வாகன ஓட்டிகளை அலற விட போகும் புதிய சட்டம்! இனி சின்னதா டிராஃபிக் ரூல்ஸை மீறினால் கூட இப்படி ஒரு தண்டனையா!
சாலை விபத்துக்களால் (Road Accidents) ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய கவலையாக இருந்து வருகிறது. இந்தியாவில் ஒரு ஆண்டில் மட்டும் சுமாராக 1.80 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இதில், சுமார் 60 சதவீதம் பேர் 18-34 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது வருத்தமான ஒரு விஷயம். அதாவது இந்தியாவின் இளம் தலைமுறையினர் சாலை விபத்துக்களில் அதிகமாக உயிரிழப்பதை இந்த புள்ளி விபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஒரு வகையில் இது இந்தியாவின் வளர்ச்சிக்கும் தடையாக உள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் மாநிலங்களில், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் போன்றவை முன்னணியில் உள்ளன. இந்த உயிரிழப்புகளுக்கு, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதுதான் மிகவும் முக்கியமான ஒரு காரணமாக இருந்து வருகிறது.

உதாரணத்திற்கு நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள 1.80 உயிரிழப்புகளில், சுமார் 30 ஆயிரம் உயிரிழப்புகள் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணியாத காரணத்தால் ஏற்படுபவை ஆகும். ஹெல்மெட் அணியாதது பார்ப்பதற்கு சிறிய விஷயம் அல்லது தவறு போல் தோன்றலாம். ஆனால் அது மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
எனவே நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளை போலவே, இந்தியாவிலும் போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் பணிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. போக்குவரத்து விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டாலே, சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும் என்பதுதான் இதற்கு காரணம்.

இதன் ஒரு பகுதியாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை தற்போது முன்மொழிந்துள்ளது. இந்த திட்டம் என்னவென்றால், சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராத புள்ளிகளை வழங்குவது ஆகும். அதாவது ஒருவர் ஒவ்வொரு முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறும்போதும், அவருக்கு அபராத புள்ளிகள் வழங்கப்படும்.
அவர் குறிப்பிட்ட அளவிலான அபராத புள்ளிகளை பெற்று விட்டால், அவரது டிரைவிங் லைசென்ஸ் (Driving License) சஸ்பெண்ட் செய்யப்படும் அல்லது ரத்து செய்யப்படும். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் போலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் இந்த திட்டம் தற்போது அமலில் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தியாவில் இந்த திட்டம் தற்போது பரிசீலனை அளவில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளின் பிரதிநிதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு நிபுணர்கள் உள்ளிட்டோருடன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே கூடிய விரைவில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு அபராத புள்ளிகள் வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு அபராத புள்ளிகள் வழங்கும் திட்டம் உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையும். அதே நேரத்தில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்க, சாலைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








