தீபாவளிக்கு போனஸ் எல்லாம் கிடையாது அதுக்கு பதிலா கார வச்சுக்கோங்க! இப்படி ஒரு முதலாளி கிடைக்குறது ரொம்ப கஷ்டம்
சென்னையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அதன் பணியாளர்களுக்கு கார் மற்றும் பைக்குகளை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியது. தீபாவளிக்கு சில நிறுவனங்கள் போனஸ் வழங்குவது வழக்கம். ஆனால், இந்த நிறுவனம் ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டு வாகனங்களை பரிசாக வழங்கி இருந்தது. 28 கார்கள் மற்றும் 29 பைக்குகள் பரிசாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. சொகுசு கார்கள் தொடங்கி வழக்கமான கார்கள் வரை வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே மற்றொரு நிறுவனமும் அதன் ஊழியர்களுக்கு வாகனங்களை பரிசாக வழங்கி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹரியானாவை மையமாகக் கொண்டு இயங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனமே அதன் ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கி இருக்கின்றது. இந்த பரிசளிப்பு தீபாவளி பண்டிகையை முன்னிட்டே வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. 15 ஊழியர்களுக்கே வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. அனைவருக்கும் காரே பரிசாக வழங்கப்பட்டு உள்ளது.

டாடா பஞ்ச் (Tata Punch) மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய கார் மாடல்களே பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றன. 13 பேருக்கு டாடா பஞ்ச் கார் மாடலும், 2 பேருக்கு மாருதி கிராண்ட் விட்டாராவும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
காரை பரிசாக பெற்றவர்கள் அனைவரும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிக சிறப்பாக உழைத்தவர்கள் என கூறப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே 15 பேரும் தேர்வு செய்யப்பட்டு வாகன பரிசளிப்பு நிகழ்த்தப்பட்டு இருக்கின்றது. சென்ற ஆண்டும் இந்த நிறுவனம் காரை அதன் ஊழியர்களுக்கு பரிசாக வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. கடந்த ஆண்டில் 12 கார்களே பரிசாக வழங்கப்பட்டன.

மிட்ஸ்கைண்ட் ஹெல்த்கேர் (Pharmaceutical company) எனும் நிறுவனமே காரை பரிசாக வழங்கி இருக்கும் ஆகும். ஹரியானாவின் பஞ்ச்குலா பகுதியிலேயே இந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் அமைந்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. டாடா பஞ்ச் மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா இந்த இரண்டும் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல் ஆகும். குறிப்பாக, பஞ்ச் அதிக பாதுகாப்பிற்கும், கிராண்ட் விட்டாரா அதிக பிரீமியம் மற்றும் மைலேஜ் திறனுக்கு பெயர்போனதாகக் காட்சியளிக்கின்றது.
டாடா பஞ்ச்: இந்தியாவில் இந்த கார் பல முகங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதாவது, பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் மின்சாரம் ஆகிய வெர்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, இந்த கார் மாடல் பாதுகாப்பு விஷயத்திலும் நல்ல ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்ற வாகனமாகக் காட்சியளிக்கின்றது.
அது ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களையே பெற்றிருக்கின்றது. குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த தரமான பாதுகாப்பு ரேட்டிங்கை அது பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடல் ரூ. 6.13 லட்சம் என்கிற குறைவான ஆரம்ப விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக இரட்டை ஏர் பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ்,பனி மின் விளக்கு, ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ஆஃப்-ரோடை சமாளிக்கும் பொருட்டு 187 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸும் பஞ்ச்-க்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, 90 டிகிரி அளவில் திறக்கும் வசதிக் கொண்ட கதவு, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மழை பொழிந்தால் தானாகவே வைப் ஆகும் வைப்பர்கள் உள்ளிட்ட அம்சங்களும் பஞ்ச் காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கார் ஊழியர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை பெரும் உதவியாக இருக்கும்.
மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா: இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் கார் மாடல்களில் ஒன்றாக இது காட்சியளிக்கின்றது. இந்த கார் நாட்டில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் பெட்ரோல் ஆப்ஷன் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 27.97 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி ஆப்ஷன் ஒரு கிலோவிற்கு 29 கிலோ மீட்டர் வரையிலும் மைலேஜ் தரும்.
இதேபோல் இந்த காரில் பிரீமியம் அம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. எல்இடி பகல்நேர லைட்டுகள், பாடி கிளாடிங், ஹெட்லேம்ப் க்ளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட் கேமிரா, வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட், கார் இணைப்பு தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, ஆறு ஏர் பேக், ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ரூ. 10.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா பஞ்ச் அதிக பாதுகாப்பான கார் மாடலாகும். இது பாதுகாப்பான பயணங்களுக்கு வழிவகுக்கும். இதேபோல், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா அதிகம் மைலைஜ் தரக் கூடிய கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இதன் வாயிலாக பெரும் எரிபொருள் சிக்கனத்தைச் செய்து நம்முடைய பாக்கெட்டை (பணத்தை) பாதுகாத்துக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








