கார், பைக்குகளில் இனி இதை செய்தால் அபராத ரசீது வீடு தேடி வரும்... அக்டோபர் 1 முதல் புதிய விதி...
கார் மற்றும் பைக்குகளின் சைடு வியூ மிரர்களின் பயன்பாடு குறித்த புதிய விதி அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கார் மற்றும் பைக்குகளின் சைடு வியூ மிரர்களின் பயன்பாடு குறித்த புதிய விதி அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதிக்க உள்ளனர். இந்த புதிய விதி குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இந்தியாவில் கடந்த 2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, 55 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் இயங்கி கொண்டிருந்தன. இதன் எண்ணிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளில், இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்க கூடும்.

வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் வேளையில், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டேதான் உள்ளது. இதன் காரணமாக இந்திய சாலைகள் தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான விபத்துகளை சந்தித்து கொண்டுள்ளன.

இந்திய சாலைகளில் வாகனம் ஓட்டுவது என்பதே அபாயகரமானது. இங்கு டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில், விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. ஆர்டிஓ அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல் காரணமாக தகுதி இல்லாத ஒருவரால் கூட மிக எளிதாக லைசென்ஸ் வாங்கி விட முடிகிறது.

அப்படிப்பட்டவர்கள் முறையான பயிற்சி இல்லாமலேயே, வாகனங்களை ஓட்ட தொடங்கி விடுகின்றனர். ஒரு சில டிரைவர்கள் இன்டிகேட்டர்களை பயன்படுத்தாமல் அப்படியே வாகனங்களை திடீரென திருப்புவதை பலர் கண் கூடாக பார்த்திருக்க கூடும். இப்படி சாதாரண விதிகளை கூட அவர்கள் கடைபிடிப்பதில்லை.

போதிய பயிற்சி இல்லாமல், முறைகேடாக லைசென்ஸ் வாங்கி கொண்டு, அடிப்படை விதிகளை கூட கடைபிடிக்காமல் வாகனம் ஓட்டும் நபர்களால்தான், அதிக அளவிலான சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

சில டிரைவர்கள், விங் மிரர்களை (சைடு வியூ மிரர் அல்லது அவுட் சைடு ரியர் வியூ மிரர் என்றும் அழைக்கப்படுகிறது) மடித்து வைத்து கொண்டு கார்களை இயக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிகப்படியான விபத்துக்களுக்கு இதுவும் காரணமாகிறது.

பின்னால் வரும் வாகனங்களையும், பக்கவாட்டில் வரும் வாகனங்களையும் டிரைவர்கள் பார்ப்பதற்கு வசதியாகதான் இந்த மிரர்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக விங் மிரர்களை பார்த்து விட்டுதான் லேன் மாற வேண்டியுள்ளது. ஆனால் சில டிரைவர்கள் அவற்றை மடித்து வைத்து விடுகின்றனர்.

ஆனால் இனி அப்படி செய்ய முடியாது. இனிமேல் விங் மிரர்களை மடித்து வைத்து கொண்டு கார்களை இயக்கும் டிரைவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அபாராத தொகை 300 ரூபாய். வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.

ஆனால் பைக்குகளுக்கும் இந்த உத்தரவு பொருந்துமா? என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஏனெனில் பைக் உரிமையாளர்கள் பலரும் கூட, ஹேண்டில்பாரில் உள்ள மிரர்களை ஸ்டைல் என கருதி அகற்றி விடுகின்றனர். எனவே அவர்களையும் போலீசார் குறி வைப்பார்களா? என தெரியவில்லை.

முதலில் சண்டிகரில்தான் இந்த விதி அமல் செய்யப்படுகிறது. ஆனால் விங் மிரர்களின் அவசியம் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. அதுமட்டுமல்லாமல் புதிய விதி குறித்த போதிய அளவிலான விழிப்புணர்வும் இன்னும் அனைவரையும் சென்றடையவில்லை.

எனவே புதிய விதி அமலாக இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், விங் மிரர்களின் அவசியம் குறித்த விழிப்புணர்வை, கார் டிரைவர்கள் மற்றும் அனைத்து வாகன ஓட்டிகளின்மத்தியில், சண்டிகர் போலீசார் தற்போதில் இருந்தே ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கென தனியாக அப்ளிகேஷன் ஒன்றும் டெவலப் செய்யப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் யார் வேண்டுமானாலும், விங் மிரர்களை மடித்து வைத்து கொண்டு பயணிக்கும் கார்களை படம் பிடித்து, அந்த அப்ளிகேஷனில் அப்லோட் செய்யலாம்.

இந்த புகாரினை போலீசார் சரிபார்ப்பார்கள். புகாருக்கு உள்ளான நபர் விதிமுறையை மீறியிருந்தால், அபராதம் விதித்ததற்கான ரசீது, நேரடியாக அவரின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டு விடும். வரும் நாட்களில் அனைத்து பகுதிகளிலும் இந்த விதி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்துக்களை தடுப்பதற்காக இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் பல விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அந்த விதிகள் அனைத்தையும் போலீசார் அமல்படுத்துவது இல்லை. ஒரு சில விதிகள் மட்டுமே நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications