வெந்து தணிந்தது காடு... காருல பின்னாடி உட்கார்ந்தாலும் சீட் பெல்ட போடு... இல்லேன்னா அபராதம் கட்ட ரெடியா இரு
காரில் பின்சீட்டில் அமர்ந்திருந்தாலும் சீட் பெல்ட் கட்டாயம் போட வேண்டும். இப்படிப் போடாதவர்களுக்கு போலீசார் வாகனப் பரிசோதனையில் அபராதம் விதிக்கிறார்களாம். இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் விலை யுர்ந்த மெர்சிடீஸ் காரில் சென்றபோது விபத்தின் போது அவர் சீட் பெல்ட் போடாததால் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் காரில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார்.

அவர் காரில் விபத்தில் சிக்கும் போது காருக்குள் முன் சீட்டில் இருந்த இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்தனர். பின் சீட்டில் அமர்ந்திருந்தவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை. இதனால் கார் விபத்தில் சிக்கும் போது அதனால் ஏற்பட்ட இம்பேக்டில் பின் சீட்டிலிருந்த இருவரும் காருக்குள்ளேயே தூக்கி வீசப்பட்டனர். இதில் பின் சீட்டில் இருந்த சைரஸ் மிஸ்திரி உள்ளிட்ட இருவரும் இறந்துவிட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்தியா முழுவதும் கார்களில் உள்ளப் பாதுகாப்பு வசதிகள் குறித்து எல்லாம் விவாதிக்கப்பட்டன. இந்த விபத்து குறித்த விசாரணையில் அவர் சீட் பெல்ட் அணியாததே அவர் மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்தது. அதாவது அவர் பின் சீட்டில் அமர்ந்திருந்த போது சீட் பெல்ட் அணியவில்லை.

இந்தியாவில் பலருக்கும் தெரியாத விஷயம் காரில் பின் சீட்டில் அமர்ந்திருந்தாலும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது. பெரும்பாலான மக்கள் முன் சீட்டில் அமர்ந்திருந்திருப்பவர்கள் மட்டுமே சீட் பெல்ட் அணி வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் கார்களில் உள்ள அத்தனை சீட்களுக்கும் சீட் பெல்ட் இருக்கும் கார்களில் பயணிக்கும் போது அத்தனை பேரும் சீட் பெல்ட் அணிவது தான் சிறந்த விஷயமாகும்.

இந்திய மோட்டார் வாகன சட்டத்திலும் கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் எனச் சொல்கிறது. அப்படி என்றால் முன் சீட்டில் இருப்பவர்கள் மட்டுமல்ல பின் சீட்டில் இருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். ஆனால் இதுவரை இந்தியாவில் இது பெரிய விஷயமாக இருந்தது இல்லை. காரில் பின் சீட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் சீட் பெல்ட் அணிவதில்லை. போலீசாரும் அதற்கு அபராதம் விதிப்பதில்லை.

இந்நிலையில் டில்லியில் நேற்று திடீரென போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது போலீசார் அந்தப் பகுதி வழியாக வந்த கார்களில் பின் சீட்டில் சீட்பெல்ட் அணியாமல் வந்த 17 பேருக்கு அபராதச் செல்லான்களை வழங்கினர். தற்போது இந்த வாகனச் சோதனை ஒரு பகுதியில் மட்டும் தான் நடந்துள்ளது. இனி அடுத்தடுத்து நடக்கும் வாகனச் சோதனையிலும் பின்பக்கச் சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் சோதனையை நடத்த முடிவு செய்துள்ளனர்.

தற்போது டில்லியில் துவங்கியுள்ள இந்த வாகனச் சோதனை இனி அடுத்தடுத்து நாடு முழுவதும் பரவும் எனக் கூறப்படுகிறது. இதனால் இனி நீங்கள் காரில் செல்லும் போது உங்கள் பாதுகாப்பை நலனில் கருதிப் பின் பக்கச் சீட்டில் அமர்ந்திருந்தாலும் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்யுங்கள். இப்படியாக நீங்கள் பயணிப்பது தான் சிறந்தது.

சைரஸ் மிஸ்திரியின் மரணத்திற்குப் பிறகு சீட் பெல்ட் அணிந்து பயணிப்பது அதிகமாகிவிட்டது. இவரது மரணம் பலரை அதிர்ச்சியடைய வைத்ததுடன் இதுவரை சீட் பெல்ட் அணியாமல் பயணித்தவர்களுக்கு நல்ல பாடத்தையும் புகட்டி விட்டது. இது மட்டுமல்ல இது குறித்து மத்தியப் போக்குவரத்துத் துறையும் இந்த விபத்திற்குப் பிறகு பல்வேறு நடவடிக்கைகளைச் செய்துள்ளனர்.

அதன்படி இந்தியாவில் இனி சீட் பெல்ட் அலாரத்தை தடுக்கும் கருவிகளை விற்பனை செய்யத் தடை விதித்துள்ளனர். ஆன்லைன் இ-காமர்ஸ் தளங்களான அமேசான் போன்ற தளங்களிலும் இதை விற்பனை செய்வதை நிறுத்திச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர். கார் தயாரிப்பு நிறுவனங்களிடமும் இனி பின்பக்க சீட் பெல்ட் போடவில்லை என்றாலும் எச்சரிக்கை அலாரம் அடிக்கும்படி காரின் டிசைனை மாற்ற உத்தரவிட்டுள்ளனர்.

இது போக கார்களில் பின்பக்க சீட்களிலும் 3 பாயிண்ட் சீட்பெல்ட் மற்றும் கட்டாயம் 6 ஏர்பேக் ஆகியவற்றை நடைமுறைக்குக் கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது எந்த காராக இருந்தாலும் எந்த வேரியன்டாக இருந்தாலும் 6 ஏர்பேக் கட்டாயம் இருக்க வேண்டும் என மத்திய அரசு கார் தயாரிப்பாளர்களை வலியுறுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications








