பெட்ரோல் விலையை விட வரி தான் அதிகம்! ரூ100க்கு விக்குறதுல இவ்வளவு விஷயம் இருக்குதா?
இந்தியாவில் பெட்ரோல் மிக முக்கியமான எரிபொருளாக பார்க்கப்படுகிறது. பெட்ரோல் விலை தான் இந்தியாவில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் விலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. பெட்ரோல் விலை அதிகரித்தால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகமாகிறது. இதற்கு முக்கியமான காரணம் அத்தியாவசிய பொருட்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பெட்ரோல் செலவு மிக அதிகமாக இருக்கிறது. இப்படியாக பெட்ரோல் கட்டணம் எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது என்ற தெளிவான விளக்கத்தை தான் இங்கே காணப் போகிறோம்.
இந்தியா முழுவதும் சராசரியாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் இதன் விலையில் வேறுபாடு இருந்தாலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நிலையில் தான் பெட்ரோல் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் விலை ஏன் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது? இதில் எவ்வளவு பணம் உண்மையில் பெட்ரோல் தயாரிக்கும் நிறுவனத்திற்கு செல்கிறது? அரசுக்கு இதனால் எவ்வளவு லாபம் கிடைக்கிறது என்ற தகவல் பலருக்கும் புரியாமல் இருக்கிறது.

கச்சா எண்ணெய்: பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் எல்லாம் கச்சா எண்ணெய் என்ற மூலப்பொருளில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இந்தியா தனக்கு தேவையான 85 சதவீத கச்சா எண்ணையை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. அதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் மற்றும் விலை இறக்கம் நேரடியாக இந்தியாவில் விற்பனையாகும் பெட்ரோல் டீசல் விலையை பாதிக்கிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏறினால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் ஏறுகிறது. அதேநேரம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை இறங்கும்போது இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையும் இறங்குகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை பெரிய அளவில் பாதிக்கவில்லை. இதற்கான காரணத்தை பின்னர் விரிவாக பார்ப்போம்.

அந்நிய செலவாணி: இந்தியா வெளிநாட்டில் இருந்து கச்சா எண்ணெயை வாங்கும் போது அமெரிக்க டாலர் மதிப்பில் தான் வர்த்தகம் செய்கிறது. அதனால் கச்சா எண்ணையின் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் தான் இருக்கும். அந்நிய செலாவணி மதிப்பில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பணத்தின் மதிப்பு அதிகரித்தால், அது நேரடியாக பெட்ரோல் டீசல் விலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக இன்று ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ83.43 ஆக இருக்கிறது. வருங்காலத்தில் இது 90 ரூபாயாக உயரும் பட்சத்தில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் பெறாவிட்டாலும், இந்த அந்நிய செலாவணி காரணமாக கூட இந்தியாவில் பெட்ரோல் விலை ஏறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதே நேரத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் பட்சத்தில் பெட்ரோல் விலையும் குறைய வாய்ப்புள்ளது.

இப்படியாக வெளிநாட்டிலிருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய் இந்தியாவில் வைத்து சுத்திகரிப்பு செய்யப்பட்டு அதிலிருந்து பல்வேறு விதமான தயாரிப்புகள் எடுக்கப்படுகிறது பெட்ரோல் டீசல் விமானங்களுக்கான எரிபொருள் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இந்த கச்சா எண்ணெயின் மூலப்பொருளில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. இதை எடுப்பதற்கான கட்டணமும் அந்த பொருட்களின் விற்பனை விலையில் தான் இருக்கிறது.
மத்திய அரசு வரி: கச்சா எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு மத்திய அரசு வரி விதிப்பு செய்கிறது. மத்திய அரசும் பல்வேறு விதமான வரிகளை விதித்து இந்தியாவில் விற்பனையாகும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 19.90 வரையிலும் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 15.80 வரையிலும் வரியாக வசூல் செய்கிறது. இந்த வரி பணமும் பெட்ரோல் டீசல் விலையில் சேர்கிறது.
மாநில அரசு வரிகள்: பெட்ரோல், டீசல் விலையில் மாநில அரசுகளும் வரிவிதிப்பு செய்கிறது. ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு விதமான வரி விதிப்பு முறையை கையாளுகின்றன. மாநில அரசுகளுக்கு பெட்ரோல், டீசல் விலை மீதான மதிப்பு கூட்டுதல் வரிவிதிக்க அதிகாரம் இருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த வரி விதிப்பை மாநில அரசு விதித்து அதன் மூலம் வருமானம் பெறுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை தமிழகத்தில் விற்பனையாகும் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 11.52 ரூபாயும் கூடுதலாக 13 சதவீத மதிப்பு கூட்டுதல் வரியும் விதிக்கப்படுகிறது. டீசலுக்கு 9.62 ரூபாய் லிட்டருக்கும் கூடுதலாக 11 சதவீத மதிப்பு கூட்டுதல் வரியும் விதிக்கப்படுகிறது. இந்த வரிப்பணம் நேரடியாக மாநில அரசுகளுக்கு செல்கிறது. தற்போது இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை பெட்ரோல் டீசலுக்கு பொருந்தாது.
இதற்கு அடுத்தபடியாக டீலர் கமிஷன் இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை பிரித்தெடுக்கும் நிறுவனம் அந்த தயாரிப்புகளை நேரடியாக டீலர் ஷிப்புகளுக்கு அனுப்புகிறது. அங்கிருந்து டீலர் ஷிப்புகள் கமிஷன் அடிப்படையில் அதை சில்லறை விநியோகம் செய்கிறார்கள். இதற்காக லிட்டருக்கு குறிப்பிட்ட தொகை அவர்களுக்கு கமிஷனாக வழங்கப்படுகிறது. இந்த கமிஷன் தொகை என்பது டீலருக்கு டீலர் அவர்கள் விற்பனை செய்யும் அளவிற்கு ஏற்றார் போல் மாறுபடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல், டீசல் தான் மிக முக்கியமான எரிபொருளாக இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் இதன் மீது வரி விதிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. இந்த மாசை குறைக்க அரசு தான் அதிகமாக பணம் செலவு செய்ய வேண்டியது உள்ளதால், பெட்ரோல், டீசல் விற்பனையில் வரி விதிப்பு செய்யப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications









