போலரிஸ் ஏடிவி வாகனங்களுடன் ஓர் மல்லுக்கட்டு... டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்!

By Saravana

தினம் தினம் காரையும், டூ வீலர்களை ஓட்டி அலுத்துப்போன நிலையில், ஏடிவி வாகனங்களை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. பெங்களூரில் உள்ள போலரிஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸோன் மையத்தை நடத்தி வரும் டர்ட்மானியா நிறுவனத்தின் அழைப்பின் பேரில் அங்கு வார கடைசியில் விசிட் அடித்தோம்.

போலரிஸ் ஏடிவி டெஸ்ட் டிரைவ் - 01

டக்கார் ராலியில் ஏடிவி வாகனங்களை எளிதாக ஓட்டுவது போல இருக்கிறதே என்று நினைத்து ஆக்சிலரேட்டரை கொடுத்ததும் பிளிறிக் கொண்டு கிளம்பியது. ஏற்கனவே இருந்த கொஞ்ச நஞ்ச கார், பைக் ஓட்டும் அனுபவத்தை வைத்து ஓரளவு சுதாரித்துக் கொண்டு ஏடிவி.,யை ஓட்டத் துவங்கினோம்.

இந்த ஏடிவி வாகனங்களை ஓட்டுவதற்கு சில டிரிக்குகளை பயிற்சியாளர்கள் சொல்லிக்கொடுத்த வண்ணம் இருந்தனர். அதாவது, வலது பக்கம் திரும்ப வேண்டுமெனில், இடதுபுறமாக உடலை சாய்த்து பேலன்ஸ் செய்ய வேண்டும். இடது பக்கம் திருப்ப வலது பக்கம் உடலை சாய்த்து லாவகமாக பேலன்ஸ் செய்து ஓட்ட அறிவுறுத்தினர்.

போலரிஸ் ஏடிவி டெஸ்ட் டிரைவ் - 03

மேலும், இதன் ஹேண்டில்பார், எவ்வாறு திருப்புவது, எப்படி பிடித்து ஓட்ட வேண்டும் என்பதன் சூட்சுமங்களையும் அவ்வப்போது சொல்லித் தந்தனர். அதற்குள், பேலன்ஸ் தவறியது. ஒரு சில முயற்சிகளுக்கு பின்னர் ஏடிவி வாகனம் ஓரளவுக்கு பிடிபட்டதால், வழியிலிருந்த தடைகளை கடந்தோம்.

மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவெனில், ஏடிவி வாகனங்களில் 'தம்ப் த்ராட்டில்' எனப்படும் கட்டை விரலால் அழுத்தும் வகையிலான ஆக்சிலரேட்டர் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது, பைக்குகளில் சோக் போடுகிறீர்கள் அல்லவா? அதேபோன்ற ஆக்சிலரேட்டர் பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும்.

போலரிஸ் ஏடிவி டெஸ்ட் டிரைவ் - 04

இது வளைவுகளில் ஹேண்டில்பார் முற்றிலுமாக திரும்பிவிடும்போது, பைக் போன்று ஆக்சிலரேட்டர் பிடியை திருக முடியாது. எனவேதான் தம்ப் த்ராட்டில் கொடுக்ப்பபடுகிறது. அதுதவிர, சேறு, சகதிகளில் பயணிக்கும்போது, எளிதாக திருக முடியாத நிலை ஏற்படும் என்பதற்காவும், இந்த தம்ப் த்ராட்டில் பயன்படுத்தப்படுகிறது.

ஒருவழியாக, தம்ப் த்ராட்டில், ஹேண்டில்பார் கன்ட்ரோல் கிடைத்து, உடலை சாய்த்து ஓட்டுவதற்கு பழகி பேலன்ஸ் செய்து, அங்கிருந்த மலையின் உச்சியை அடைந்தோம். அப்போது, ஏடிவி நின்ற பொசிஷன் அடிவயிற்றை கலக்கினாலும், பயத்த வெளியில் காட்டாத கைப்புள்ள வடிவேலு மாதிரி சமாளித்து, பின்னர் மெதுவாக கீழே இறங்கினோம்.

ஒருவழியாக, ஏடிவி வாகன சாகச பயணத்தை வெற்றிகரமாக முடித்து, இறுதி நிலையை அடைந்தபோது, உடம்பை சுத்தப்படுத்த 2 சோப்பு பார்கள் தேவைப்பட்டது. சட்டைகளை பார்த்தவுடன் வாஷிங் பவுடர் நிர்மா விளம்பரம் நினைவில் வந்தோடியது. எம் மீது ஏடிவி வாகனம் இரக்கம் காட்டாவிட்டாலும், சேறு, சகதிகள் அளவு கடந்த பாசம் காட்டியிருந்தன.

சரளை கற்கள், சேறு சகதி, ஒழுங்கற்ற சாலைகள், மலை உள்ளிட்டவற்றை கடந்து வந்த அந்த டெஸ்ட் டிரைவ் நிச்சயம் ஒரு புதுவித அனுபவமாக அமைந்தது. மால், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை சுற்றி அலுத்துப் போனவர்களுக்கும், சாகச விரும்பிகளுக்கும் இந்த இடம் நிச்சயம் ஓர் புதிய அனுபவத்தை தரும் என்று ஆணித்தரமாக கூறலாம்.

