ரூ.2. கோடிக்கு ஏலம் போன போப் ஆண்டவரின் ஹார்லி டேவிட்சன் பைக்!
ஹார்லி டேவிட்சனின் 110வது ஆண்டு விழாவையொட்டி, கடந்த ஆண்டு போப் ஆண்டவருக்கு ஹார்லி டேவிட்சன் நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை பரிசாக வழங்கியது. இந்த மோட்டார்சைக்கிளை ரோம் ஏழைகள் அறக்கட்டளைக்கு போப் ஆண்டவர் நன்கொடையாக வழங்கினார்.
இந்த நிலையில், நல நிதி திரட்டுவதற்காக இந்த மோட்டார்சைக்கிள் சமீபத்தில் ஏலத்தில் விடப்பட்டது. பிரான்ஸ் தலைநகர், பாரிசில் நடந்த ஏலத்தில் போப் ஆண்டவரும் கலந்து கொண்டார். நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட பன்மடங்கு கூடுதல் விலைக்கு இந்த மோட்டார்சைக்கிள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பைக் மாடல்
ஹார்லி டேவிட்சனின் டைனா சூப்பர் கிளைடு மாடல்தான் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த பைக்கில் 1,585 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டது.

போப் ஆண்டவரின் கையெழுத்து
ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேங்கில் போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் கையெழுத்திட்டுள்ளார்.

அடிப்படை ஏலத் தொகை
12,000 யூரோ அடிப்படை ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏலத்தில் 2,41,500 யூரோ விலையில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனையானது. இந்திய மதிப்பில் ரூ.2.05 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

6 நிமிடங்களில் விற்றது
ஏலம் துவங்கிய 6 நிமிடங்களில் போப் ஆண்டவரின் மோட்டார்சைக்கிள் விற்பனையானது. தொலைபேசி வாயிலாக ஏலத்தில் பங்குபெற்றவர் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், ஏலத்தில் பங்கு கொண்டவர் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

கமிஷன்
இந்த ஏலத்தில் மோட்டார்சைக்கிளுக்கான ஏலத் தொகையை தவிர்த்து, 30,000 பவுண்ட்டுகளை ஏல நிறுவனத்துக்கு கமிஷனாக ஏலத்தில் வெற்றி பெற்றவர் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெதர் ஜாக்கெட்
ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளுடன் சேர்த்து, போப் ஆண்டவருக்கு ஹார்லி டேவிட்சன் வழங்கிய எக்ஸ்எல் அளவு லெதர் ஜாக்கெட்டும் ஏலத்தில் விடப்பட்டது. 57,500 பவுண்ட் விலையில் அந்த லெதர் ஜாக்கெட் விற்பனை செய்யப்பட்டது.

போப் ஆசிர்வாதம்
ஏலத்தில் கலந்து கொள்ள வந்த போப் ஆண்டவரிடம் அங்கு குவிந்திருந்த ஏராளமானோர் ஆசி பெற்றனர்.


Click it and Unblock the Notifications








