மனைவி பேச்சை கேட்டவருக்கு கடைசியில் இதுதான் நிலைமை! நடுரோடு என்பதையே மொத்தமா மறந்துட்டாங்க!
உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் ஒன்றாக இந்தியா உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், தினந்தோறும் குறைந்தப்பட்சம் ஒரு சாலை விபத்து குறித்த செய்தியை ஆவது கேட்க முடிகிறது. சாலை விபத்துகளுக்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று, சாலை போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது ஆகும். வாகன ஓட்டிகள் தான் சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் இருக்கிறார்கள் என்று பார்த்தால், சமீப காலமாக சாலையில் நடந்து செல்வோரின் இடையூறுகளும் அதிகரித்து உள்ளன.
குறிப்பாக, சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அதிகரித்த பிறகுதான் பாதசாரிகள் சாலையில் தங்களது சாகசங்களை காட்டுவது அதிகரித்துள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் வரையில், சிக்னலில் வாகனங்கள் நின்றுக் கொண்டிருக்கும் போது அவற்றிற்கு முன்பாக இளைஞர்கள் நடனமாடுவதை பரவலாக நிறைய வீடியோக்களில் பார்த்திருப்பீர்கள்.

ஆனால், போலீசாரின் துரிதமான நடவடிக்கைகளினால், இப்போது அவ்வாறான நடனங்களை அதிகமாக சாலைகளில் காண முடிவதில்லை. இதற்கு போலீசாரை நாம் பாராட்டும் அதேவேளையில், இங்கு போலீஸ்காரர் ஒருவரின் மனைவி நடுரோட்டில் நடனமாடி கவனத்தை ஈர்த்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியதை அடுத்து, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் அதிரடியாக இடைநிறுத்தம் (Suspend) செய்யப்பட்டுள்ளார்.
சண்டிகர் (Chandigarh)-இல் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தில் நடுரோட்டில் வாகனங்கள் சிக்னலுக்காக நின்றுக் கொண்டிருக்கும்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போலீஸ்காரர் பெண் ஒருவரை நடனமாட அனுமதித்துள்ளார். பின்னர் இதுகுறித்து ஆராய்ந்து பார்த்த போதுதான் தெரிந்தது, அந்த பெண் இந்த போலீஸ்காரரின் மனைவி ஆவார்.

அந்த பெண் நடனமாடும் போது வீடியோவை காட்சிப்படுத்தியவர் வேறு யாருமில்லை... அந்த போலீஸ்காரரின் சகோதரி ஆவார். அந்த வீடியோவை போலீஸ்காரர் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவிட்டதுதான் இருப்பதிலேயே காமெடியான விஷயம் ஆகும். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, போலீஸ்காரரின் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. அவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
அஜய் குண்டு (Ajay Gundu) என பெயர் கொண்ட இந்த போலீஸ்காரர் சண்டிகர் மாநகர காவல் பிரிவில் முதன்மை கான்ஸ்டேபிள் (Constable) ஆக பணியாற்றி வருகிறார். இவர் பதிவேற்றிய வீடியோவினால் மட்டுமில்லாமல், இவரது மனைவி பிசியான சாலையில் நடனமாடுவதை நேரில் கண்டவர்கள் அளித்த புகாரின் பேரில் அஜய் குண்டுவின் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து, போலீசார் சம்பவ நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி கேமரா (CCTV Camera) காட்சிகளை ஆராய துவங்கினர். அதில், ஒரு பெண் நடனமாட இன்னொரு பெண் அதனை தனது மொபைல் போனில் காட்சிப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததை அடுத்து இவ்வாறான சம்பவம் நடைபெற்று இருப்பதை போலீசார் உறுதி செய்து, சம்பந்தப்பட்ட காவலர் அஜய் குண்டுவின் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலை எவரொருவருக்கும் சொந்தமானது கிடையாது; அது எல்லாருமானது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சாலையில் ஓரத்தில் நடைமேடையில் நடனமாடியப்படி வீடியோ எடுப்பதே தவறு எனும்போது, இவ்வாறு சாலையின் நடுவில் நடனமாடுவது முற்றிலும் தவறானது ஆகும். சிக்னலில் வாகனங்கள் நின்றுக் கொண்டிருக்கும்போது நடனமாடி இருந்தாலும், இது மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும்.

இதன் விளைவாக விபத்துகள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, இதை பார்த்து இன்னும் பலர் இவ்வாறு சிக்னல்களில் வந்து நடனமாட ஆரம்பிப்பர். மனைவி சாலையில் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட காவலர் அஜய் குண்டு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை போன்று, அவரது மனைவி ஜோதி மற்றும் சகோதரி பூஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications









