சும்மா சீறி பாயலாம்! 1380 கி.மீ தூரத்திற்கு இந்தியாவிலேயே சிறந்த எக்ஸ்பிரஸ் சாலையை கட்டமைக்கும் பணிகள் தீவிரம்
இந்தியாவின் மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் சாலையான டில்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலையின் ஒரு பகுதியின் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த சாலை முழுமையாகக் கட்டமைக்கப்பட்டால் பயண நேரம் பாதியாகக் குறையும். தற்போது டில்லி- ஜெய்பூர் இடையே 5 மணி நேரமாக இருந்த பயணம் 3 மணி நேரமாகக் குறைந்துள்ளது. இது குறித்து விரிவாகக் காணலாம்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்12ம் தேதி) சோன்ஹா - டவ்ஷா இடையேயான டில்லி- மும்பை எக்ஸ்பிரஸ் சாலையைத் திறந்து வைத்தார். இந்த சாலை டில்லி - ஜெய்ப்பூர் இடையேயான 245 கி.மீ தூரத்தை வெறும் 3 மணி நேரத்தில் கடக்க உதவுகிறது.

முன்னதாக இந்த இரு நேரங்களுக்கு இடையே சாலை வழிப் பயணம் 5 மணி நேரமாக இருந்தது. இந்த டில்லி-ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் சாலை மத்திய அரசின் 1380 கி.மீ தூரம் உள்ள டில்லி- மும்பை எக்ஸ்பிரஸ் சாலையின் ஒரு பகுதியாகும். இந்த சாலை இந்தியாவில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலைகளுக்கு ஒரு மகுடம் என்றே சொல்லலாம்.
இந்த சாலைக்காக மத்திய அரசு ரூ12,150 கோடி பணம் ஒதுக்கியுள்ளது. இதில் தற்போது திறக்கப்பட்டுள்ள சோன்ஹா - டவ்ஷா சாலை 160 கி.மீ நீளம் கொண்டது. இது ஹரியானா மாநிலத்தில் குர்கிராம், பல்வால், நூவா ஆகிய மாவட்டங்களைக் கடந்து செல்கிறது. குர்கிராம் மாவட்டத்தில் 11 கிராமங்கள், பல்வால் மாவட்டத்தில் 7 கிராமங்கள், நூவா மாவட்டத்தில் 47 கிராமங்கள் வழியாக இந்த சாலை பயணித்து டில்லி- மும்பை எக்ஸ்பிரஸ் சாலையுடன் இணைகிறது.

இந்த சாலை இந்தியாவின் தலைநகர் டில்லியையும், தொழிற்துறை தலைநகர் மும்பையையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சோன்ஹா - டவ்ஷா இடையே தற்போது திறக்கப்பட்டுள்ள சாலை மொத்தம் 8 லேன்களை கொண்டது. இதை எதிர்காலத்தில் 12 லேன்களாகவும் மாற்றிக்கொள்ளலாம்.
டிராஃபிக்கை பொருத்து எதிர்காலத்தில் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். இந்த சாலை மூலம் டில்லி- மும்பை இடையே சாலை வழி போக்குவரத்திற்கான நேரம் பாதியாகக் குறையும் தற்போது 24 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும் இந்த பயணம் இந்த சாலை அமைந்துவிட்டால் 12 மணி நேரமாகக் குறையும் எனக் கருதப்படுகிறது.

இந்த டில்லி -மும்பை எக்ஸ்பிரஸ் சாலை 6 மாநிலங்கள் இடையே செல்கிறது. டில்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இடையே கடந்து செல்கிறது. இந்த சாலை டில்லி - மும்பை என்ற இரு நகரங்களை மட்டும் இணைக்கவில்லை. டில்லி -கோட்டா, இந்தூர், ஜெய்பூர், போபால், வதோதரா, சூரத் ஆகிய நகரங்களையும் இணைக்கிறது.
இந்த சாலையின் கட்டமைப்பு முடிந்துவிட்டால் இந்தியாவிலேயே நீளமான எக்ஸ்பிரஸ் சாலை இதுவாக தான் இருக்கும். இந்த சாலை நகரங்களை மட்டும் இணைக்கவில்லை 13 துறைமுகங்கள், 8 பெரிய விமான நிலையங்கள், 8 மல்டி நோடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க்கள் ஆகியவற்றையும் இணைக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் சாலை குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்!


Click it and Unblock the Notifications








