மத்திய அரசுக்கு எங்கிருந்துதான் இந்த ஐடியா எல்லாம் தோணுதோ!! 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு... 10,000 இ-பேருந்து
பிரதமர் இ-பேருந்து சேவை (PM e-bus Sewa)-க்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. எலக்ட்ரிக் பேருந்துகளின் மூலம் செயல்படவுள்ள பிரதமர் இ-பேருந்து சேவையின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதையும், இந்த திட்டத்தின் மொத்த நிதி எவ்வளவு? என்பதையும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நாட்டின் ஒவ்வொரு மாநகரத்தையும் அழகாக காட்ட வேண்டும் என்கிற குறிக்கோள் உடன் நமது மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதேபோல், தொடர்ந்து மாறிவரும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ப, மாநகரங்களில் மக்களின் பொது போக்குவரத்தையும் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.

மெட்ரோ இரயில் சேவைகள், வந்தே பாரத் இரயில் சேவைகள் உள்ளிட்டவை அதன் வெளிப்பாடே ஆகும். இந்த இரயில் சேவைகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலையில், மாநில அரசாங்கங்கள் பொது பேருந்து சேவைகளில் தங்களது ஈடுப்பாட்டை காட்டி வருகின்றன. குறிப்பாக, எலக்ட்ரிக் பேருந்துகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மாநகரத்திற்குள் இயங்கும் மாநகர அரசு பேருந்துகள் பல்வேறு இந்திய மாநிலங்களில் எலக்ட்ரிக்கில் வந்துவிட்டன.
நமது சென்னையில் கூட அவ்வப்போது எலக்ட்ரிக் மாநகர அரசு பேருந்துகள் கொடியசைத்து பயன்பாட்டிற்கு வருவதை பார்க்க முடியும். இதேபோன்று மத்திய அரசாங்கமும் 'பிரதமர் இ-பேருந்து சேவை' என்கிற பெயரில் சுமார் 10,000 எலக்ட்ரிக் பேருந்துகளை நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் இ-பேருந்து சேவைக்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

புது டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், இந்த முடிவு நகரங்களில் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் மற்றும் இந்தியாவின் காலநிலை மாற்றம் தொடர்பான ஒரு நடவடிக்கையாகவும் இருக்கும் என அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அமைச்சர், "பிரதமர் இ-பேருந்து சேவைக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு விட்டது. இந்த திட்டத்தில் மொத்தம் ரூ.57,613 கோடி செலவிடப்பட உள்ளது. இந்த நிதியின் மூலமாக கிட்டத்தட்ட 10,000 புதிய எலக்ட்ரிக் பேருந்துகள் நாடு முழுவதும் வழங்கப்பட உள்ளன" என்றார். 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இந்த திட்டத்தில் உட்படுகின்றன.

ஆதலால், சென்னை, டெல்லி போன்ற முக்கிய மாநகரங்கள் மட்டுமின்றி, வடகிழக்கு இந்திய நகரங்கள், மலை பிரதேச நகரங்கள் மற்றும் யூனியன் பிரதேச நகரங்கள் கூட இந்த திட்டத்தில் அடங்கவுள்ளன. குறிப்பாக, முறையான பேருந்து சேவைகள் இல்லாத நகரங்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பேசிய அனுராக் தாக்கூர், "ரூ.57,613 கோடியில் ரூ.20,000 கோடி மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும். இந்த திட்டத்தின்படி, நகர பேருந்து செயல்பாடுகள் பொது-தனியார் கூட்டணியில் நிறைவேற்றப்படும். இந்த திட்டம் 10 வருடங்களுக்கு பேருந்து செயல்பாடுகளை ஆதரிக்கும்" என கூறினார். இது எல்லாவற்றையும் விட இந்த திட்டம் 45 ஆயிரத்தில் இருந்து 55 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பிரதமர் இ-பேருந்து சேவை திட்டம் ஆனது எலக்ட்ரிக் பேருந்துகளுக்கு ஆதரவளிப்பதாக உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் தீவிரமாக உள்ளது. ஃபேம்-2 திட்டத்தின்படி, எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்கிவரும் நம் மத்திய அரசு அதன் புதிய திட்டத்தில் நகர போக்குவரத்து சேவையை மேம்படுத்தி இருப்பது மட்டுமின்றி, எலக்ட்ரிக் பேருந்துகளின் பயன்பாட்டையும் ஊக்குவிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.


Click it and Unblock the Notifications
