காங்கிரஸ் தொடங்கிய நெடுஞ்சாலையை முழுமையாக முடிக்காமல் அவசர அவசரமாக திறக்கிறார் மோடி.. காரணம் இதுதான்
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஒன்றின் பணிகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்பாகவே, அதனை பிரதமர் மோடி அவசர அவசரமாக திறந்து வைக்கவுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஒன்றின் பணிகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்பாகவே, அதனை பிரதமர் மோடி அவசர அவசரமாக திறந்து வைக்கவுள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குண்ட்லி-மனேசர்-பல்வால் இடையே (Kundli-Manesar-Palwal) கேஎம்பி எக்ஸ்பிரஸ் வே (KMP Expressway) அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த நீளம் சுமார் 135 கிலோ மீட்டர்கள் ஆகும்.

இதில், மனேசர்-பல்வால் இடையேயான சாலை கடந்த ஆண்டே திறக்கப்பட்டு விட்டது. இதனை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

ஆனால் குண்ட்லி-மனேசர் இடையேயான 83 கிலோ மீட்டர் தொலைவிற்கான சாலை திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த சூழலில், ஹரியானா திவாஸ் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கடந்த 1ம் தேதி, இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் அன்றைய தினத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வேறு பணிகள் இருந்த காரணத்தினால், திறப்பு விழா நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது. இந்த சூழலில், குண்ட்லி-மனேசர் இடையேயான 83 கிலோ மீட்டர் சாலையை, பிரதமர் நரேந்திர மோடி வரும் 10ம் தேதி திறந்து வைக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அங்கு இருந்தபடியே ரிமோட் கண்ட்ரோல் மூலமாக, கேஎம்பி எக்ஸ்பிரஸ் வே-யின் குண்ட்லி-மனேசர் சாலையை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

சரியாக அதே நேரத்தில் குண்ட்லி நகரிலும் மற்றொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், ஹரியானா மாநில முதல் அமைச்சர் மனோகர் லால் கட்டார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கேஎம்பி எக்ஸ்பிரஸ் வே அமைப்பதற்கான திட்டம் கடந்த 2006ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. 2009ம் ஆண்டே பணிகள் முடிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முடியவில்லை.

இதன் மொத்த மதிப்பீடு சுமார் 1,863 கோடி ரூபாய். கேஎம்பி எக்ஸ்பிரஸ் வே சாலையில் 8 சிறிய பாலங்களும், 6 பெரிய பாலங்களும் உள்ளன. இதுதவிர 4 ரயில்வே மேம்பாலங்களும் உள்ளன.

நாட்டின் தலைநகர் டெல்லியின் போக்குவரத்து நெரிசலை குறைக்க கேஎம்பி எக்ஸ்பிரஸ் வே உதவும். இதன் மூலமாக டெல்லியில் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ள காற்று மாசுபாடும் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கேஎம்பி எக்ஸ்பிரஸ் வே-வில் இன்னும் ஒரு சில பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''தெரு விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட ஒரு சில பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை.

இந்த பணிகளை எல்லாம் முழுமையாக செய்து முடிக்க இன்னும் 30-45 நாட்கள் ஆகும்'' என்றனர். அப்படி இருந்தும் கூட, பிரதமர் மோடியின் தேதி கிடைத்துள்ளதன் காரணமாகவே, வரும் நவம்பர் 10 அன்று அவசர அவசரமாக இந்த சாலை திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
More from DriveSpark
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications








