கடைசியா நடித்த படம் சரியா ஓடல... அதுபற்றி எல்லாம் இவருக்கு என்ன கவலை!! பிஎம்டபிள்யூ காரில் ஜாலியா சுத்துறார்!
பிஎம்டபிள்யூ கார்களுக்கு (BMW Cars) உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். இந்தியாவும் உள்பட. இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்துக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக பிஎம்டபிள்யூ விளங்குகிறது. இதற்கு முக்கிய காரணம், செல்வந்தர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் பிஎம்டபிள்யூ கார்களை விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பிஎம்டபிள்யூ காரை பயன்படுத்திவரும் நடிகை ஒருவர் அந்த காரில் பொது வெளியில் காட்சி தந்துள்ளார்.
இந்த நடிகை வேறு யாரும் கிடையாது, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் பூஜா ஹெக்டே (Pooja Hegde) ஆவார். மும்பையில் பிறந்தவரான 34 வயதான பூஜா ஹெக்டே, 2010ஆம் ஆண்டில் பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் 2வது இடத்தை பிடித்தார்.

மிஷ்கின் இயக்கத்தில் 'முகமூடி' திரைப்படத்தின் மூலமாக திரையுலகிற்குள் நுழைந்து இருந்தாலும், அதன்பின் கோலிவுட்டில் இவருக்கு சரிவர வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், தெலுங்கு சினிமா பக்கம் சென்றவரை டோலிவுட் அப்படியே வாரி அணைத்துக் கொண்டது. அதன்பின், பாலிவுட் (Bollywood) சினிமாவுக்கு கூட சென்றார். ஆனால், கோலிவுட்டில் மீண்டும் திரைப்பட வாய்ப்பு 2022இல் நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படம் மூலமாகவே கிடைத்தது.
அதாவது, தமிழில் முதல் படத்திற்கும் 2வது படத்திற்கும் இடையே சுமார் 10 வருடங்கள் இடைவெளி. ஆனால், பீஸ்ட் தோல்வியடைந்ததால் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மீண்டும் கோலிவுட்டில் சரிவர வாய்ப்புகள் கிடைக்க பெறவில்லை. சமீபத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருந்த 'ரெட்ரோ' (Retro) திரைப்படம் தான் இவரது 3வது திரைப்படம் என சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆனால், அடுத்ததாக ரஜினி உடன் கூலி, மீண்டும் நடிகர் விஜய் உடன் ஜனநாயகன் மற்றும் காஞ்சனா-4 என தொடர்ச்சியாக தமிழ் திரைப்படங்களில் நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த நிலையில்தான், உடற்பயிற்சி கூடத்திற்கு தனது விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரில் பூஜா ஹெக்டே வந்திறங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பூஜா ஹெக்டேவிடம் இருப்பது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 5-சீரிஸ் (5-Series) கார் ஆகும். 5-சீரிஸ் ஆனது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தாழ்வான உடலமைப்பை கொண்ட லக்சரி செடான் ரக கார் ஆகும். இதனை சில்வர் நிறத்தில் நடிகை பூஜா ஹெக்டே வைத்துள்ளார். இந்த சில்வர் நிறத்தை 'ஸ்பார்க்லிங் கூப்பர் கிரே' (Sparkling Cooper Grey) என பிஎம்டபிள்யூ நிறுவனம் அழைக்கிறது.
இது இல்லாமல், கார்பன் கருப்பு, பைடோனிக் ப்ளூ மெட்டாலிக் மற்றும் மினரல் வெள்ளை மெட்டாலிக் நிறத்திலும் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரை பெட்ரோல் என்ஜின் (Petrol Engine) மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) உடன் மட்டுமே பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்கிறது.
ஆனால், இந்திய மார்க்கெட்டில் 5-சீரிஸ் கார் அலுமினியம் சாடினேட்டட் மற்றும் டைட்டானியம் பிரோன்ஸ் என்கிற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், நடிகை பூஜா ஹெக்டே வைத்திருப்பது டைட்டானியம் பிரோன்ஸ் வேரியண்ட்டில் ஆகும். ஏனெனில், இது மட்டுமே ஸ்பார்க்லிங் கூப்பர் கிரே கலர் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த பிஎம்டபிள்யூ காரில் 2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐரோப்பிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் (Euro NCAP Crash Test) பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் ஆனது 5 நட்சத்திரங்களை பெற்ற காராகும். இந்த அளவிற்கு பாதுகாப்பான காரை தான் நடிகை பூஜா ஹெக்டே பயன்படுத்தி வருகிறார். சினிமா பிரபலங்கள் பலர் நிமிர்ந்த தோற்றம் கொண்ட லக்சரி எஸ்யூவி கார்களுக்கு மாறிவிட்ட நிலையில், நடிகை பூஜா ஹெக்டே மட்டும் இன்னமும் லக்சரி செடான் காரை பயன்படுத்துவதை பார்க்கும்போது ஆச்சிரியமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