டெஸ்ட் டிரைவ் முடிந்து உடைகளை மாற்றிக் கொண்டு, டர்ட்மானியா மையத்தின் இணை நிறுவனர் ஜெய்யுடன் கலந்துரையாடினோம். அவரது பிரத்யேக பேட்டியுடன், அங்கு ஏடிவி வாகனங்களை ஓட்டிப் பார்ப்பதற்கான கட்டண விபரங்களும் எமது டிரைவ்ஸ்பார்க் வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

போலரிஸ் ஏடிவி டெஸ்ட் டிரைவ் - 05

இந்த மையத்தை துவங்குவதற்கான ஆசை வந்தது பற்றி...?

டர்ட்மானியா மையத்தின் நிறுவனர் ராஜ், வாகனத் துறை பிரியர். அவரது உந்துதலில்தான் இந்த மையம் துவங்கப்பட்டது. மேலும், புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில்தான் இந்த டர்ட்மானியா மையம் உதயமானது.

வேறு எங்கெங்கு டர்ட்மானியா மையங்களை நடத்துகிறீர்கள்?

பெங்களூர் மட்டுமின்றி, மங்களூர் மற்றும் சிக்மகளூரில் டர்ட்மானியா மையங்களை நடத்தி வருகிறோம். ஆரம்பத்தில் 4 ஏடிவி வாகனங்களுடன் துவங்கப்பட்ட பெங்களூர் மையத்தில் இரண்டே ஆண்டுகளில் 16 ஏடிவி வாகனங்களை கொண்டதாக மாற்றியுள்ளோம். மங்களூர் மையத்தில் 4 ஏடிவி வாகனங்களும், சிக்மகளூரில் 3 உயர்வகை ஏடிவி வாகனங்களையும் வைத்திருக்கிறோம்.

ஏடிவி வாகனங்களை ஓட்டி பார்ப்பதற்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு இருக்கிறதா?

நிச்சயமாக. துவக்கத்தில் அவ்வளவு வரவேற்பு இல்லை. ஆனால், தற்போது எங்களது மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களில் அதிகமானோர் வருகின்றனர்.

அதிக கூட்டத்தை சமாளிக்கும் கட்டமைப்பு வசதிகள் உங்கள் மையத்தில் உள்ளனவா?

கண்டிப்பாக, வார கடைசி மற்றும் பெரிய நிறுவனங்களிலிருந்து அதிகம் பேர் வரும்போது, ஒரு குழுவினரை ஏடிவி வாகனங்களை ஓட்டச் செய்துவிட்டு, இரண்டாவது, மூன்றாவது குழுவினரை இதர பொழுதுபோக்கு அல்லது சாகச விளையாட்டுகளில் ஈடுபடுத்துகிறோம். இதனால், பிரச்னை ஏற்படுவதில்லை.

முன்பதிவு செய்ய வேண்டுமா?

வார இறுதியில் ஏராளமானோர் எங்கள் மையத்திற்கு நேரடியாகவே பலர் வருகை தருகின்றனர். எனவே, அவர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக முன்பதிவு ஏற்பதில்லை. வார நாட்களில் முன்பதிவு செய்து கொண்டு வந்து ஓட்டிப் பார்க்க வாய்ப்பு வழங்குகிறோம். தொலைபேசி வாயிலாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

உங்கள் மையத்தின் சிறப்பம்சம் பற்றி...?

எங்கள் மையத்தில் இரவு நேரத்திலும் ஏடிவி வாகனங்களை ஓட்டுவதற்கான வசதி இருக்கிறது. பெங்களூரில், வேறு எந்த மையத்திலும் இந்த வசதி இல்லை. மிகுந்த பாதுகாப்பு மற்றும் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல்களுடன் ஏடிவி வாகனங்களை ஓட்ட முடியும்.

வாடிக்கையாளர்களுக்கான கட்டுப்பாடுகள் பற்றி கூறுங்களேன்?

மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. ஓட்டுனர் உரிமம் ஒரு தடையில்லை. மேலும், குழந்தைகளுக்கு விசேஷ பயிற்சியாளருடன் ஓட்ட அனுமதிக்கிறோம்," என்று கூறினார்.

கட்டண விபரம்

ஃபீனிக்ஸ்

7 கிமீ டிரையல்: ரூ. 1600
10 கிமீ டிரையல்: ரூ. 2000
15 கிமீ டிரையல்: ரூ. 2650
2 சுற்றுகள்: Rs. 400

டிரையல் பாஸ்

7 கிமீ டிரையல்: ரூ. 2200
10 கிமீ டிரையல்: ரூ. 2500
15 கிமீ டிரையல்: ரூ. 3250
2 சுற்றுகள்: ரூ. 600

ஸ்போர்ட்ஸ் மேன்

7 கிமீ டிரையல்: ரூ. 2750
10 கிமீ டிரையல்: ரூ. 3250
15 கிமீ டிரையல்: Rs. 4000
2 சுற்றுகள்: Rs. 800

ஆர்இசட்ஆர்

7 கிமீ டிரையல்: Rs. 3800
10 கிமீ டிரையல்: Rs. 4600
15 கிமீ டிரையல்: Rs. 6000
2 சுற்றுகள்: Rs. 1200 [டிராக்கின் நீளம் 0.5 கிமீ தூரம்]

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X