வந்தது யார்னு தெரியாம வால் ஆட்டிட்டாங்க! ஒரே உத்தரவில் அத்தனை பெட்ரோல் பங்க்களுக்கும் பாடம் புகட்டிய நீதிபதி!

இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் (Petrol Bunks) ஒரு சில இலவச வசதிகளை நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இதில், கழிவறையை உபயோகிப்பது ஒன்றாகும். நீங்கள் பெட்ரோல் பங்க்கில் உங்கள் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பினாலும் சரி, நிரப்பாவிட்டாலும் சரி, உங்களால் கழிவறையை இலவசமாக பயன்படுத்தி கொள்ள முடியும். ஆனால் ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் கழிவறையை மூடி வைத்திருப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த வரிசையில் கேரள மாநிலத்தில் கழிவறையை மூடி வைத்திருந்த பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு தற்போது நுகர்வோர் குறைதீர் ஆணையம் தக்க பாடம் புகட்டியுள்ளது.

கேரள மாநிலம் ஏழம்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமாரி. இவர் கடந்த 2024ம் ஆண்டு மே 8ம் தேதி காரில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்புவதற்காக காரை நிறுத்தினார். அந்த சமயத்தில் கழிவறையை பயன்படுத்தியாக வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.

Petrol Bunk Owner Fined Rs 1 65 Lakh For Denying Washroom To Woman Car Traveller

ஆனால் அந்த பெட்ரோல் பங்க்கில் கழிவறையை மூடி வைத்திருந்தனர். எனவே கழிவறையை திறக்கும்படி, பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் ஜெயகுமாரி கூறினார். ஆனால் அவர்கள் கழிவறையை திறக்கவில்லை. அதற்கு மாறாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள், ஜெயகுமாரியை மோசமான வார்த்தைகளில் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக ஜெயகுமாரி காவல் துறையின் உதவியை நாடினார். இதன் பேரில் காவல் துறை அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினர். காவல் துறை அதிகாரிகள் வருகைக்கு பின்னர்தான், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கழிவறையை திறந்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார்.

Petrol Bunk

பத்தினம்திட்டா நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில், பெட்ரோல் பங்க்கின் உரிமையாளரான ஃபாத்திமா ஹன்னா 1.65 லட்ச ரூபாயை, ஜெயகுமாரிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதில், 1.50 லட்ச ரூபாய் இழப்பீடு ஆகும். எஞ்சிய 15 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவுகளுக்காக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நுகர்வோர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க மறுக்கும் அத்தனை பெட்ரோல் பங்க்குகளுக்கும் இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்துள்ளது. எனவே நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பை சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த தீர்ப்பு உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஏனெனில் இந்தியாவில் ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட நுகர்வோர்களுக்கு அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படுவது கிடையாது. நாங்கள் அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் குறை கூறவில்லை.

ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட நுகர்வோர்களுக்கான இலவச அடிப்படை வசதிகள் சிறப்பாக வழங்கப்படுகின்றன. ஆனால் மறுபக்கம் வேறு ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில்தான் சூழல் சரியில்லை. அத்தகைய பெட்ரோல் பங்க்குகளுக்கு எல்லாம் இந்த தீர்ப்பு ஒரு பாடம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இந்த நேரத்தில் பெட்ரோல் பங்க்குகளில் உங்களுக்கு வழங்கப்பட வேண்டிய வேறு ஒரு சில இலவச அடிப்படை வசதிகள் பற்றிய விஷயங்களை விளக்குவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இதன்படி பெட்ரோல் பங்க்குகளில் உங்கள் வாகனத்தின் டயர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்காமல் காற்று நிரப்பப்பட வேண்டும்.

நீங்கள் உங்கள் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பாவிட்டாலும் கூட, காற்றுக்கு அவர்கள் கட்டணம் வசூலிக்க கூடாது. இது முற்றிலும் இலவச சேவை ஆகும். ஒருவேளை உங்களிடம் கட்டணமாக பணம் கேட்டால், அது எவ்வளவு குறைவான தொகையாக இருந்தாலும் கூட, நீங்கள் புகாரை பதிவு செய்யலாம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் அளவு மற்றும் தரம் ஆகியவற்றை நீங்கள் பரிசோதித்தும் பார்க்கலாம். இதுவும் முற்றிலும் இலவசம்தான். நீங்கள் இந்த பரிசோதனைக்கு வலியுறுத்தினால், பெட்ரோல் பங்க் நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவிக்க கூடாது. அத்துடன் கட்டணமும் வசூலிக்க கூடாது.

ஆனால் இது போன்ற இலவச சேவைகளை எல்லாம் நம்மில் பலரும் பயன்படுத்துவதில்லை. ஒருவேளை பெட்ரோல் பங்க் நிர்வாகங்கள் மறுப்பு தெரிவித்தால், நாம் அப்படியே கடந்து சென்று விடுகிறோம். ஆனால் இந்த சம்பவத்தில் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்த ஜெயகுமாரி ஆசிரியர் ஆவார்.

ஆசிரியர் என்பதால், அடிப்படை உரிமைகளுக்காக அவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் படிகளை ஏறி, வெற்றியும் கண்டுள்ளார். இவரது நடவடிக்கை, உண்மையிலேயே மற்றவர்களுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணம்தான். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால், நீதிமன்றத்தின் படிகளை ஏற வேண்டும் என்ற விழிப்புணர்வு மீண்டும் ஒரு முறை, ஜெயகுமாரி மூலம் அனைவருக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 8, 2025, 13:59 [IST]
English summary
Petrol bunk owner fined rs 1 65 lakh for denying washroom to woman car traveller
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+