முத்துக்கள் மாதிரியான வார்த்தை.. மோடி வாயிலிருந்தே வந்திருச்சு! அப்புறம் என்ன எல்லாரும் கிளம்ப தயாரா இருங்க!
ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பாக பறக்கும் டாக்சி (Air Taxi)கள் இருக்கின்றன. இது இந்தியாவில் சீக்கிரமே பயன்பாட்டிற்கு வந்துவிடும் என நீண்ட காலமாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே பிரதமர் மோடியின் வாயில் இருந்து சில சூப்பரான வார்த்தைகள் வெளி வந்திருக்கின்றன. வியாழன் (செப்டம்பர் 12) அன்று நடைபெற்ற சிவில் விமானப் போக்குவரத்துக்கான இரண்டாவது ஆசிய பசிபிக் அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துக் கொண்ட பிரதமர், "இந்தியாவில் மலிவு விலையில் விமான டாக்சிகள் விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்" என தெரிவித்தார்.
இதுகுறித்து மாநாட்டில் மேலும் பேசி அவர், "அனைவரின் பறக்கும் கனவும் விரைவில் நிறைவேறும். அனைவருக்கும் வானம் திறந்திருக்கும்" என்றும் அவர் கூறினார். ஆகையால், இந்தியாவில் பறக்கும் டாக்சி நாம் எதிர்பார்த்திராத அளவிற்கு குறைவான கட்டணத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக பிரதமர் மோடியின் வார்த்தைகளும் அமைந்துள்ளன. தலைநகர் டெல்லியில் உள்ள பாரத்த மண்டபத்தில் செப்டம்பர் 11 - 12 ஆகிய இரண்டு நாட்களாக இந்த மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தகுந்தது. இதில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தை சார்ந்த முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
மேலும், சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான பல்வேறு கருத்துக்கள் அங்கு வாதிடப்பட்டன. குறிப்பாக, நகர்புறங்களில் வாழும் மக்களின் பயணத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு விஷயங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதுதவிர, வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கிலும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் பறக்கும் டாக்சி மலிவு விலையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கும் தகவலை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்துத் துறை கடந்த பத்து ஆண்டுகளில் மாபெரும் முன்னேற்றங்களையும், வளர்ச்சியையும் கண்டிருக்கின்றது. குறிப்பாக, மக்கள் பலர் தற்போது டவுன் பஸ்ஸை போல விமானங்களை பயன்படுத்தி வருவதை நம்மால் காண முடிகின்றது.
மிக முக்கியமாக மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்குகூட பலர் விமான போக்குவரத்தை பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக, உதான் திட்டத்தின் கீழ் 1.4 கோடிக்கும் அதிகமானோர் விமானங்களில் பயணித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதை இன்னும் அதிகப்படுத்தும் நோக்கில் இந்தியா 1,200-க்கும் அதிகமான விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.
இதன் வாயிலாக விமான சந்தையில் மிக வேகமாக வளர்ந்து நாடாக இந்தியா மாறியிருப்பது துள்ளியமாக தெரிகின்றது. இந்த நிலையிலேயே விரைவில் பறக்கும் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வர இருப்பதும் உறுதியாகி இருக்கின்றது. இவை முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய அரசு மட்டுமில்லைங்க, நம் தமிழக அரசும் பறக்கும் டாக்சி சேவையை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் தமிழக அரசு உலக புகழ்பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் (Boeing) உடன் கூட்டணியைத் தொடங்கியது.
இந்த கூட்டணியே விரைவில் சென்னையில் ஏர் டாக்சிகளை அறிமுகப்படுத்த உள்ளது. ஆகையால், இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னதாகவே தமிழகம் பறக்கும் டாக்சி சேவையைப் பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் ஹெலிகாப்டர் சேவை பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்தே, பறக்கு டாக்சிகளையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
இந்த பறக்கும் டாக்சிகள் பறப்பதற்கு விமானங்களுக்கு தேவைப்படுவதை போல பெரிய ஓடுதளம் தேவைப்படாது. அவை ஹெலிகாப்டர்களை போல இருந்த இடத்தில் இருந்தே பறத்தல் மற்றும் தரையிறங்குதல் ஆகியவற்றைச் செய்யும். இத்தகைய பறக்கும் டாக்சிகளையே சென்னைக்காக தயார் செய்ய இருக்கின்றது புகழ்பெற்ற விமான தயாரிப்பு நிறுவனம் போயிங்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மாதிரியான முயற்சிகளின் காரணத்தினால் விரைவில் நாட்டில் ஓலா, ஊபர் கால் டாக்சியைப் போலவே பறக்கும் டாக்சிகளும் அதிகளவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, விலையிலும் அவை மலிவாகவே இருக்கும் என தெரிகின்றது.


Click it and Unblock the Notifications









