கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோவில் வந்தது இந்த காரில் தானா? இதன் விலை என்ன தெரியுமா?
பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக தற்போது இந்தியா முழுவதும் பயணம் செய்து வரும் நிலையில் இன்று கோவையில் ரோடு ஷோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் பயணம் செய்து வந்த கார் பலர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது என்ன கார் என்ற பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கார் குறித்த விரிவான விவரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
இந்தியாவின் மிகப்பெரிய தேர்தலான 2024-ம் ஆண்டிற்கான பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று கோவையில் திறந்தவெளி காரில் பயணித்தபடி ரோடு ஷோ ஒன்றை நடத்தினார்.

இதில் சாலையில் இருபுறங்களிலும் கூடி நின்ற மக்கள் மத்தியில் கைகாட்டியபடியே, ஊர்வலமாக இவர் வந்த கார் பயணம் செய்தது. பிரதமர் மோடியின் வருகையை பார்ப்பதற்காக ஏராளமான பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கே கூடி இருந்தார்கள். செய்தி ஊடகங்களில் எல்லாம் இந்த காட்சிகள் வைரலாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் பிரதமர் மோடி வந்த கார் முழுமையாக பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பலருக்கு இது என்ன கார் என்றே தெரியாத அளவிற்கு முற்றிலும் மூடப்பட்ட நிலையில் இந்த கார் இருந்தது. முன் பக்கம் பயணிகள் அமரும் இருக்கைகளுடன் இருந்த இந்த காரில் பின்பக்கம் திறந்த வெளியாக பிக்கப் டிரக் போன்ற வடிவமைப்பில் இருந்தது. இதனால் பலர் ஆச்சரியமாக இந்த கார் குறித்து பேச துவங்கினார்கள்.

பலருக்கும் இது எந்த நிறுவனத்தின் கார் என்ன மாடல் கார் என எந்த தகவலும் தெரியவில்லை. நாமும் இந்த காட்சியை பார்க்கும் போது காரில் ஆங்காங்கே தெரிந்த சில விஷயங்களை வைத்து இது என்ன கார் என்பதை கண்டுபிடித்துள்ளோம். அதன்படி பிரதமர் மோடி இது இசுஸு நிறுவனத்தின் ஹைலேண்ட் என்ற காரில் தான் தற்போது கோவையில் பயணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இசுஸு நிறுவனத்திடம் இது போன்ற பிக்அப் டிரக் மாடலில் ஏகப்பட்ட கார்கள் உள்ளன. மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது டிமேக்ஸ் விகிராஸ் கார் தான். இதுபோக டிமேக்ஸ் எஸ்கேப் என்ற டி போர்டு வெர்ஷன் கார் விற்பனையில் உள்ளது. ஆனால் பிரதமர் மோடி தற்போது வந்தது ஹைலேண்டர் எனப்படும் கார் தான். இந்த காரின் வடிவமைப்பை பார்க்கும் போதே இது இசுஸு நிறுவனத்தின் கார் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது.
இசுஸு நிறுவனத்தின் டிமேக்ஸ் விகிராஸ், டிமேக்ஸ் எஸ்கேப் மற்றும் ஹைலேண்டர் ஆகிய கார்கள் பார்க்க ஒரே மாதிரியாக தான் இருக்கும். ஆனால் அதில் சில மாற்றங்கள் இருக்கும் அதை வைத்து தான் இந்த கார் எந்த மாடல் கார் என்பதை நம்மால் உறுதியாக சொல்ல முடியும். டிமேக்ஸ் வி கிராஸ் காரை பொறுத்தவரை ரியர் வியூ மிரரில் டர்ன் இன்டிகேட்டர் இருக்கும். பிரதமர் மோடி பயணித்த காரில் இது இருக்காது.
டிமேக்ஸ் எஸ்கேப் காரை பொருத்தவரை உட்புறத்தில் வடிவமைப்பு டிராவல்ஸ் கேப் போல இருக்கும். மேலும் பிரதமர் பயணிக்கும் கார் ஒரு டி போர்டு கொண்ட காராக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதால் இந்த கார் இசுஸு நிறுவனத்தின் ஹைலேடர் காராக தான் இருக்க முடியும் என்ற முடிவிற்கு நாம் வரலாம். இதை பிரதமர் மோடி பிரச்சாரத்திற்காக மாடிஃபிகேஷன் செய்து பயன்படுத்தி வருகிறார்.
இந்த காரின் இன்ஜினை இதை பொருத்தவரை 1898 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 160.92 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் டீசல் எரிபொருளில் மட்டுமே இயங்கும் இன்ஜினாக இருக்கிறது. இந்த கார் மேனுவல் கியர் ஆப்ஷன் உடன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 20 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே பிக்கப் டிரக் ரக கார்களை விற்பனை செய்து வருகின்றன. தற்போது இசுஸு, டொயோட்டா மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இந்த ரக கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், பிரதமர் மோடி பயணித்தது இசுஸு கார்தான் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








