பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வாழ்க்கையிலும் புகுந்து விளையாடிய கொரோனா... என்னனு தெரியுமா?
கொரோனா வைரஸ் பிரச்னையால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு பலரின் வாழ்க்கையையும் மிக கடுமையாக பாதித்துள்ளது. பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. வாகனங்களின் இயக்கம் குறைவாக இருந்து வருவதால், பெட்ரோல், டீசல் விற்பனையும் குறைவாக உள்ளது. தற்போது ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக, வாகனங்களின் இயக்கம் ஓரளவிற்கு அதிகரித்துள்ளது.

ஆனால் இது ஓரளவிற்கு மட்டுமே என்பதால், கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முன்னர் இருந்த நிலையின் அருகில் கூட, தற்போது பெட்ரோல், டீசல் விற்பனை வரவில்லை. தற்போது பலரும் வீடுகளில் இருந்தே வேலை செய்கின்றனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதுடன், சரக்கு போக்குவரத்தும் மந்தமாகவே காணப்படுகிறது.

இது போன்ற காரணங்களால் பெட்ரோல், டீசல் விற்பனை இன்னமும் எழுச்சி பெறவில்லை. மாறாக மந்த நிலைதான் தொடர்கிறது. குறிப்பாக குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில், கொரோனா பிரச்னை ஏற்படுவதற்கு முன்னதாக இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது, தற்போதைய எரிபொருள் விற்பனை 30 சதவீதம் குறைவாக இருப்பதாக பெட்ரோலியம் டீலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், ''அகமதாபாத் நகரில் தற்போது பலர் வீடுகளில் இருந்தே வேலை செய்கின்றனர். அத்துடன் தனியார் வாகனங்களும் குறைவான அளவில்தான் இயங்குகின்றன. எனவே பெட்ரோல், டீசல் விற்பனையானது, கொரோனா பிரச்னை ஏற்படுவதற்கு முன்னதாக இருந்த நிலையில், தற்போது வரை 70 சதவீதம் வரை மட்டுமே வந்துள்ளன.

இன்னும் 30 சதவீதம் அதிகரித்தால் மட்டுமே, கொரோனா பிரச்னை ஏற்படுவதற்கு முன் இருந்த நிலையை பெட்ரோல், டீசல் விற்பனை அடையும். பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதும் கூட இதற்கு ஒரு முக்கிய காரணம்தான். பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் வாகனங்கள் குறைவான எண்ணிக்கையில்தான் இயங்குகின்றன.

மேலும் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதும், சுற்றுலா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கு இன்னும் தடை நீடித்து வருவதும், பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இன்றைய சூழலில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர். இதன் விளைவாக குறைவான பெட்ரோல், டீசல்தான் நுகரப்படுகிறது.

70 சதவீதத்திற்கு அப்பால் இன்னும் பெட்ரோல், டீசல் விற்பனை மீண்டு வரவில்லை. முன்பெல்லாம் மக்கள் வாகனங்களில் பயமின்றி பயணம் செய்வார்கள். ஆனால் தற்போது அப்படிப்பட்ட நிலைமை கிடையாது. சுற்றுலா தொடர்பான பயணங்கள் மட்டுமின்றி, வியாபாரம் தொடர்பான வாகன பயணங்களும் கூட குறைந்துள்ளது.

இவை அனைத்தும் சேர்ந்து பெட்ரோல், டீசல் விற்பனையை முடக்கி வைத்துள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால், பெட்ரோல் விற்பனைதான் விரைவாக மீண்டு வருகிறது. ஆனால் டீசல் விற்பனை இன்னமும் குறைவாகதான் உள்ளது. பொதுவாக லாரி போன்ற வர்த்தக ரீதியிலான வாகனங்கள்தான், டீசலின் அதிகம் பயன்படுத்துகின்றன.

ஆனால் உற்பத்தி துறையில் நிலவும் மந்த நிலை காரணமாக, போக்குவரத்து துறையிலும் லாரி உள்ளிட்ட வாகனங்களின் இயக்கம் குறைவாகதான் உள்ளது. பொதுமக்கள் மீண்டும் வழக்கம் போல் தங்களது பயணங்களை மேற்கொள்ள தொடங்குவதுடன், உற்பத்தி துறை சீராகி சரக்குகளின் போக்குவரத்து உயர்ந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை சீராகும்'' என்றனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








