புகையை கக்கினால் உச்சகட்ட அபராதம்... பியூசி சர்டிபிகேட் வாங்க படையெடுக்கும் வாகன உரிமையாளர்கள்...
மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவதில் வாகன உரிமையாளர்கள் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளன. எனவே வாகனங்கள் மூலமாக காற்று மாசுபடுவதை குறைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பரில் அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டம் இதற்கு ஒரு உதாரணம்.

திருத்தியமைக்கப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை, வாகன ஓட்டிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் அனைத்தும் மிக கடுமையான உயர்த்தப்பட்டிருந்தன.

குறிப்பாக மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கான அபராத தொகை 1,000 ரூபாயில் இருந்து அதிரடியாக 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த விதிமுறையை போக்குவரத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் மிக தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் காற்று மாசு அதிகரித்து கொண்டே வருவதால், நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி ஒரு சில நாட்களுக்கு முன்னர், மாசு கட்டுப்பட்டு சான்றிதழ் (PUC - Pollution Under Control Certificate) இல்லாத சுமார் 440 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு, தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து, டெல்லி அதிகாரிகள் அதிரடி காட்டினர்.

இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவதில் வாகன உரிமையாளர்கள் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில், வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை குஜராத் மாநில அரசு தற்போது அதிரடியாக உயர்த்தியுள்ளது.

இதற்கான அறிவிப்பு நேற்று (ஆகஸ்ட் 21) வெளியிடப்பட்டது. எனவே குஜராத் மாநிலத்தில் இனிமேல் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற கொஞ்சம் அதிகம் செலவு ஆகும். குஜராத் மாநிலத்தில் தற்போதைய நிலையில் இரு சக்கர வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே சமயம் இனிமேல் மூன்று சக்கர வாகனங்களுக்கு 60 ரூபாயும், பெட்ரோலில் இயங்க கூடிய நான்கு சக்கர இலகு ரக வாகனங்களுக்கு 80 ரூபாயும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணமாக வசூல் செய்யப்படும். டீசல் கார்கள், அனைத்து நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கான கட்டணம் 50 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கான அபராத தொகை 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மாநில அரசுகள் அபராத தொகையை குறைத்தன. இதன் காரணமாக குஜராத்தில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கான அபராதம் குறைவாக இருக்கலாம்.

போக்குவரத்து துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதால், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வாங்குவதில் வாகன உரிமையாளர்கள் முன்பை விட தற்போது தீவிரமாக உள்ளனர். உங்கள் வாகனத்திற்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாவிட்டாலும் உடனடியாக வாங்கி கொள்வது நல்லது. இதுகுறித்து அகமதாபாத் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








