நடுரோட்டில் அதிகாரி மீது சேற்றை ஊற்றி எம்எல்ஏ கட்டி போட்டதற்கு காரணம் இதுதான்... அதிர்ச்சி வீடியோ
எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடுரோட்டில் அரசு அதிகாரி மீது சேற்றை ஊற்றி கட்டி போட்டனர். அதிர்ச்சிகரமான இந்த வீடியோ சமூக வலை தளங்களில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

வாகனங்களின் விரைவான போக்குவரத்திற்கு சாலைகளின் பங்கு இன்றியமையாதது. ஒரு நாட்டின் பொருளாதார ரீதியிலான வளர்ச்சியிலும் சாலைகள் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை சாலைகளின் நிலை மிக மோசமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்தியாவில் பல்வேறு முக்கியமான சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கின்றன.

ஊழல் காரணமாக இங்கு சாலைகள் தரமற்ற வகையில் அமைக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள், சில சமயங்களில் ஒரு மழைக்கு கூட தாக்குபிடிப்பதில்லை. மோசமான சாலைகள் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு இன்னல்களை உண்டாக்குகின்றன.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது மட்டுமே காரணம் என கூறி விட முடியாது. உண்மையில் இங்குள்ள மோசமான சாலைகளும் இதற்கு ஒரு காரணம்தான். குண்டும், குழியுமான சாலைகள் வாகன ஓட்டிகள் பலரின் உயிரை குடித்து கொண்டிருக்கின்றன.

மோசமான சாலைகள் காரணமாக இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,324. இந்த எண்ணிக்கை கடந்த 2017ம் ஆண்டில் 3,597ஆக அதிகரித்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மோசமான சாலைகள் ஏற்படுத்தும் பிரச்னையின் அளவை புரிந்து கொள்ள ஒரு சிறிய உதாரணம் போதுமானது.

இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு, நக்சல் தாக்குதல்கள் உள்பட தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 803. ஆனால் அதே ஆண்டு இந்தியாவில் மோசமான சாலைகளால் ஏற்பட்ட விபத்துக்களின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையோ 3,597. அதாவது தீவிரவாத்தால் உயிரிழந்தவர்களை விட மோசமான சாலைகளால் உயிரிழந்தவர்கள் அதிகம்.

இந்தியாவில் சில தேசிய நெடுஞ்சாலைகளும் கூட மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளன. இதற்கு மும்பை-கோவா நெடுஞ்சாலை ஒரு உதாரணம். மும்பை-கோவா நெடுஞ்சாலை எப்போதும் பிஸியாகவே இருக்கும். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் மும்பை-கோவா நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றன.

ஆனால் இங்கு ஆங்காங்கே சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சில இடங்களில் சாலை பலத்த சேதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து மந்தமாகி, வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் இந்த சாலை அபாயகரமானதாகவும் மாறி வருகிறது. குறிப்பாக பார்க்க கூடிய நிலை கணிசமாக குறைந்து விடும் இரவு நேரங்களில் விபத்து அபாயம் அதிகமாக உள்ளது.

இந்த சூழலில் மஹாரஷ்டிரா மாநிலம் கன்காவ்லி என்ற நகருக்கு அருகே ஆற்றுப்பாலம் ஒன்றின் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு செய்வதற்காக பிரகாஷ் ஷெடேகர் என்ற அரசு பொறியாளர் சமீபத்தில் அங்கு சென்றார். இவர் துணை இன்ஜினியர் ஆவார். இந்த தகவல் அறிந்ததும், கன்காவ்லி எம்எல்ஏ நிதிஷ் ரானே தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார்.

நிதிஷ் ரானே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். அத்துடன் இவர் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் நாராயண் ரானேவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நிதிஷ் ரானே ''ஸ்வாபிமான் சங்காட்டனா'' என்ற அரசு சாரா அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பை சேர்ந்தவர்களும் நிதிஷ் ரானாவுடன் வந்திருந்தனர்.

இந்த சூழலில் கன்காவ்லி பகுதியில் சாலைகள் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டிய நிதிஷ் ரானே, இன்ஜினியர் பிரகாஷ் ஷெடேகர் மீது சேற்றை ஊற்றும்படி தனது ஆதரவாளர்களிடம் கூறினார். இதன்பின் அவரது ஆதரவாளர்கள் சில வாளி சேற்றை இன்ஜினியர் பிரகாஷ் ஷெடேகர் மீது ஊற்றினர்.

அத்துடன் அங்குள்ள பாலத்தில் இன்ஜினியர் பிரகாஷ் ஷெடேகரை அவர்கள் கட்டியும் போட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் அங்கு குழுமியிருந்த சிலர் இந்த சம்பவங்கள் அனைத்தையும் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அதிர்ச்சியளிக்கும் அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நிதிஷ் ரானேவின் கோரிக்கை நியாயமானதுதான் என்றாலும், அவர் நடந்து கொண்ட விதம் தவறு என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவ்வளவு ஏன், முன்னாள் முதல்வரும், நிதிஷ் ரானேவின் தந்தையுமான நாராயண் ரானேவும் கூட தனது மகனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு நான் ஆதரவாக இருக்க மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்காக நிதிஷ் ரானே மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நாராயண் ரானே வலியுறுத்தியுள்ளார். கன்காவ்லி பகுதியில் உள்ள சாலைகள் தொடர் மழை காரணமாக கடந்த சில நாட்களாக மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளன. இதனால் இந்த பகுதியில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனினும் நிதிஷ் ரானே அதனை சரி செய்ய சட்டத்திற்கு உட்பட்ட வழியை தேர்வு செய்யாமல், மோசமாக நடந்து கொண்டுள்ளார். சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
ஆனால் நிதிஷ் ரானே இவ்வாறு நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு முறை மும்பையில் உயர் அதிகாரி ஒருவர் மீது நிதிஷ் ரானே மீனை தூக்கி வீசியுள்ளார். மும்பை மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக நடைபெற்ற கூட்டத்தில்தான் நிதிஷ் ரானே இவ்வாறு நடந்து கொண்டார்.

இதனிடையே தரமற்ற வகையில் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் 'கட்டிங்' சென்று விடுவதால், அதிகாரிகளும் மௌனமாக இருந்து விடுகின்றனர். மோசமான சாலைகளால் விபத்து மட்டுமின்றி, கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதில் சிக்கி கொண்டால் வாகன ஓட்டிகளின் விழி பிதுங்கி விடும். புதிதாக அமைக்கப்பட்ட சாலை விரைவில் பாழாவதற்கு மழை உள்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும், கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் மோசமாக இருப்பதும் ஒரு முக்கியமான காரணம். எனவே சாலை அமைக்க தரமான மெட்டீரியல்கள் பயன்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

சரியான திட்டமிடுதல் இல்லாத காரணத்தாலும் சாலைகள் பாழாகின்றன. ஒரு இடத்தில் புதிதாக சாலை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் உடனடியாக கேபிள் பதிப்பதற்காக தொலை தொடர்பு துறையினர் அதனை தோண்டுவார்கள். இதன்பின் பாதாள சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட பணிகளுக்காக சாலை தோண்டப்படும். இதன்பின் சாலை அப்படியே விடப்படுகிறது. எனவே சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.


Click it and Unblock the Notifications








