இடியே விழுந்தாலும் பஸ்ஸில் இனிமேல் இதை பண்ணீராதீங்க! இப்படி ஒரு உத்தரவு போடுவாங்கன்னு யாருமே எதிர்பாக்கல!
பஸ்களில் பயணம் செய்யும்போது, சக பயணிகளால் பல்வேறு பிரச்னைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. ஒரு சிலர் செல்போனில் மிகவும் சத்தமாக பேசுவதையும், பாடல்கள் கேட்பதையும், வீடியோக்களை பார்ப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இது மற்றவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வது கிடையாது.
அப்படிப்பட்டவர்களுக்கு 'செக்' வைக்கும் வகையில் அதிரடியான உத்தரவு ஒன்றை பெஸ்ட் (BEST) தற்போது பிறப்பித்துள்ளது. Brihanmumbai Electric Supply and Transport (பிரிஹான்மும்பை எலெக்ட்ரிக் சப்ளை அண்டு டிரான்ஸ்போர்ட்) என்பதன் சுருக்கம்தான் BEST. மும்பை நகரில் பெஸ்ட்தான், பொது போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது.

பெஸ்ட் நிறுவனத்திடம் மொத்தம் 3,400க்கும் மேற்பட்ட பஸ்கள் இருக்கின்றன. பெஸ்ட் நிறுவனத்தின் பேருந்துகளில் தினமும் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த பெஸ்ட் பஸ்களில் பயணம் செய்யும்போது பயணிகள் இனி செல்போன்களில் மிகவும் சத்தமாக பேச கூடாது. அதேபோல் செல்போனில் மிகவும் சத்தமாக பாடல்களை கேட்கவும், வீடியோக்களை பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பயணிகள் ஹெட்போன்களை பயன்படுத்தி கொள்ளலாம். மற்ற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பெஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக பெஸ்ட் நிறுவனத்திற்கு பயணிகள் பலர் தொடர்ச்சியாக புகார்களை அனுப்பி கொண்டே இருந்தனர்.

அதன்பேரில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் பெஸ்ட் பெஸ்களில் செல்போன் மூலம் பாடல்களை கேட்பதாக இருந்தாலும், வீடியோக்களை பார்ப்பதாக இருந்தாலும் ஹெட்போன்களை பயன்படுத்துவது அவசியம். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது, பாம்பே போலீஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பெஸ்ட் தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பெஸ்ட் நிறுவனத்தின் பஸ்களில் இந்த உத்தரவு தொடர்பான விளம்பரங்கள் இனி ஒட்டப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒரு நடவடிக்கைதான். செல்போனில் சத்தமாக பேசுவதும், பாடல்களை கேட்பதும், வீடியோக்களை பார்ப்பதும் மிகவும் அதிகமாக நடக்கிறது.
இது சக பயணிகளுக்கு மட்டுமல்லாது, டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கும் கூட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மை. குறிப்பாக டிரைவர்களின் கவனம் திசை திரும்புவதற்கு சில சமயங்களில் இது காரணமாக அமைந்து விடுகிறது. பஸ்களில் பயணம் செய்யும் அத்தனை பேரின் பாதுகாப்பிற்கும் டிரைவர்கள்தான் பொறுப்பாகின்றனர்.
அவர்களின் கவனம் திசை திரும்பினால், சாலை விபத்துக்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். தற்போதைய நாட்களில் பஸ்களில் லேப்டாப் மூலமாக வேலை செய்து கொண்டே வருபவர்களின் எண்ணிக்கையும் கூட அதிகமாக இருக்கிறது. எனவேதான் இந்த உத்தரவை வரவேற்க கூடிய ஒன்று என கூறுகிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெறும் உத்தரவுடன் நின்று விடாமல், இந்த விதிமுறையை முறையாக அமல்படுத்துவது அவசியம். அதேபோல் தமிழ்நாடு அரசும் இந்த உத்தரவை அமல்படுத்தினால் நன்றாக இருக்கும். இதுதவிர டிரைவர்கள் பஸ்களை இயக்கும்போது, செல்போனில் பேசுவது ஒரு சில இடங்களில் இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது. அதையும் அரசு கண்காணித்து, நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








