உத்திர பிரதேசம் தான் அனைத்திலும் ஃபர்ஸ்ட்... இந்தியாவிலேயே முதல்முறையாம் - பேட் டாக்ஸி சேவை 2025க்குள்!!
பேட் டாக்ஸி (Pod Taxi) எனப்படும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் செயல்படும் டாக்ஸி சேவை இந்தியாவிலேயே முதல்முறையாக உத்திர பிரதேச மாநிலத்தில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
பேட் டாக்ஸி இந்த வார்த்தை பலர் இப்போதுதான் முதல்முறையாக கேள்விப்படுகிறீர்கள் என நினைக்கிறேன். வெள்ளைக்காரன் ஆட்சி செய்த காலத்தில் சென்னை போக்குவரத்தில் பிரதான சேவையாக விளங்கிய ட்ராம்ஸ் போன்றதுதான் பேட் டாக்ஸியும். தனியாக ஒரு வழித்தடத்தில்தான் இந்த டாக்ஸியை இயக்க முடியும். ட்ராம்ஸ் வழித்தடத்தில் மற்ற வாகனங்களும் செல்ல முடிகிறது. ஆனால் பேட் டாக்ஸி சேவையை ஓர் மூடிய பகுதிக்குள் இயக்க வேண்டும்.

இதனாலேயே இத்தகைய டாக்ஸி சேவையானது இங்கிலாந்து, அபுதாபி, நெதர்லாந்து போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் தான் பயன்பாட்டில் உள்ளது. இந்த வரிசையில் விரைவில் நம் இந்தியாவும் இணைய உள்ளது. ஆம்... நாட்டிலேயே முதல்முறையாக உத்திர பிரதேசத்தில் பேட் டாக்ஸி சேவை கொண்டுவரப்படுகிறதாம். உத்திர பிரதேசத்தில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தையும், ஃப்லிம் சிட்டியையும் இணைக்கும் விதமாக இந்த எதிர்கால போக்குவரத்து சேவை வர உள்ளது.
இந்தியாவின் இந்த முதல் பேட் டாக்ஸி திட்டத்தின் சில ஆவணங்களுக்கு யமுனா நெடுஞ்சாலைத் துறை அனுமதி அளித்துள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு முழுமையான அனுமதி அளித்த பின் சேவைக்கான கட்டுமான பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விரைவில் விடப்படும்.
இந்த சேவைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிடும் என்றே தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம், பேட் டாக்ஸிகள் எலக்ட்ரிக்கில் இயங்கக்கூடியவை. நம் மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறது. அதுமட்டுமின்றி, பேட் டாக்ஸிகள் ஓட்டுனர் இல்லாமல் இயங்கக்கூடியவை. இதனால் மனிதர்களால் ஏற்படும் சிறு சிறு பிழைகளும் தவிர்க்கப்படும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, பேட் டாக்ஸியில் வழக்கத்தை காட்டிலும் கூடுதல் வேகத்தில் செல்லலாம்.
இதனால் நகரத்திற்குள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பயண நேரம் வெகுவாக குறையும். இத்தகைய அன்றாட போக்குவரத்து சேவையை தான் இந்தியாவிலேயே முதல்முறையாக உத்திர பிரதேச மாநிலம் பெற உள்ளது. சேவை துவங்கப்பட்ட பின் நொய்டா விமான நிலையம் - ஃப்லிம் சிட்டி இடையே மட்டுமே தினந்தோறும் ஏறக்குறைய 37,000 பயணிகள் இந்த சேவையை பயன்படுத்துவர் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, உத்திர பிரதேசம் மாநிலத்தில் அமைய உள்ள இந்த பேட் டாக்ஸி சேவை மொத்தம் 12- 14 கிமீ தொலைவு நீளம் கொண்டதாக இருக்கும். இந்த தொலைவிற்குள் மொத்தம் 12 நிலையங்கள் அமைய உள்ளன. இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ.810 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திடம் இருந்து அனுமதி கிடைத்து, கட்டுமான பணிகள் நிறைவடைந்து பேட் டாக்ஸி ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டு வந்துவிடும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எந்தவொரு நகரத்திலும் போக்குவரத்து சீராக இருந்தால், அந்த நகரத்தில் வணிகங்கள் அதிகரிக்கும் என்பதை மத்திய அரசு முழு மூச்சாக கொண்டுள்ளது. இருப்பினும், இந்த திட்டத்தை முதலாவதாக டெல்லிக்கு அருகே உள்ள நொய்டாவில் தான் கொண்டுவருவோம் என மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது கடைக்கோடியில் இருக்கும் நமக்கு சற்று ஏமாற்றமாக அமைந்துள்ளது. நமது சென்னையில் இத்தகைய சேவை வருவதற்கு இன்னும் பல வருடங்களாகிவிடும்.


Click it and Unblock the Notifications