அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
இந்தியாவில் அடுத்த 5 வருடங்களில் மக்கள் அனைவரும் முன்பதிவு செய்யப்பட்ட இரயில் பெட்டிகளில் மட்டுமே பயணம் செய்வார்கள் என பிரதமர் உறுதியளிப்பதாக மத்திய இரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.
மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், அடுத்த 5 வருடங்களில் இரயிலில் பயணம் செய்ய விரும்பும் எந்தவொரு பயணியும் எளிதாக உறுதி செய்யப்பட்ட டிக்கெட் (Confirmed Ticket)-ஐ பெற முடியும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உறுதியளித்துள்ளதாக கூறியுள்ளார்.

தனியார் ஊடக செய்தி நிறுவனத்துக்கு அளித்த இந்த பேட்டியில், கடந்த 10 வருடங்களில் இரயில்வேயில் பல்வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்களை பிரதமர் செய்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய இரயில்வே அமைச்சர், "அடுத்த 5 வருடங்களில், இரயில் பயணம் செய்ய விரும்பும் எந்தவொரு பயணிகளும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை எளிதாக பெறக்கூடிய வகையில் இரயில்வேயின் திறன் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் மோடி உத்தரவாதம் அளிக்கிறார்" என கூறியுள்ளார்.
இரயில்வே அமைச்சரின் கூற்றுப்படி, 2004ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரையில் அந்த 10 வருடங்களில் வெறும் 17 ஆயிரம் கிமீ தொலைவிற்கு மட்டுமே இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. ஆனால், 2014இல் இருந்து 2024 வரையில் சுமார் 31 ஆயிரம் கிமீ தொலைவிற்கு இரயில் தண்டவாளங்கள் புதியதாக போடப்பட்டுள்ளன. அதேபோல், 2004- 2014 சமயத்தில் ஏறக்குறைய 5 ஆயிரம் கிமீ தொலைவிற்கு மின்சார இரயில் பாதைகள் இருந்தன.

ஆனால், கடந்த 10 வருடங்களில் சுமார் 44 ஆயிரம் கிமீ தொலைவுக்கு இரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இந்த புள்ளி விபரங்கள் யாவும் இரயில்வே அமைச்சர் வெளியிட்டவை ஆகும். இதுதொடர்பாக மேலும் பேசிய இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 2004 - 2014 காலக்கட்டத்தில் வெறும் 32,000 இரயில் பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன என்றும், ஆனால், கடந்த 10 வருடங்களில் 54,000 இரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சரக்கு இரயில்களுக்கு மட்டும் என தற்போது 2,734கிமீ தொலைவிற்கு 2 வழித்தடங்கள் உள்ளன. ஆனால், 2014ஆம் ஆண்டிற்கு முன்பு வரையில் சரக்கு இரயில்களுக்கு என நாட்டில் ஒரு பிரத்யேகமான வழித்தடம் கூட இல்லை என அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அடுத்த 5 வருடங்களில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இரயில்வேஸ் மிக முக்கியமான பகுதியாக விளங்கும் என இரயில்வே அமைச்சர் உறுதியாக கூறுகிறார்.

மேலும் பேசிய அமைச்சர், இரயில்வே துறை மேலும் பலப்படுத்தப்பட்டு, குறிப்பாக பயணிக்களுக்கான வசதிகள் மிக வேகமாக விரிவுப்படுத்தப்படும் என்றார். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுவரும் சூழலில் இவ்வாறான ஒரு பேட்டியை மத்திய இரயில்வே துறை அமைச்சர் வழங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலின் 2ஆம் கட்டம் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி துவங்கவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுவரும் சூழலில் இவ்வாறான ஒரு அறிக்கையை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளதால், இது தேர்தலுக்கான பேட்டியாகவே பார்க்கப்படுகிறது. அமைச்சர் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களை எல்லாம் உண்மையான என சரிப்பார்ப்பதற்கு நமக்கு சில நாட்கள் தேவைப்படும். இருப்பினும், மத்திய அமைச்சர் தவறான தகவல்களை வழங்கமாட்டார் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications









