விமானத்தில் பறந்துக் கொண்டு இருந்தவரை இரயிலில் போக வெச்சிட்டீங்களே... 10 மணிநேர டிராவல்!!
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் போலாந்து மற்றும் உக்ரைன் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். முதலில் போலாந்து நாட்டிற்கு சென்ற இந்திய பிரதமர் பின்னர் அங்கிருந்து இரயில் மூலமாக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த இரயில் பயணத்தில் நம் பிரதமர் பயணித்த இரயிலின் பெயர் 'இரயில் ஃபோர்ஸ் ஒன்' ஆகும். இந்த இரயிலின் சிறப்பம்சங்களையும், ஓர் நாட்டின் பிரதமர் எதற்காக இவ்வாறு வெளிநாட்டில் இரயில் பயணத்தை மேற்கொண்டார் என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கிட்டத்தட்ட கடந்த 2.5 வருடத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனால், கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து உக்ரைன் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், உக்ரைனில் இருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்களும், வெளிநாடுகளில் இருந்து உக்ரைனுக்கு செல்பவர்களும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

பொதுமக்கள் மட்டுமின்றி, உக்ரைன் நாட்டின் பெரிய பெரிய விஐபிகளும் விமான சேவையை பயன்படுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். 2022 பிப்ரவரியில் விமான சேவை நிறுத்தப்பட்ட பின் கடந்த 2.5 வருடங்களில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் உள்ளிட்டோர் உக்ரைன் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் இருவருமே அண்டை நாடுகளில் இருந்து இரயில் மூலமாக உக்ரைனை சென்றடைந்தனர். இந்த வகையில், தற்போது அரசுமுறை பயணமாக சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் போலாந்தில் இருந்து இரயில் வழியாக உக்ரைனை சென்றடைந்துள்ளார். போலாந்து நாட்டில் இருந்து உக்ரைனின் தலைநகர் கிவ் நகரத்திற்கு இன்று (ஆகஸ்ட் 23) இரயிலில் பிரதமர் மோடி சென்றடைந்தார்.

இந்த பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்திய 'இரயில் ஃபோர்ஸ் ஒன்' இரயிலை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது உக்ரைனியன் இரயில்வேஸின் கீழ் இயங்கும் சொகுசு இரயில் ஆகும். உக்ரைன் நாட்டு தேசிய கொடியின் நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களில் இந்த இரயில் பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. இந்த இரயிலில் சில லக்சரி பெட்டிகள் உள்ளன.
இந்த லக்சரி இரயில் பெட்டிகள் முன்னதாக கருங்கடலை பார்வையிட வரும் பணக்கார சுற்றுலா பயணிகளுக்காக உக்ரைன் அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், அதன்பின் 2014ஆம் ஆண்டில் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்துவந்த கிரிமியன் தீவகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்த பின்பு அந்த லக்சரி இரயில் பெட்டிகள் 'இரயில் ஃபோர்ஸ் ஒன்' உடன் இணைக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.

அந்த சமயத்தில் பணக்கார சுற்றுலா பயணிகள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் மூலம் பார்க்கும்போது, பிரதமர் மோடி பயணம் செய்த இரயில் பெட்டிகள் மரத்திலானவை ஆகும். பெட்டியின் ஜன்னல் திரைகள் நீல நிறத்தில் உள்ளன. பயணிகள் அமர்வதற்கான சோபாக்கள் லெதரினால் ஆனவை ஆகும். இரயில் ஃபோர்ஸ் ஒன் இரயிலின் லக்சரி பெட்டிகளில் பயணிகள் படுத்து உறங்குவதற்கு பிரம்மாண்டமான படுக்கை வசதியும் உள்ளது.
சுவரில் மாட்டப்பட்ட பெரிய அளவிலான தொலைக்காட்சிகளும் உள்ளதால், இந்த இரயிலில் படுத்துக் கொண்டே டிவி பார்த்தப்படி பயணம் செய்ய முடியும். போலாந்தில் இருந்து உக்ரைனின் தலைநகர் கிவ் பகுதிக்கு இடையேயான 700கிமீ தொலைவை 'இரயில் ஃபோர்ஸ் ஒன்' இரயில் 10 மணிநேரங்களில் கடக்கிறது. அதாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் 10 மணிநேர இரயில் பயணத்திற்கு பின்பே கீவ் நகரத்தை அடைந்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 10 மணிநேர இரயில் பயணத்தை எல்லாம் பிரதமர் நரேந்திர மோடி கடைசியாக பல வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்டு இருப்பார். ஆதலால், இந்த இரயில் பயணம் நிச்சயமாக அவருக்கு வித்தியாசமான உணர்வை தந்திருக்கும். 'இரயில் ஃபோர்ஸ் ஒன்' இரயில் லக்சரியான பயண அனுபவத்தை வழங்கக்கூடியது என்பதால், இந்த இரயில் பயணத்தில் நம் பிரதமருக்கு பெரிய அளவில் உடல் சோர்வு ஏற்பட்டிருக்காது.
Image Courtesy: Rail Force One


Click it and Unblock the Notifications









