டீ குடிச்சிட்டு சென்னைல ஏறுனா டிபன் சாப்பிட பெங்களூரு போயிரலாம்! சென்னை- மைசூரு வந்தே பாரத் ரயில் துவக்கம்
சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு வந்தே பாரத் ரயிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை- மைசூர் இடையே வந்தே பாரத் ரயிலைப் பிரதமர் மோடி இன்று பெங்களூருவில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 500 கி.மீ தூரத்தை வெறும் 6.30 மணி நேரத்தில் செல்லும் விதமாக இந்த ரயில் செயல்படுத்தப்படவுள்ளது.

வந்தே பாரத் முழுவதுமாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ரயில் இந்த ரயில் ஜப்பானில் புல்லட் ரயிலின் தரத்திற்கு முழுவதுமாக ஏசி பெட்டிகளுடன் அதிக வேகமாகச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இந்தியாவின் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் நீட்சியாக தற்போது சென்னை - மைசூரு இடையே சென்னை- பெங்களூரு, பெங்களூரு-மைசூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதை இன்று பெங்களூருவில் பிரதமர் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்துள்ளார். சென்னையில் தன் பயணத்தைத் துவங்கும் இந்த ரயில் காட்பாடி, மற்றும் பெங்களூரு ஆகிய இரண்டு நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தன் முழு வேகத்தில் இயங்கினால் சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு வெறும் 3 மணி நேரத்தில் பயணிக்க முடியும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது இந்த ரயில் சென்னை - பெங்களூரு பயணத்திற்கு 4.30 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.
இந்த வந்தே பாரத் ரயில் சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரயில் கோச் ஆலையில் உருவாக்கப்பட்டது அவர்கள் இந்த ரயிலுக்கு இன்டலிஜென்ட் பிரேக்கிங் சிஸ்டம் என்ற தொழிற்நுட்பத்தை கொடுத்துள்ளனர். அதாவது இந்த ரயிலைக் குறுகிய நேரத்தில் வேகத்தை பிக்கப் செய்யவும் குறுகிய நேரத்தில் பாதுகாப்பாக வேகத்தைக் குறைக்கவும் முடியும்.
இந்த ரயிலின் அனைத்து கோச்சுகளும் ஆட்டோமெட்டிக் கதவுகள், ஜிபிஎஸ் கொண்டு இயங்கும் ஆடியோ விஷூவல் பயணிகள் தகவல் சிஸ்டம், ஆன்ஃபோர்டு ஹாட்ஸ்பாட் வைஃபை வசதி, சொகுசான சீட் வசதி ஆகிய வசதிகள் இந்த ரயில் உள்ளது. இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் கடந்த 2019ம் ஆண்டு பிப்15 ம்தேதி டில்லி - கான்பூர், அலகாபாத் -வாரணாசி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டது.
இந்த ரயிலில் மொத்தம் 2 விதமான வகுப்புகள் உள்ளன சேர் கார் மற்றும் எக்ஸிக்யூட்டிவ் கிளாஸ் ஆகிய வகுப்புகள் உள்ளன. இதில் பயணிக்கச் சென்னையிலிருந்து மைசூரு செல்ல ஒரு நபருக்கு சேர் காரில் ரூ1200 மற்றும் எக்ஸிக்யூட்டிவ் கிளாஸில் ரூ2295 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவே மைசூருவிலிருந்து சென்னைக்குப் பயணிக்க சேர்காரில் ரூ1365, எக்ஸிக்யூடிவ் கிளாஸில் ரூ2486 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பிரதமர் மோடி சென்னை-மைசூரு வந்தே பாரத் ரயிலைத் துவக்கி வைத்துள்ள நிலையில் தென்னிந்தியாவிற்கு வந்த முதல் வந்தே பாரத் ரயில் இது தான். இந்த ரயிலுக்கான டிக்கெட்டை ஐஆர்சிடிசி தளத்தில் புக் செய்யலாம். இந்த ரயில் தினமும் காலை 5.50 மணிக்கு சென்னை சென்டரலில் புறப்பட்டு 10.20க்கு பெங்களூருக்கும், 12.20க்கு மைசூருக்கும் செல்கிறது. மைசூருவிலிருந்து மதியம் 1.05க்கு கிளம்பி 2.55க்கு பெங்களூருவுக்கும், இரவு 7.30க்கு சென்னைக்கும் வருகிறது.


Click it and Unblock the Notifications