இனி பெட்ரோல் பங்க்களில் ஜிபே, போன்பே, பண்ண முடியாதா? கார்டு கூட போட முடியாதாம்!
பெட்ரோல் பங்க்களில் மே 10ம் தேதி முதல் ஆன்லைன் பணபரிவர்த்தனைகளை நிறுத்தப்போவதாக பெட்ரோல் பங்க் டீலர்கள் சங்கம் தற்போது அறிவித்துள்ளது. தற்போது 60 சதவீதமான பரிவர்த்தனை ஆன்லைன் மூலம் நடக்கும் நிலையில் இதை நிறுத்துவதற்கான காரணம் என்ன? இதனால் யாருக்கு பாதிப்பு ஏற்படுகிறது? எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பெட்ரோல் பங்க் டீலர்கள் சார்பில் விதர்பா பெட்ரோலியம் டீசலர் அசோசியேசன் என்ற பெயரில் சங்கம் நடக்கிறது. இந்த சங்கத்தில் இருந்து வரும் மே 10ம் தேதி முதல் யூபிஐ, கார்டு உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க முடியாததால் இந்த நடவடிக்கையை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

யூபிஐ முறையில் பண பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மக்களின் வாழ்க்கை முறை மிக வேகமாகவும் சுலபமாகவும் மாறிவிட்டது. தற்போது மக்கள் பணத்தை பத்திரமாக கையில் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் மக்கள் பலர் யூபிஐ மூலம் பணம் பரிரவர்த்தனை செய்கின்றனர். இந்நிலையில் பெட்ரோல் பங்க்களிலும் இப்படியான பரிவர்த்தனை அதிகம் நடக்கிறது.
குறிப்பிட்ட சங்கத்தினர் நடத்தி வரும் பெட்ரோல் பங்க்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பரிவர்த்தனை ஆன்லைன் மூலமே நடப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. இந்நிலையில் இப்படியான பரிவர்த்தனைகளில் பல ஃபிராடு வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது. சைபர் பிரச்சனைகளால் பல போலியான பரிவர்த்தனைகள் நடப்பதாகவும். இதனால் அதிக நஷ்டம் ஏற்படுவதாகவும், ஏற்கனவே இது போல பல பரிவர்த்தனைகளில் நஷ்டமாகி இதற்கான புகார் அளித்தும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் வரும் மே 10ம் தேதி முதல் தங்கள் பெட்ரோல் பங்க்களில் ஆன்லைன் பரிவர்த்தனை முறையை முற்றிலுமாக நிறுத்த முடிவு செய்துள்ளனர். இனி பெட்ரோல், டீசல் போட வரும் வாடிக்கையாளர்கள் முழுமையாக பணம் செலுத்தி மட்டுமே வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பி கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 30 ஸ்டேஷன்களில் இந்த ஆன்லைன் பண பரிவர்த்தனையை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது யூபிஐ மட்டுமல்லாமல் கார்டு வழியாக பண பரிமாற்றம் செய்பவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் இதனால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் நஷ்டமடைந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

ஏதாவது இது ஃபிராடு வேலை நடந்து இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக சைபர் பிரிவில் இருந்து குறிப்பிட்ட வங்கி கணக்கை அவர்கள் முடக்கி விடுகின்றனர். இதில் பண பரிவர்த்தனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதுவும் யூபிஐ பண பரிவர்த்தனை முறையை நிறுத்துவதற்கு முக்கியமான காரணமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று உலகம் வேகமாக இயங்கி இந்த யூபிஐ பண பரிவர்த்தனை மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எடுத்துள்ள இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு சரியான தீர்வை அரசு அளிக்க வேண்டும். அப்பொழுது தான் இது போன்ற பிரச்சனைகளை வருங்காலத்தில் தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications









