திருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்
திருப்பூர் இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோவால் போலீஸ்காரர் வசமாக சிக்கி கொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் பெரும்பாலானோர் இதனை பின்பற்றுவது கிடையாது.

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணம். குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை கட்டாய ஹெல்மெட் விதி பெயரளவிற்குதான் உள்ளது.

தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் விதியை அமல்படுத்துவதில் உள்ள சுணக்கம் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் கூட சமீபத்தில் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது. இவ்வளவு ஏன். இந்த விதியை முறையாக அமல்படுத்த வேண்டிய போலீசார் சிலரே ஹெல்மெட் அணிவதில்லை.

இப்படி ஹெல்மெட் அணியாமல் இருந்த போலீஸ்காரர் ஒருவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியதால், அது தொடர்பாக விசாரணை நடத்திய உயரதிகாரிகள், சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

திருப்பூரை சேர்ந்த கணேஷ் என்ற இளைஞர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, திருப்பூர்-பல்லடம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராதாகிருஷ்ணன் என்ற போலீஸ்காரர், கணேஷை நிறுத்தி விசாரித்தார்.

போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். ஆனால் அங்கு ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, அவர் மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது மாவட்ட ஆயுதப்படையில் ராதாகிருஷ்ணன் வேலை செய்து வந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன், கணேஷை நிறுத்தி விசாரித்தபோது, அவருடன் வேறு போலீஸ்காரர்கள் யாருமே இல்லை.

அவர் மட்டும் தனியாக ஒரு பைக்கில் நின்று கொண்டு வாகன தணிக்கை செய்து வந்தார். அந்த பைக்கில் நம்பர் பிளேட் இருந்தது. ஆனால் பதிவு எண் குறிப்பிடப்படவில்லை. அனேகமாக அது புதிய பைக்காக இருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் அவரிடம் ஹெல்மெட்டும் இல்லை.

ஆனால் இதையெல்லாம் உணராத போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன், கணேஷ் செல்போனில் பேசியபடி இரு சக்கர வாகனத்தை ஓட்டியதாக குற்றம் சாட்டினார். இதை கணேஷ் மறுக்கவே வாக்குவாதம் உண்டானதாக கூறப்படுகிறது.

இதன் பின் தன் நண்பர் சரவணன் என்பவரை கணேஷ் சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். அவர்கள் இரண்டு பேரும் போலீஸ்காரர் ராதாகிருஷ்ணனிடம் நீண்ட நேரம் பேசி பார்த்தனர். ஆனால் எதற்கும் பலன் இல்லை. போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன் லஞ்சம் பெற முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த கணேஷ், ராதாகிருஷ்ணனின் பைக்கில் பதிவு எண் குறிப்பிடப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டினார். அத்துடன் நீங்கள் ஏன் ஹெல்மெட் அணியவில்லை? உங்கள் ஹெல்மெட் எங்கே? எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனால் மிரண்டு போன ராதாகிருஷ்ணன் அங்கிருந்து சென்று விட்டார்.

முன்னதாக அங்கு நடந்த சம்பவங்களை கணேஷ் செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார். இந்த வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி, போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. இதனால் இந்த சம்பவம் குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில், ராதாகிருஷ்ணன் மீண்டும் பொது இடத்தில் ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் காரணமாக போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் கண்டிப்பிற்கு பிறகு தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் நபர்களை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஆனால் இதில் சில போலீசாரே ஹெல்மெட் அணியாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இருந்தபோதும் தற்போது நடவடிக்கைகள் தீவிரமாகி வருவதால், இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இது போலீசாரின் நடவடிக்கைகளில் இருந்து உங்களை காப்பதுடன், நீங்கள் ஒருவேளை சாலை விபத்தில் சிக்க நேர்ந்தால், உங்கள் உயிரையும் காப்பாற்றும். தற்போது புதிதாக டூவீலர் வாங்குபவர்களுக்கு ஹெல்மெட் வழங்க வேண்டும் என டீலர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








