இது புதுசா இருக்கே! இனி போலீஸை பார்த்ததும் வண்டியை திருப்ப முடியாது! மொத்தமா செக் வெச்சுட்டாங்க!
இந்தியாவில் வாகன ஓட்டிகள் பலரும் போக்குவரத்து விதிமுறைகளை சர்வ சாதாரணமாக மீறி வருகின்றனர். இதன் காரணமாக சாலை விபத்துக்களால் உலகிலேயே அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டுள்ளது.
ஆனால் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வது, இரு சக்கர வாகனங்களில் 3 பேர் பயணம் செய்வது, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது என போக்குவரத்து விதிமுறைகளை மக்கள் தொடர்ச்சியாக மீறி கொண்டே உள்ளனர். அதிலும் விதிமுறைகளை மீறுவதை போக்குவரத்து காவல் துறையினர் கண்டுபிடித்து விட்டால், வாகன ஓட்டிகள் செய்யும் அலப்பறையே வேறு.

அபராதம் உள்ளிட்ட தண்டனைகளில் இருந்து தப்பிப்பதற்காக உடனடியாக வாகனத்தை திருப்பி கொண்டு வேறு வழியில் செல்வது மற்றும் அதிவேகத்தில் பயணம் செய்வது போன்ற செயல்களில் வாகன ஓட்டிகள் ஈடுபடுகின்றனர். இந்த செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து தண்டனை வழங்குவதற்காக காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த புதிய திட்டத்தின் கீழ், காவல் துறை அதிகாரிகள் சாலையில் மப்டியில் இருப்பார்கள்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை அவர்கள் கண்டறிந்து, புகைப்படம் எடுத்து கொள்வார்கள். அதன்பின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அந்த புகைப்படம் போக்குவரத்து துறைக்கு அனுப்பி வைக்கப்படும். கோவா காவல் துறையினர்தான் தற்போது இந்த அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். சாலை விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை தொடர்ந்துதான் இந்த அதிரடி நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவா காவல் துறை அதிகாரிகள் கூறிய விஷயங்கள் பின்வருமாறு:

வாகன ஓட்டிகள் பலரும் மோட்டார் வாகன சட்டத்தின் விதிமுறைகளை மீறி வருகின்றனர். எனவேதான் விதிமுறைகளை மீறுபவர்களை, மப்டியில் இருக்கும் காவல் துறையினர் புகைப்படம் எடுக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சீருடையில் இருக்கும் காவல் துறையினரை கண்டால், வாகன ஓட்டிகள் வேறு வழியில் சென்று விடுகின்றனர். அல்லது அவர்களை மீறி அதிவேகத்தில் தப்பித்து விடுகின்றனர். இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
விதிமுறைகளை மீறியவர்களின் புகைப்படங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக போக்குவரத்து துறைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இனிமேல் கோவாவில் காவல் துறையினரை கண்டதும், வாகனத்தை திருப்பி கொண்டு சென்றாலும், விதிமுறைகளை மீறுபவர்கள் சிக்கி கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறையும் எனவும், அதன் காரணமாக சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் எனவும் காவல் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால், அதனை குறைக்கும் முயற்சிகளில் தனது அரசின் 3 துறைகள் ஈடுபட்டுள்ளதாக கோவா முதல் அமைச்சர் பிரமோத் சவந்த் சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவை போக்குவரத்து காவல் துறை, போக்குவரத்து துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகும். விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்காக இந்த 3 துறைகளும் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி வருகின்றன.
இதுகுறித்து கோவா முதல் அமைச்சர் பிரமோத் சவந்த் கூறுகையில், ''சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து போக்குவரத்து விதிமுறைகளையும் அனைவரும் முறையாக பின்பற்றுவது அவசியம்'' என்றார். கோவாவை போல் இன்னும் பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக தீவிர முயற்சி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications