புதிய ஸ்கார்பியோ என் காரை வழியில் நிறுத்திய சோதனை போலீஸார்... அடுத்து நடந்ததுதான் அங்க டுவிஸ்டே!!
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் பலத்தரப்பட்ட மக்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை வெளிக்காட்டும் விதமான சம்பவம் ஒன்று கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அது என்ன என்பதை இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

மஹிந்திராவின் ஸ்கார்பியோ எஸ்யூவி மாடலுக்கு நம் நாட்டு மக்கள் மத்தியில் இருந்து கிடைக்கும் வரவேற்பை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. இந்த கிரேஸ் இன்றோ அல்லது நேற்றோ இல்லை, கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களாக உள்ளது. இத்தனைக்கும் ஸ்கார்பியோவில் பெரிய அளவிலான மாற்றங்களை மஹிந்திரா கொண்டுவராமல்தான் இருந்துவந்தது.

விற்பனை பெரியதாக குறையாவிடினும், எத்தனை ஆண்டுகளுக்குதான் ஒரு காரில் அப்கிரேட்களை கொண்டுவராமல் இருக்க முடியும்? இதனை கருத்தில் கொண்டு புதிய தலைமுறை ஸ்கார்பியோவின் வடிவமைப்பு பணிகளில் கடந்த சில வருடங்களாகவே மஹிந்திரா ஈடுப்பட்டு வந்தது. இதன் விளைவாக 'ஸ்கார்பியோ-என்' என்கிற பெயரில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் கடந்த ஜூன் மாதத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இருப்பினும், புதிய ஸ்கார்பியோ என் காருக்கான முன்பதிவுகள் இன்னும் துவங்கப்படாததால், இந்த காரினை வாங்க வாடிக்கையாளர்கள் பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எந்த அளவிற்கு என்பதை, டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு பொது சாலையில் கொண்டு சென்றப்போது புதிய ஸ்கார்பியோ என் காரை சோதனை பணியில் இருந்த போலீஸார் உள்பட மக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்க்கும் கீழுள்ள வீடியோவில் காணலாம்.
இந்த வீடியோ ஷட்டர் ட்ரைவ்ஸ் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெறும் சில வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக உள்ள இந்த வீடியோவில், பல்வேறு நிறங்களிலான ஸ்கார்பியோ என் கார்களை வெவ்வேறு பகுதிகளில் மக்கள் ஆச்சிரியத்துடன் பார்ப்பதை காண முடிகிறது. இறுதியாக, தாங்கள் இயக்கி பார்த்த புதிய ஸ்கார்பியோ என் காரை பற்றி வழியில் கண்ட மக்கள் என்னென்ன கூறினார்கள் என்பதை வி-லாகர்கள் கூறுகின்றனர்.

இந்த நிகழ்வுகள் எங்கெங்கு காட்சிப்படுத்தப்பட்டன என்பது உறுதியாக தெரியவில்லை. வீடியோவில், காரை ஓட்டும் நபர் புனேவில் இருந்து பெங்களூருக்கு செல்லும் வழியில் போலீஸார் மடக்கி, ஆவணங்களை சரிப்பார்த்துவிட்டு, பின்னர் காரை பற்றிய விபரங்களை கேட்டறிந்ததாக கூறுகிறார். ஆதலால், வீடியோவில் காணும் சம்பவங்கள் யாவும் மஹாராஷ்டிரா அல்லது கர்நாடகா மாநிலங்களில்தான் நடைபெற்றிருக்க வேண்டும்.

சில தினங்களுக்கு முன்பு கூட தற்போதைய ஸ்கார்பியோ உரிமையாளர்கள் சிலர் புதிய ஸ்கார்பியோ என் காரை சாலையில் நிறுத்தி விசாரித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. இவ்வாறு பலரது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் புதிய ஸ்கார்பியோ என் காருக்கான முன்பதிவுகளை வருகிற ஜூலை 30இல் இருந்து மஹிந்திரா ஏற்க உள்ளதாக அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் அடுத்த 2 வாரங்களுக்குள், அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் தாங்கள் தேர்வு செய்த ஸ்கார்பியோ என் காரின் வேரியண்ட், என்ஜின், நிறத்தேர்வு & டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை மாற்றியமைத்து கொள்ளலாம் எனவும் மஹிந்திரா அறிவித்துள்ளது. ஸ்கார்பியோ என் காரின் டெஸ்ட் டிரைவ்கள் கடந்த ஜூலை 5ஆம் தேதி துவங்கின.

மேலும், அறிவித்தப்படியே ஸ்கார்பியோ என் காருக்கான ஆட் ஆன் கார்ட் வசதியையும் மஹிந்திரா துவங்கியுள்ளது. இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்வதற்கு முன்னரே மஹிந்திராவின் இணையத்தள பக்கத்தில் தங்களுக்கு பிடித்தமான மற்றும் ஏற்ற ஸ்கார்பியோ என் காரின் வேரியண்ட், என்ஜின், நிறத்தேர்வு மற்றும் டிரான்ஸ்மிஷனை தேர்வு செய்து வைத்து கொள்ளலாம். பிறகு முன்பதிவு துவங்கப்பட்ட பின் தேர்வு செய்த வேரியண்ட்டை முன்பதிவு செய்து கொள்ளலாமாம்.

முற்றிலும் புதிய ஸ்கார்பியோ என் மாடலில் எக்ஸ்யூவி700-இன் அதே 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளை மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 203 பிஎஸ் மற்றும் 380 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 132 பிஎஸ் மற்றும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

இதில் டீசல் என்ஜினை உயர்-நிலை ட்யூனிலும் பெறலாமாம். புதிய ஸ்கார்பியோ என் காரின் டாப் வேரியண்ட்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ள இந்த உயர்-நிலை ட்யூனில் 2.2 டீசல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 175 பிஎஸ்-ஐயும், மேனுவல் வேரியண்ட்களில் 370 என்எம் டார்க் திறனையும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் என மஹிந்திரா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








