கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கிய உனக்கு, அதை எங்கே ஓட்டனும்னு தெரியல பார்த்தியா!! வைரல் வீடியோ
விலையுயர்ந்த கார்களை வாங்க வேண்டும் என்பது நிச்சயமாக நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும். குறிப்பாக, அதிவேகமாக செல்லக்கூடிய ஸ்போர்ட்ஸ் கார்கள் தான் அதிக பேரது விருப்பமாக உள்ளது. ஆனால், நம் ஊர் சாலைகளை பார்க்கும்போது அவ்வாறான ஆசைகளை குழி தோண்டி புதைத்துவிட வேண்டும். ஏனெனில், நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்னமும் நிறைய நகரங்களில் சாலைகள் மோசமாக தான் உள்ளன. அவ்வாறான ஒரு சாலையில் விலையுயர்ந்த அஸ்டன் மார்டின் (Aston Martin) கார் ஒன்று முன்னே செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எந்தவொரு நாட்டிற்கும் சாலை கட்டமைப்பு தான் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கக்கூடியதாக சாலைகள் உள்ளன. குறிப்பாக, நெடுஞ்சாலைகள் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாகவே, நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதிலும், அதிவேகமான பயணத்திற்காக நாடு முழுவதும் விரைவுச்சாலைகளை கொண்டுவருவதிலும் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இதன் விளைவாக, டெல்லி- மும்பை, சென்னை- பெங்களூர் போன்ற முக்கியமான விரைவுச்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன என்றாலும், புறநகர் சாலைகள் பல இடங்களில் இன்னும் தரமானதாக இல்லை. கிராமங்கள் அளவிற்கு கூட செல்ல வேண்டாம், நாட்டின் முக்கியமான மாநகரங்களிலேயே சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதை பரவலாக நிறைய இடங்களில் பார்க்க முடிகிறது.
அவ்வாறு, மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் மேடு, பள்ளமாக இருக்கும் சாலையில் விலைமிக்க அஸ்டன் மார்டின் வாண்டேஜ் (Vantage) சூப்பர்கார் ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது. காரின் அடிப்பகுதி மிகவும் தாழ்வாக இருந்ததாலும், சாலையின் ஒரு குறிப்பிட்ட பகுதி மேடாக இருந்தாலும், சரியாக அந்த இடத்தில் செல்லும்போது கார் முன்னே செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளது.

இத்தனைக்கும் இந்த சம்பவம் நடந்திருப்பது நகரத்திற்கு உள்ளே ஏதோ ஒரு மூலையில் கிடையாது; பிரதானமான நெடுஞ்சாலைக்கு அருகே சர்வீஸ் ரோட்டில் ஆகும். பொதுவாகவே, நெடுஞ்சாலையை காட்டிலும் சர்வீஸ் சாலை ஆனது சிறப்பானதாக இருக்க வேண்டும் என சொல்வார்கள். ஏனெனில், வாகனங்கள் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் நெடுஞ்சாலையில் நுழைவதற்காகவும்/ வெளியேறுவதற்காகவும் போடப்படுவதே சர்வீஸ் சாலைகள் ஆகும்.
ஆனால், இந்த பகுதியில் சர்வீஸ் சாலையே இந்த இலட்சனத்தில் உள்ளது. இத்தனைக்கும், இது பிரபலமான உணவகம் ஒன்றிற்கு வெளியே என கூறப்படுகிறது. அஸ்டன் மார்டின் வாண்டேஜ் காரின் அடிப்பகுதி மிகவும் தாழ்வானது தான். இருப்பினும், இது சாலையில் ஓட்டுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட கார் ஆகும். ஆக, அதற்கேற்ப சாலைகளும் தரமானதாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
இல்லையேல், இவ்வாறான விலையுயர்ந்த கார்களில் சிறிய பாதிப்பு ஏற்பட்டால் கூட அது கோடிக்கணக்கில் செலவை இழுத்துவிடுவதற்கு வாய்ப்புள்ளது. கொல்கத்தாவில் நடந்துள்ள இந்த சம்பவத்தில், சர்வீஸ் சாலையின் அந்த குறிப்பிட்ட மேடு பகுதியை பாதி கார் கூட கடக்கவில்லை. அதற்குள் காரின் அடிப்பகுதி சாலையில் அடிப்பட ஆரம்பித்துவிட்டது. அஸ்டன் மார்டின் வாண்டேஜ் ஆனது ஒரு ரியர்-வீல்-டிரைவ் கார் ஆகும். அதாவது, என்ஜின் ஆற்றல் ஆனது காரின் பின் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இதனால்தான், சாலையில் சிக்கிக் கொண்ட பின்பு காரின் பின் சக்கரங்கள் மட்டும் தனியாக சுழல்வதை இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம். பின் சக்கரங்கள் தரையில் இல்லாமல் காற்றில் இருந்ததால் இந்த அஸ்டன் மார்டின் காரால் முன்னோக்கி செல்ல முடியவில்லை. இவ்வாறான ஸ்போர்ட்ஸ் கார்கள் பெரும்பாலும் ரியர்-வீல்-டிரைவ் கார்களாக தான் இருக்கும். ஆனால், நாம் அதிகம் பயன்படுத்தும் மற்ற மாருதி, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களின் கார்கள் ஃப்ரண்ட்-வீல்-டிரைவ் கார்களாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பணம் இருந்தும் நிறைய பேர் இவ்வாறான காஸ்ட்லீயான ஸ்போர்ட்ஸ் கார்களை வாங்காததற்கு காரணம், இவ்வாறான நிகழ்வுகளே ஆகும். ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு பகுதிகளில் மட்டும் தான் இவ்வாறு சாலைகள் இருக்கும் என கூற முடியாது. ஆதலால், இந்தியாவின் சாலைகள் தரமானதாக மாறும் வரையில் நன்கு கிரவுண்ட் கிளியரென்ஸை கொண்ட ரோல்ஸ்-ராய்ஸ், மெக்லாரன் கார்களை வாங்குவது நல்லது.


Click it and Unblock the Notifications








