அதிக வேகத்தில் கார் ஓட்டியதற்காக 31 லட்சம் அபராதம்! ஆட்டம் போட்ட இங்கிலாந்து சுற்றுலா பயணிக்கு ஆப்பு
அதிவேகத்தில் காரை ஓட்டிய குற்றத்திற்காக, இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிக்கு, 31 லட்ச ரூபாயை போலீசார் அபராதமாக விதித்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிவேகத்தில் காரை ஓட்டிய குற்றத்திற்காக, இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிக்கு, 31 லட்ச ரூபாயை போலீசார் அபராதமாக விதித்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வானளாவிய கட்டிடங்கள் நிறைந்து காணப்படும் நகரம் துபாய். இந்திய சாலைகளில் ஒரு சூப்பர் காரை பார்ப்பது என்பதே அரிதான விஷயம். ஆனால் துபாயில் நிலைமை அப்படியே தலைகீழ். மிகவும் விலை உயர்ந்த கவர்ச்சிகரமான சூப்பர் கார்களை அங்கு தெருவுக்கு தெரு காண முடியும்.

அவ்வளவு ஏன், துபாய் போலீசார் பயன்படுத்தும் கார்களை கேட்டாலே, நமக்கு ஒரு நிமிடம் தலை சுற்றிப்போகும். புகாட்டி, லம்போர்கினி என துபாய் போலீசார் பயன்படுத்துவது எல்லாம் கவர்ச்சிகரமான, அல்ட்ரா ஹை ஸ்பீடு கார்கள்தான்.

இத்தனைக்கும் அங்கே சாலைகளும் பளபளவெனதான் இருக்கும். என்றாலும் சூப்பர் காரில் நினைத்த வேகத்திற்கு ஆக்ஸலேட்டரை மிதித்து கொண்டு அங்கு ஒருவரால் பறக்க முடியாது. ஏனெனில் துபாயில் மிக கடுமையான போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 25 வயதே நிரம்பிய சுற்றுலா பயணி ஒருவர், துபாய் போக்குவரத்து விதிமுறைகள் எவ்வளவு கடுமையானது என்பதை தற்போது உணர்ந்திருக்கிறார். துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள அந்த இங்கிலாந்து வாலிபர், லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரை 2 நாள் வாடகைக்கு எடுத்தார்.

மிக அழகாக கட்டமைக்கப்பட்ட துபாய் சாலைகளில், அந்த லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரின் உதவியுடன் ஜாலியாக சுற்றி திரியலாம் என திட்டம் போட்டார் அந்த இங்கிலாந்து இளைஞர். லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரின் 2 நாள் வாடகை இந்திய மதிப்பில் 1 லட்ச ரூபாய்.

முதல் நாள் எல்லாம் நன்றாகதான் சென்றது. ஒன்றும் பிரச்னையில்லை. 2வது நாளில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. 2வது நாள் அதிகாலையிலேயே, லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரை எடுத்து கொண்டு, அந்த இங்கிலாந்து இளைஞர் கிளம்பி விட்டார்.

ஆனால் துபாய் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்டென்சிவ் ஸ்பீடு கேமராக்கள் (Extensive Speed Cameras) கண்காணித்து கொண்டிருக்கின்றன என்பதை அவர் உணரவில்லை. ஆம், அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணிப்பதற்காக துபாயில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

இதையறியாமல் அந்த இங்கிலாந்து இளைஞர் ஆர்வக்கோளாறில் ஆக்ஸலேட்டரை அழுத்தி விட்டார் போல. இதனை கேமராக்கள் கண்டுபிடித்து விட்டன. கடந்த ஜூலை 31ம் தேதி அதிகாலை 2.31 மற்றும் 6.26 மணிக்கு இடைப்பட்ட நேரங்களில், அந்த லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் கார் அதிவேகத்தில் பறந்துள்ளது.

மணிக்கு 125 மற்றும் 230 கிலோ மீட்டர்களுக்கு இடைப்பட்ட வேகத்தில், ஷேக் ஜயத் ரோட்டில் 32 முறையும், கர்ன் அல் ஷப்கா சாலையில் ஒரு முறையும், அந்த லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் கார் பறந்துள்ளது. இவை அனைத்தையும் கேமரா புட்டு புட்டு வைத்து விட்டது.

ஒரு சில இடங்களில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் கிட்டத்தட்ட 2 மடங்கு அதிக வேகத்தில் அந்த லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் கார் சென்றுள்ளது. இதற்கான ஒட்டுமொத்த அபராத தொகை இந்திய மதிப்பில் சுமார் 31 லட்ச ரூபாய்.

துபாயில் உள்ள கேமராக்கள், வேகமாக செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டையும் புகைப்படம் எடுத்துவிடும். இதனை அடிப்படையாக கொண்டு, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு, அபராதம் விதிக்கப்பட்டதற்கான ரசீது அனுப்பி வைக்கப்படும்.

இதன்படி லம்போர்கினி ஹூராகேன் காரை வாடகைக்கு விட்ட ரென்டல் ஏஜென்சி அலுவலகத்திற்கு, அபராத தொகைக்கான ரசீது அனுப்பி வைக்கப்பட்டது. அதை கண்டு அவர்கள் திகைத்து போய் விட்டனர். ஏனெனில் அங்குள்ள சட்டப்படி காரின் உரிமையாளர்தான் அபராத தொகையை கட்ட வேண்டும்.

எனினும் பெரிய தொகை என்பதால், அதனை கட்டி விடும்படி, அந்த இங்கிலாந்து நாட்டு இளைஞரிடம், ரென்டல் ஏஜென்சி கேட்டதாகவும், ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்போது அந்த ரென்டல் ஏஜென்சிதான் சிக்கலில் சிக்கி கொண்டுள்ளது.

அந்த இளைஞர் துபாயை விட்டு சென்று விடுவாரோ? என்ற அச்சமும், அந்த ரென்டல் ஏஜென்சி உரிமையாளர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால் பாஸ்போர்ட் இல்லாமல் இதை சாத்தியப்படுத்த முடியாது. லம்போர்கினி காரை வாடகைக்கு எடுக்கும்போது, கேரண்டிக்காக தனது பாஸ்போர்ட்டை ரென்டல் ஏஜென்சியிடம் அந்த இளைஞர் வழங்கியிருந்தார்.

இதனால் ரென்டல் ஏஜென்சி வசம்தான் தற்போது அவரது பாஸ்போர்ட் உள்ளது. எனினும் அவர் இங்கிலாந்து தூதரகத்தை நாடி, பாஸ்போர்ட் தொலைந்து விட்டது என தெரிவித்து, துபாயில் இருந்து வெளியேறி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நடந்த சம்பவங்களை எல்லாம், இங்கிலாந்து தூதரகத்தில், அந்த ரென்டல் ஏஜென்சி தெரிவித்து விட்டது. அந்த இளைஞரின் பாஸ்போர்ட்டும் தங்களிடம்தான் உள்ளது என்பதையும், இங்கிலாந்து தூதரகத்திற்கு அந்த ரென்டல் ஏஜென்சி தெரியப்படுத்திவிட்டது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








