைச்சரிடம் இருந்து இவ்வாறான ஒரு பேட்டி வெளிவந்திருப்பது பொது மக்களை தாண்டி, போலீஸ் அதிகாரிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கேரள போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் உடனான உரையாடலினால் கவனத்தை இழந்த பைக் ஓட்டி ஒருவர் லாரியின் பின்பக்கத்தில் மோதியது தெரியவந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறக்கப்பட்டது. இந்த வழிகாட்டுதல் நல்ல நோக்கத்துடன் வெளியிடப்பட்டது. மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அமலாக்க அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது, 2-வீலரில் பயணிப்பவர்கள் பேசினால் அபராதம் விதிக்க எந்த விதியும் இல்லை" என்றார்.

ஏற்கனவே கூறியதுபோல், 2-வீலர்களில் செல்பவர்கள் பேசிக் கொண்டு செல்கிறார்களா இல்லையா என்பதை கண்டறிவது மிகவும் சிரமம் ஆகும். ஏனெனில், எதிர்காற்றினால் அவர்கள் பேசிக் கொள்ளும் சத்தம் அதிகமாக வெளியே கேட்காது. ஆதலால், அவர்கள் சத்தமாக பேசிக் கொண்டு சென்றால்தான் கண்டுப்பிடிக்க முடியும். அல்லது, அவர்களது வாய் அசைவுகளை வைத்தே கண்டுப்பிடிக்கலாம். ஆனால் இதிலிலும் ஒரு பிரச்சனை உள்ளது.
2-வீலர்களில் செல்பவர்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தாலோ அல்லது முகத்தை துணியால் மூடியிருந்தாலோ வாய் அசைவுகளை கண்டுப்பிடிக்க முடியாது. ஆதலால், அமைச்சரிடம் இருந்து இவ்வாறான ஒரு பேட்டி வந்திருப்பது போலீஸ் அதிகாரிகளுக்கு பெரிய நிம்மதியாக அமைந்துள்ளது. இருப்பினும், அமைச்சரின் பேச்சை கேட்பதா அல்லது அவரது போக்குவரத்து துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி நடப்பதா என்கிற குழப்பத்தில் கேரள போலீஸ் அதிகாரிகள் உள்ளனர்,
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2-வீலர்களில் செல்பவர்கள் சவுகரியமாக பேசிக் கொண்டு செல்ல மைக் & ஸ்பீக்கர்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஹெல்மெட்களை சமீபத்தில் நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். அதாவது, டெக்னாலஜி அந்த அளவிற்கு வளர்ந்துவிட்டது. இத்தகைய காலத்தில் 2-வீலர்களில் செல்பவர்கள் பேசிக்கொண்டு செல்ல கூடாது என்கிற சட்டம், போலீசாரால் பின்பற்ற முடியாத ஒன்றாகவே தோன்றுகிறது. இந்த நிலையில், மாநில அமைச்சர் இவ்வாறு தெரிவித்து இருப்பதால், அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









