இன்னும் 5 நாளில் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் துவக்கம்! எங்கெங்கு நிற்கும்? டிக்கெட் விலை என்ன?
வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து மதுரை வழியாக நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் சேவையை துவக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் துவக்க விழாவிற்கு பிரதமர் மோடி வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றன. பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் வரிசையாக அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது இரண்டு வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே இயங்கி வருகிறது.

அதன்படி சென்னையில் இருந்து ஈரோடு வழியாக கோவைக்கும், சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூரூவிற்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது. பலர் இந்த ரயிலில் பயணிக்க விரும்புகின்றனர். இந்நிலையில் மூன்றாவதாக தமிழகத்திற்கு மற்றும் ஒரு வந்தே பாரத் ரயில் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, மதுரை வழியாக நெல்லை வரை இந்த வந்தே பாரத் ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 6 தேதி இந்த நெல்லை சென்னை வந்தே பாரத் ரயில் துவக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வந்தே பாரத் ரயிலில் மொத்தம் எட்டு கோச்சுகள் பொருத்தப்பட உள்ளன. இந்த ரயில் தற்போது திருச்சி மற்றும் மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் விழுப்புரத்திலும் நின்று செல்லுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே தெளிவான பதில் எதையும் அளிக்கவில்லை. ரயிலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது தான் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.
இந்த வந்தே பாரத் ரயிலில் பாதுகாப்பு அம்சம் மிக முக்கியமான விஷயமாக பின்பற்றப்படுகிறது. இந்த ரயிலில் பாதுகாப்பிற்காக கவச் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இது ரயில் விபத்துக்களை தடுக்கும் ஒரு முக்கியமான கருவியாகும். மேலும் அனைத்து கோட்ச்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில் நடக்கும் அனைத்தும் பதிவாகும்.

ரயில் வேகமாக பயணிக்கும் போது பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயிலில் ஆட்டோமேட்டிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது ரயில் கிளம்பும் முன்பே மூடிவிடும் ரயில் நின்ற பின்பு தான் திறக்கும். இடையில் ரயிலில் இருந்து யாரும் வெளியே எட்டிப் பார்க்கவும் எதையும் தூக்கி வீசவும் முடியாது.
இந்த வந்தே பாரத் ரயிலில் மொத்தம் இரண்டு விதமான கோச்சுகள் உள்ளன. எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் மற்றும் எக்கனாமிக் சேர் கார் என இது பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் விலையை பொறுத்தவரை எக்ஸிக்யூடிவ் சேர் காரில் சென்னையிலிருந்து நெல்லை வரை பயணிக்க ரூபாய் 3000 கட்டணமாகவும் எக்னாமிக்ஸ் சேர்காரில் ரூபாய் 1400 முதல் 1500 வயதான கட்டணமும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது பயணிகளுக்கு உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நெல்லை சென்னை இடையே உள்ள பயண நேரம் சுமார் 10 மணி நேரமாக இருப்பது 8 மணி நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை வந்தே பாரத் ரயில் காலை 6 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னைக்கு சென்றடையும் என்றும், அதே நேரம் சென்னையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு நெல்லையை வந்தடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயிலை பிரதமர் மோடி வரும் 6ம் தேதி பச்சை கொடி அசைத்து துவக்கி வைக்கிறார். எங்கு வைத்து இந்த நிகழ்வு நடைபெற உள்ளது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. பெரும்பாலும் நெல்லை ரயில் நிலையத்தில் வைத்து தான் இந்த ரயிலின் துவக்க விழா என்பது நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலின் துவக்கம் என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவாகிவிட்டது. ஆகஸ்ட் 6ஆம் தேதி துவங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது பிரதமர் மோடி நேரில் பங்கேற்கும் நிகழ்வு என்பதால் இதற்கான இறுதி முடிவுகள் எல்லாம் பாதுகாப்பு காரணங்களுக்காக கடைசி நேரத்தில் தான் எடுக்கப்படும். பிரதமர் மோடி எங்கு வந்து துவக்கி வைக்கிறார் என்ற தகவல் எல்லாம் பின்னர் தெரிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications









