இவ்வளவு கம்மியாதான் செலவாகுமா? பெட்ரோல் காரை சிஎன்ஜி, இவியா மாத்தலாமா?
இந்தியாவில் தற்போது அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு தான் மவுசு அதிகமாக இருக்கிறது. கார் வாங்கிய பிறகு செலவு குறைவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் அதிக மைலேஜ் தரும் காரை விரும்புகின்றனர். இன்றைய சூழ்நிலையில் பெட்ரோல் காரை விட சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் தான் குறைந்த செலவில் நீண்ட தூர பயணத்தை சாத்தியமாக்குகின்றன. இந்நிலையில் பெட்ரோல் காரை வைத்திருப்பவர்கள் அந்த காரை சிஎன்ஜி காராகவோ அல்லது எலெக்ட்ரிக் காராகவோ மாற்ற முடியுமா என யோசித்து வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.
முதலில் பெட்ரோல் காரை சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் காராக மாற்ற வாய்ப்புள்ளதா என நீங்கள் கேட்டால் உள்ளது என்பது தான் சரியான பதில். சரி இப்படி மாற்றுவது சட்டப்படி சரியான விஷயமா என்று கேட்டாலும் சரியான விஷயம் தான். ஆனால் இப்படியாக மாற்றப்பட்ட பிறகு அதை அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும். சரி இப்பொழுது பெட்ரோல் காரை சிஎன்ஜி காராக மாற்ற என்ன செய்ய வேண்டும் என காணலாம்.

முதலில் உங்கள் காரை சிஎன்ஜி காராக மாற்ற வாய்ப்புள்ளதா என உரிய வல்லுநர்களிடம் உங்கள் காரை கொண்டு சென்று சோதனை செய்ய வேண்டும். பெரும்பாலான கார்களை மாற்ற முடியும். அதன் பிறகு சிஎன்ஜி கிட்கள் மார்கெட்டில் கிடைக்கின்றன. அதை தேர்வு செய்ய வேண்டும். அரசு அங்கீகரித்த கிட்களை மட்டுமே வாங்குங்கள் இல்லை என்றால் ஆவண மாற்றத்தில் பிரச்சனை வரலாம்.
அதன்பிறகு அதை இன்ஸ்டால் செய்ய சிறந்த வல்லுநர்களிடம் நீங்கள் செல்ல வேண்டும். சிஎன்ஜி கிட் மாட்டும் போது சிஎன்ஜி டேங்க், அதிக பிரஷர் கொண்ட பைப் என முக்கியமான விஷயங்கள் இருப்பதால் அதை அனுபவம் வாய்ந்தவர்கள் செய்தால் சிறப்பாக இருக்கும். கிட் பொருத்திவிட்டால் உங்கள் வாகனம் ரெடியாகி விடும். இதற்கு இன்று மார்கெட்டில் ரூ40,000 முதல் ரூ 70,000 வரை செலவாகிறது.

அடுத்தாக எலெக்ட்ரிக் காராக மாற்றுவதிலும் இதே வழி முறை தான் உள்ளது. உங்கள் வாகனத்தை எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றுவதற்கு அதன் தகுதியை செக் செய்ய வேண்டும். அதற்காக அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் இருக்கிறது. அதை நாடலாம். அதே நேரம் நீங்கள் எலெக்ட்ரிக் காராக மாற்றினால் பெட்ரோல் டேங்க், கியர், இன்ஜின் உள்ளிட்ட பெட்ரோல் காருக்கு தேவையான அம்சங்கள் எல்லாம் கழற்ற வேண்டும். அதை செகண்ட் ஹேண்டில் விற்கவும் வாய்ப்புள்ளது.
அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் மோட்டார்கள், பேட்டரி பேக், அதற்கான கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட சில விஷயங்களை நீங்கள் புதிதாக வாங்க வேண்டும். இப்படியாக வாங்கும்போது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாகங்களை தான் வாங்குகிறோமா என ஒன்றிற்கு இரண்டு முறை செக் செய்து கொள்ளுங்கள். அதே போல சார்ஜ் போடுவதற்கான ஆப்ஷனையும் சரியாக பொருத்துங்கள். உங்கள் வீட்டில் சார்ஜ் போடுகிறீர்கள் என்றால் அதற்கான சார்ஜரையும் சேர்த்து வாங்க வேண்டும். இது எல்லாம் சேர்த்து ஒரு பெட்ரோல் காரை இவிகாராக மாற்ற ரூ4-6 லட்சம் செலவு செய்ய வேண்டும்.

நீங்கள் பெட்ரோல் வாகனத்தை சிஎன்ஜியாக மாற்றினாலும் சரி, எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றினாலும் சரி நீங்கள் மாற்றம் செய்ததை ஆர்டிஓவில் அப்டேட் செய்ய வேண்டும். உங்கள் வாகன ஆர்சியில் இது அப்டேட் செய்யப்படும். அதன் பிறகு தான் நீங்கள் வாகனத்தை இயக்க வேண்டும். அதே நேரம் நீங்கள் வாகனத்திற்காக வாங்கிய இன்சூரன்ஸ் நிறுவனத்திடமும் இதற்கான அப்டேட்டை செய்ய வேண்டும். அப்பொழுது தான் இன்சூரன்ஸ் செல்லுபடியாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவி, அல்லது சிஎன்ஜி கார்களை வாங்க தவறியவர்கள் சற்று பணம் செலவு செய்து உங்கள் வாகனத்தை சிஎன்ஜி வாகனமாகவோ அல்லது இவி வாகனமாகவோ மாற்ற முடியும். இதனால் எரிபொருள் செலவு குறைகிறது. பலர் இதற்கு அதிகம் செலவாகும் என நினைத்துக்கொண்டிருப்பார்கள் ஆனால் மேல சொன்ன விபரங்களின் படி தான் செலவாகும்.


Click it and Unblock the Notifications









