சாதாரணமா பஸ் ஓட்றது இவ்ளோ பெரிய ஆளா! உண்மை தெரிஞ்சதும் வாயடைத்து போன பயணிகள்! செல்ஃபி எடுக்க போட்டி போட்றாங்க!
குழந்தைகளை பார்த்து வளர்ந்த பின் என்னவாக ஆசை? என கேட்டால், பலர் சொல்லும் பதில் பைலட் (Pilot) என்பதாக இருக்கும். விமானங்களில் பைலட்டாக வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை குழந்தைகள் பலரிடமும் காணப்படுகிறது.
ஆனால் அந்த குழந்தைகளில் ஒரு சிலரால் மட்டுமே பைலட் கனவை நிறைவேற்றி, விமானத்தை இயக்க முடிகிறது. அப்படி சிறு வயது முதலே கனவுடன் இருந்து பைலட் ஆனவர்தான் ஸ்ரீ ஹரி (Sreehari). இவர் கேரள (Kerala) மாநிலம் காசர்கோடு (Kasargod) பகுதியை சேர்ந்தவர்.

குழந்தையாக இருந்தபோது வாகனங்கள் மீது காதல் கொண்டவராக ஸ்ரீ ஹரி இருந்துள்ளார். இந்த காதல்தான் தற்போது அவரை விமானத்தின் பைலட் ஆக மாற்றியுள்ளது. நான்காவது படிக்கும்போதே எப்படி கார் (Car) ஓட்ட வேண்டும்? என்பதை ஸ்ரீ ஹரி கற்று கொண்டு விட்டார் என்பது உண்மையிலேயே நமக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
இதை விட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஏழாவது படிக்கும்போதே அவர் பஸ் (Bus) ஓட்ட கற்று கொண்டு விட்டார். ஸ்ரீ ஹரியின் அப்பா தனியார் பஸ் உரிமையாளர் என்பதுதான் இதற்கு காரணம். கார், பஸ் என படிப்படியாக வளர்ந்த அவர் தற்போது விமானங்களை இயக்கும் அளவிற்கு கை தேர்ந்துள்ளார்.

22 வயதிலேயே வர்த்தக ரீதியிலான பைலட் லைசென்ஸை ஸ்ரீ ஹரி பெற்று விட்டார். இதன் பின் ஏர்பஸ் ஏ320 (Airbus A320) விமானத்தை இயக்க அவர் தயார் ஆனார். ஆனால் கோவிட்-19 பிரச்னை காரணமாக அவரது பணி நியமனம் கிடப்பில் போடப்பட்டது. எனவே தனது பைலட் கனவை முழுமையாக்க அவர் மேலும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.
இந்த பொறுமை, அடுத்த ஒன்றரை வருடங்களில், அவரை முழுமையான பைலட் ஆக மாற்றியது. ஆம், சுமார் ஒன்றரை வருட காத்திருப்பிற்கு பிறகு, அவர் முதல் முறையாக விமானத்தை இயக்கினார். டெல்லி-பெங்களூர் (Delhi-Bengaluru) இடையேயான உள்நாட்டு சேவையுடன், ஸ்ரீ ஹரியின் பைலட் வாழ்க்கை தொடங்கியது.
ஆரம்பத்தில் ஏர் ஏசியா (Air Asia) நிறுவனத்தின் பணியாற்றிய அவர் தற்போது விஸ்தாரா (Vistara) நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தற்போது உள்நாட்டு அளவில் மட்டுமல்லாது, சிங்கப்பூர் (Singapore) மற்றும் சவுதி அரேபியா (Saudi Arabia) போன்ற வெளிநாடுகளுக்கும் அவர் விமானங்களை இயக்கி கொண்டுள்ளார்.
இங்கே ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பைலட் ஆக உருவெடுத்த பின்னரும் கூட, ஸ்ரீ ஹரி இன்னும் பழைய விஷயங்களை மறக்கவில்லை. விடுமுறை நாட்களில் தனது தந்தையின் தனியார் பஸ்ஸை அவர் இயக்கி கொண்டுள்ளார்! பஸ் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருப்பது பைலட் என்ற உண்மை தெரிந்ததும் பயணிகள் ஆச்சரியத்தில் உறைந்து விடுகிறார்களாம்!
தற்போது பைக் (Bike), கார், ஆட்டோ ரிக்ஸா (Autorickshaw), பஸ் மற்றும் விமானங்களை இயக்குவதற்கான லைசென்ஸ் அவரிடம் இருக்கிறது. ஸ்ரீ ஹரியை பற்றிய வைரல் வீடியோ (Viral Video)
ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. இந்த செய்தியின் முடிவில், அந்த வீடியோவை நீங்கள் காண முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பைலட் கனவை நிறைவேற்றுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அதற்கு தைரியம், விடாமுயற்சி மற்றும் பொறுமை ஆகியவற்றுடன் கூடவே பொருளாதார ரீதியிலான பலமும் அவசியம். இப்படி பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் பைலட் ஆக உருவெடுத்துள்ள ஸ்ரீ ஹரிக்கு நமது வாழ்த்துக்கள்.
ஆனால் பைலட் ஆக உருவெடுத்த பின்னரும் கூட சர்வ சாதாரணமாக அவர் பஸ்களை ஓட்டி கொண்டிருப்பது உண்மையிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இது வாகனங்கள் மீதான அவரது காதலை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. இது போன்ற மனிதர்களை காண்பது என்பதெல்லாம் அரிதான ஒரு விஷயம்தான்! இதன் காரணமாக ஸ்ரீ ஹரியுடன் செல்ஃபி எடுக்க பயணிகள் பலர் ஆர்வம் காட்டுகிறார்களாம்.


Click it and Unblock the Notifications








