பெட்ரோல் போட வந்தது புதிய கட்டுப்பாடு! பைக்கிற்கு ரூ200, காருக்கு ரூ1000க்கு தான் போட முடியும்!
இந்தியாவின் ஒரு பகுதியில் பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இதனால் ஒரு நாளுக்கு குறிப்பிட்ட வாகனங்கள் குறிப்பிட்ட அளவிலான பெட்ரோல் மட்டுமே வாங்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
திரிபுரா மாநிலத்தில் உள்ள லுண்டிங் மற்றும் பர்தாபூர் ஆகிய பகுதிகளுக்கு இடையே இருக்கும் ரயில்வே டிராக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்ற சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. இதன் காரணமாக தற்போது அந்த மாநிலத்திற்குள் ரயில் எதுவும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்திற்கு தேவையான பெட்ரோல் எல்லாம் ரயில் மூலம் தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. ரயில் மூலம் அந்த மாநிலத்திற்கு செல்லும் பெட்ரோல் அனுப்பும் டேங்கரில் சேமிக்கப்பட்டு பின்னர் அது சில்லறை விநியோகத்திற்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் தற்போது பெட்ரோலை நம் மாநிலத்திற்கு அனுப்பி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது இருப்பில் இருக்கும் பெட்ரோல் தான் மாநில அரசு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ரயில்வே தண்டவாள பிரச்சினை சரியாகும் வரை இந்த கட்டுப்பாடு நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது திரிபுரா மாநில அரசு தற்காலிக பெட்ரோல் விநியோக ரேஷன் முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி குறிப்பிட்ட வாகனங்கள் குறிப்பிட்ட அளவிலான பெட்ரோல் மட்டுமே தினந்தோறும் பயன்படுத்த முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்படி மாநிலத்தில் உள்ள டூவீலர் வாகன ஓட்டிகள் ஒரு நாளுக்கு ரூபாய் 200 மதிப்பிலான பெட்ரோல் மட்டுமே வாங்க முடியும் எனவும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருநாளுக்கு ரூபாய் 400 மதிப்பிலான பெட்ரோலை மட்டுமே வாங்க முடியும் எனவும் கார் ஓட்டுநர்கள் ஒரு நாளுக்கு ரூபாய் 1000 மதிப்பிலான பெட்ரோல் மட்டுமே வாங்க முடியும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தட்டுப்பாடு சரியாகும் வரை இந்த ரேஷன் முறை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த கட்டுப்பாடுகள் அரசு வாகனங்களுக்கோ அவசர சேவைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கோ பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எப்பொழுதும் போல அவர்களுக்கான தேவையான எரிபொருளை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ரயில் தடம் புரண்டதால் அப்பகுதியில் உள்ள தண்டவாளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த தண்டவாளங்களை சரி செய்தால்தான் மீண்டும் ரயில் போக்குவரத்து சீராகும் என்பதால் தற்போது ரயில்வே நிர்வாகம் இதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. வரும் 13ம் தேதி முதல் இப்பகுதியில் தண்டவாளங்கள் முழுமையாக சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக சீரமைக்கப்பட்டால் மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கலாம்.
இப்படியாக ரயில் போக்குவரத்து துவங்கி விட்டால் மீண்டும் திரிபுரா மாநிலத்திற்கு ரயில் மூலம் பெட்ரோல் விநியோகத்தை செய்ய முடியும் என பெட்ரோல் விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தற்போது அம்மாநிலத்திற்கு சாலை வழியாக பெட்ரோலை எடுத்துச் செல்வதால் அது மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்திற்காக இதை செய்யாமல் தவிர்த்து வருகிறது. ரயில் மூலம் கொண்டு செல்வதுதான் லாபமாக இருக்கும் என அந்நிறுவனங்கள் கருதுகின்றன.
தற்போது திரிபுரா மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மக்கள் நீண்ட வரிசை காத்திருந்து பெட்ரோலை வாங்கிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் கிடைக்குமா கிடைக்காதோ என்ற பதட்டம் மக்களை இப்படியான சூழ்நிலைக்குள் தள்ளிவிட்டது. இதனால் இருக்கும் ஸ்டாக்குகளை விற்பனை செய்வதற்காக பெட்ரோல் நிறுவனங்கள் நீண்ட நேரம் செயல்பட்டு வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல் விநியோகம் செய்யும் சில்லறை விநியோகஸ்தர்கள் இந்த சூழ்நிலையை சாதகமாகி கொண்டு அதிக விலைக்கு பெட்ரோல்களை விற்பனை செய்ய வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற அவசர சூழ்நிலைகள் ஏற்படும் போது அரசு மானியம் மூலம் குறைந்த செலவில் சாலை வழியாக மாநிலத்திற்குள் பெட்ரோலை கொண்டு செல்லும் முயற்சியை கையில் எடுத்தால் நிச்சயம் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது.


Click it and Unblock the Notifications









