ஆளு யாருனு தெரிஞ்சிக்காம கையை நீட்டிய போலீஸ்.. இந்தியாவோட மானத்தையே போக வச்சுட்டாரு! வைரலாகும் வீடியோ!
'லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்' என்கிற வாசகம் ஒவ்வொரு அரசு துறை அலவலகங்களிலும் ஒட்டப்பட்டு இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்த வாசகத்தின்படி செயல்படும் அரசு அதிகாரிகளைப் பார்ப்பதுதான் சற்று கடினமானதாக இருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் அத்தகையோர் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே அதிகாரத்தில் இருக்கின்றனர்.
அந்த அளவிற்கு லஞ்சமும், ஊழலும் அரசு அலுவலகங்களில் மலிந்துபோய் காட்சியளிக்கின்றது. இதற்கு சான்றாக இணையத்தில் பலதரப்பட்ட வீடியோக்கள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில்கூட லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய அரசு அதிகாரி ஒருவர், லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக, கையூட்டாக பெறப்பட்ட ரூ. 5 ஆயிரத்தை வாயில் போட்டு மென்று விழுங்கிய சம்பவம் இந்தியாவில் அரங்கேறியது.

மத்திய பிரதேசம் மாநிலத்திலேயே இந்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த வீடியோ இந்திய அளவில் மட்டுமே வைரலாகிக் கொண்டிருக்கின்ற சூழலில், மற்றுமொரு கையூட்டு பெறும் வீடியோ உலக அளவில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
அந்த வீடியோ உங்களின் கண்களில் பட்டிருக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன. வட மாநிலத்தில் ஓர் போக்குவரத்து காவல்துறை அதிகாரி வெளிநாட்டு நபரிடத்தில் பணம் பெறும் வீடியோவே அது ஆகும். இந்த சம்பவம் தலைநகர் டெல்லியிலேயே அரங்கேறி இருக்கின்றது. அந்த வெளிநாட்டு நபர் தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல யுட்யூபர் என கூறப்படுகின்றது.

இவர் தற்போது இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த வெளிநாட்டு நபரிடம் இருந்தே காவலர் பணத்தைப் பெற்றிருக்கின்றார். இந்த செயலுக்காக அந்த போக்குவரத்துக் காவலரை டெல்லி காவல்துறை சஸ்பென்ட் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவலர் பணம் பெறும் வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையிலேயே இந்த நடவடிக்கையை டெல்லி காவல்துறை எடுத்திருக்கின்றது.
சம்பவம் நடைபெற்று ஒரு மாதங்களுக்கும் மேல் ஆகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்த கொரியாவைச் சேர்ந்த நபர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால், என்ன மாதிரியான போக்குவரத்து விதிமீறலில் அவர் ஈடுபட்டார் என்பது தெளிவாக வீடியோவில் கூறப்படவில்லை. போலீஸாரின் சைகையின்படி, அந்த தென் கொரியாவைச் சேர்ந்த நபர், சாலையை பிரிக்கும் வெள்ளைத் தாண்டிதயற்காக அபராதம் வழங்கப்பட்டு இருக்கும் என யூகிக்கப்படுகின்றது.

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் என கூறி ரூ. 5 ஆயிரத்தை போலீஸார் கேட்டிருக்கின்றார். இதை தவறாக புரிந்துக் கொண்ட அந்த வெளிநாட்டு நபர் முதலில் இந்திய ரூபாய் 500 தாளை எடுத்துக் கொடுத்திருக்கின்றார். அதன் பின்னர் காவலர் கேட்ட 5 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.
ஆனால், இதற்காக எந்தவொரு ரசீதையும் அந்த காவலர் வழங்கவில்லை. இந்த நிகழ்வுகுறித்த வீடியோ மற்றும் தகவல்களே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே டெல்லி காவல்துறை அந்த போக்குவரத்துக் காவலரை சஸ்பெண்ட் செய்திருக்கின்றது. இத்துடன், விசாரணை மேற்கொள்ளவும் டெல்லி போலீஸ் டிபார்ட்மென்ட் உத்தரவிட்டு உள்ளது.
முதல் கட்ட விசாரணையில், "காவலர், தான் ரசீது போட்டுத் தருவதற்குள் அந்த வெளிநாட்டு நபர் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்" என கூறி இருக்கின்றார். சரி, அதற்கு பின்னராவது அவர் செல்லாணை போட்டு, பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்தாரா என்பது தெரியவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவை பார்க்கையில், காவலர் பணத்தைப் பெற்ற பின்னர் செல்லாணை தர முயற்சித்ததைப் போல துளியளவும் தெரியவில்லை.
கடைசியில் கொரிய நபருக்கு அவர் நன்றி தெரிவித்தும், கட்டை விரலை காட்டியும் சைகைச் செய்திருக்கின்றார். இதைப் பார்க்கையில், அவர் செல்லாணை போடும் ஐடியாவில் இருந்ததாகக் கூட தெரியவில்லை. இந்த நிலையிலேயே, வெளிநாட்டு நபர் செல்லாணை வாங்க தவறிவிட்டார் என பணத்தை பறிகொடுத்தவர் மீதே பழியைப் போட்டு இருக்கின்றார்., அந்த போலீஸ்காரர்.
இந்த நிலையிலேயே வீடியோவை அடிப்படையாகக் கொண்டு அந்த குறிப்பிட்ட போக்குவரத்து காவலர்மீது டெல்லி காவல்துறை கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றது. வீடியோவை ஆதாரமாக வைத்து போக்குவரத்து விதிமீறல் வாதிகளுக்கு போலீஸ்காரர்கள் செல்லாண் வழங்கி வந்தநிலையில், வைரல் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.
தென் கொரியாவைச் சேர்ந்த யுட்யூபருக்கு உலக அளவில் ஃபாலோவர் பட்டாளம் இருக்கின்றது. ஆகையால், தற்போது அவர் பதிவிட்டு இருக்கும் இந்த வீடியோ உலக அளவில் பரவிக் கொண்டிருக்கின்றது. இதனால், இந்த நிகழ்வு இந்திய காவல்துறைக்கே பெருத்த அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு சில காவல்துறை அதிகாரிகள் இதுபோன்று நடந்துக்கொள்வதனாலேயே ஒட்டுமொத்த காவல்துறையின் பெயரும் அடிபடுகின்றது. காவல்துறையில் பல நல்ல அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். உதவி தேவைப்படுபவர்களுக்கு ஓடிச் சென்று உதவுவது, குறிப்பாக, சக மனிதர்களிடத்தில் கன்னியத்துடனும், நேர்மையுடனும் நடந்துக் கொள்வதை நம்மால் பார்க்க முடிகின்றது. இந்த நிலையிலேயே டெல்லி காவல்துறைக்கே ஒற்றை காவலரால் இழுக்கு ஏற்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications
