போகிமான் விளையாடியபடி கார் ஓட்டியதால் நேர்ந்த விபரீதம்!

Written By: Krishna

காலையில் எழுந்ததும் யார் முகத்தில் முழிப்பீர்கள்? என்று இன்றைய நவ நாகரீக இளைஞர், இளைஞிகளைக் கேட்டுப் பாருங்கள். செல்போன்தான் பாஸ் என்று சொல்வார்கள் கூலாக... அந்தக் கையடக்க எமனைத் தவிர வேறு எந்த எவரும் எங்களை ஆட்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று உறுதியேற்று வாழ்ந்து கொண்டிருக்கிறது இளைய சமூகம். செல்போனுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் பல வீடுகளில் பெற்ற தாய், தகப்பனுக்குக் கூட கிடைப்பதில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம். செல்போனிலும் கேம் விளையாடுவதுதான் இப்போது பெரும்பாலானோரது தலையாய கடமையாக உள்ளது. போகிமான் என்றொரு விடியோ கேம். ஆண்ட்ராய்டு போனைப் பயன்படுத்தும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்த கேமை டவுன்லோடு செய்து விளையாடி வருகின்றனர்.

சாலையில் நடக்கும் போதும், வாகனத்தில் செல்லும் போதும், வேலையின் போதும், சாப்பிடும் போதும், ஏன் பாத் ரூம்களில் கூட போகிமானின் ஊடுருவல் அதிகமாகியுள்ளது.

இப்படித்தான் மும்பையில், கார் ஓட்டிக் கொண்டே சகோதர்கள் இருவர் போகிமான் கேம் விளையாடியுள்ளனர். விளைவு, முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளாகி காரின் பம்பர் அவுட்டாகிவிட்டது.

ஜாபிர் அலி (26) என்ற கார் டீலர், தனது மெர்சிடைஸ் இ 240 வண்டியில் அண்மையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஜாபிர் அலி கார் ஓட்ட, அவரது சகோதர் உடன் வந்துள்ளார்.

அந்த சகோதரர் சும்மா வந்திருந்தால் பரவாயில்லை. போகிமான் கேமை படு சீரியஸாக விளையாடிக் கொண்டே வந்திருக்கிறார். அதைப் பார்த்து ஆர்வமான ஜாபிர் அலி, அந்த கேமைப் பற்றிய விதிமுறைகளையும், விவரங்களையும் கேட்டுள்ளார்.

இருவரும் போகிமான் கேமில் தீவிரமாக மூழ்கியதால் சாலையைக் கவனிக்க மறந்து விட்டனர். கடைசியில் முன்னால் சென்ற ஆட்டோ மீது வேகமாக மோதி நின்றிருக்கிறது அவர்களது மெர்சிடைஸ் கார்.

அதன் பிறகே சுயநினைவுக்கு வந்த இருவரும், விபத்தின் விபரீதத்தை உணர்ந்துள்ளனர். காரின் பம்பர் கடுமையாக சேதமடைந்ததால், அதை மாற்ற வேண்டியதாகிவிட்டது. இப்போது ஜாபிர் அலியின் மெர்சடைஸ் இ 240 கார் சர்வீஸ் சென்டரில் கிடக்கிறது. செலவு ரூ.20,000.

எத்தனையோ சாலை விதிகள் வகுக்கப்பட்டிருந்தாலும், அதுதொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் மக்கள் தங்கள் சௌகரியத்துக்குத்தான் வண்டியை ஓட்டிச் செல்கின்றனர். போகிமானைக் காட்டிலும் எதிரே வரும் உயிர் விலைமதிப்பற்றது என்பதை சில விவேகமற்ற வாகன ஓட்டிகள் உணர வேண்டும். இல்லையேல் கடுமையான சட்டம் அவர்களுக்கு அதை உணர்த்த வேண்டும்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Pokemon Go Causes First Accident In India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark